ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இளையராஜா எனும் வயதை வென்ற 'இளைஞரி'ன் வேகத்தைப் பார்க்கும்போது.
எண்பதுகளில் நாம் பார்த்த அதே வேகத்தோடு இந்த 2014லிலும் இசையைத் தந்து கொண்டிருக்கிறார் மனிதர். அதுவும் ஐந்து மொழிகளில்...
இந்த ஆண்டு மட்டும் அவரது இசையில் வரவிருக்கும் படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா... 20!
இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!
ஒரு ஊர்ல, நாடி துடிக்குதடி போன்றவை கடந்த ஆண்டு வந்திருக்க வேண்டியவை. அவற்றையும் சேர்த்தால் 22 படங்கள்.
பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும் 'உன் சமையல் அறையில்' படத்துக்கு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இசையமைக்கிறார் ராஜா. பாடல்களை மூன்று படங்களுக்கும் ஒரே மாதிரி போடாமல், மூன்றுக்கும் தனித் தனியாகவே இசையமைத்துத் தந்திருக்கிறார் இளையராஜா என்கிறார் பிரகாஷ் ராஜ்.
தெலுங்கில் பாபா சத்ய சாய் மற்றும் ருத்ரமாதேவி என இரண்டு மெகா படங்கள் ராஜாவின் இசையில் வரவிருக்கின்றன. மேலும் இரு படங்களுக்கு இசையமைக்க சம்மதித்துள்ளார், இவை 2015 கணக்கு!
எம்சும் பெண்குட்டியும், மார்த்தாண்ட வர்மா, காதா, சாம்ராஜ்யம் 2 போன்றவை ராஜாவின் இசையில் வரும் மலையாளப் படங்கள். சத்யன் அந்திக்காட்டின் அடுத்த படத்துக்கும் ராஜாதான் இசை.
கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் படம் தவிர, மைத்ரி மற்றும் இன்னொரு பெயரிடப்படாத படத்துக்கும் ராஜா இசையமைக்கிறார்.
தமிழில் ராஜராஜ சோழனின் போர்வாள், வேலு பிரபாகரனின் கலைஞனின் காதல், ஸ்ரீ ராமாநுஜர், மேகா, திறக்கப்படாத கதவு, மூங்கில் காடு, பாலா இயக்கும் படம், பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம், மகேந்திரனின் புதிய படம் போன்றவை ராஜாவின் இசையில் உருவாகி வருகின்றன.
இந்தியில் பால்கியின் புதிய படத்துக்கும் ராஜாதான் இசை என்பது நினைவிருக்கலாம்.