சிவகுமாரின் திறமைக்கு சவாலாக அமைந்த படம் "காரைக்கால் அம்மையார்.''
இதில் அவர் சிவனாகவும், ஸ்ரீவித்யா பார்வதியாகவும் நடித்தனர்.
காரைக்கால் அம்மையாராக வேடம் ஏற்றவர், கே.பி.சுந்தராம்பாள்,
`தகதகதக தகதக என ஆடவா...
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா...?
என்று உணர்ச்சியோடும், வேகத்தோடும் பாட, சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் துரிதகதியில் வேகமாகச் சுழன்று சுழன்று ஆடவேண்டும்.
64 வயதான கே.பி.சுந்தராம்பாள் 6 நிமிடப் பாடலை தமது வெண்கலக் குரலில் ஒரே மூச்சில் பாடி முடித்தார்.
ஸ்ரீவித்யா குழந்தைப் பருவத்தில் இருந்தே நடனத்தை முறையாக கற்றவர். பார்வதியாக நடனம் ஆட அவர் தயார் நிலையில் இருந்தார். ஆனால் சிவகுமாரால் அவருக்கு ஈடு கொடுத்து ஆடமுடியுமா?
கே.பி.சுந்தராம்பாளுக்கே இந்த சந்தேகம் ஏற்பட்டது.
"ஏ.பி.என்! இந்தப் பையன் டான்சரா? நன்றாக ஆடுவானா? பாட்டு ரொம்ப வேகமாக இருக்கிறதே. புதுப்பையனை நம்பி இருக்கிறாயே!'' என்று ஏ.பி.நாகராஜனிடம் கூறினார், கே.பி.சுந்தராம்பாள்.
"கவலைப்படாதீங்க! அவங்க ஆடும்போது, நீங்களும் நடிக்கத்தானே போறீங்க அப்ப பாருங்க!'' என்று தன்னம்பிக்கையோடு ஏ.பி.என். பதிலளித்தார்.
பிறகு சிவகுமாரை அழைத்தார். "நடனத்துக்கே அரசனான நடராஜன் வேடத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். ஐந்து வயதில் இருந்து 15 வருடமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாவை நீங்க பீட் பண்ணணும். ஒரு வாரம் டைம் தருகிறேன். நல்லா ஒத்திகை பாருங்க'' என்று கூறினார்.
நடனமேதை "பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், நடனத்தை அமைத்துக்கொடுக்க, அவரது உதவியாளர் விமலா, சிவகுமாருக்கு பயிற்சி அளித்தார்.
ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சி பெற்றார், சிவகுமார்.
ஆறு நிமிடப் பாடல் காட்சியை 7 நாட்கள் படமாக்கினார்கள். தினமும் 12 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது.
சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் போட்டி போட்டு ஆடினார்கள். சிவகுமார் தலையில் அணிந்துள்ள ஜடாமுடிக்குள் இருந்து, வியர்வை அருவிபோல் கொட்டும். கைகளில் இறுக்கிக் கட்டப்பட்ட நகைகள் ரத்த ஓட்டத்தை தடை செய்யும். காலில் சலங்கைகள் மோதி மோதி ரத்தம் வடியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆடினார்.
சிவகுமாரின் சிவதாண்டவத்தை பார்த்த படப்பிடிப்புக் குழுவினர் அசந்து போனார்கள். குறிப்பாக கே.பி.சுந்தராம்பாள், "நீ எப்படி ஆடுவாயோ என்று பயந்து போயிருந்தேன். என் வயிற்றில் பால் வார்த்து விட்டாய்!'' என்று வாழ்த்தினார்.
சிவகுமார் நடித்த "திருமலைத் தெய்வம்'' என்ற படம் 1973-ல் வெளிவந்தது.
இதில் சிவகுமார் திருமாலாகவும், ஸ்ரீவித்யா மகாலட்சுமியாகவும், ஏவி.எம்.ராஜன் நாரதராகவும் நடித்தனர்.
சிவகுமார் கடைசியாக நடித்த புராணப்படம் "கிருஷ்ணலீலா.'' 1977-ல் இப்படம் வெளிவந்தது.
இதில் சிவகுமாரும், ஜெயலலிதாவும் நடித்தனர். ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்திருந்தார்.
இந்தப்படம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"புராணப்படங்களில் கடைசியாக நான் பங்கு கொண்ட படம், `கிருஷ்ணலீலா.' படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் படம் முடிக்கப்படவில்லை. தயாரிப்பாளர்கள் மாறினார்கள். அதனால் படம் வெளிவர நீண்ட காலம் ஆயிற்று. கால இடைவெளியில் ரசனையும் மாறிவிட்டது.
ஏபி.என்., இறப்பதற்கு முன் எவ்வித குறையும் வைக்காமல் படத்தை முடித்துக் கொடுத்திருந்தார். பத்திரிகையாளர் காட்சிக்கு நான் ஏற்பாடு செய்து, படம் பற்றி முறையான விமர்சனம் வெளிவர வழி செய்தேன்.
என்ன செய்தும், சென்னையிலும், வெளியூர்களிலும் மூன்றாவது வாரம் ஓடவே படம் திணறியது. புராணப் படங்களின் சீசன் முடிந்து, அடுத்த சீசன் தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொண்டேன்.
இதன் பிறகும் புராணப் படங்களில் நடிக்க எனக்கு அழைப்புகள் வந்தன. அவை அனைத்தையும் நிராகரித்து விட்டேன். இனி புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று தீர்மானித்தேன். "கிருஷ்ணலீலா'' வியாபார ரீதியில் அடைந்த தோல்விதான், நான் இந்த முடிவை எடுத்ததற்கு காரணம்.''
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.