Wednesday, 19 March 2014

ஆரம்பிச்சிட்டாங்கப்பா... அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனாம்!

எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் நடிக்க வந்து, எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் என அறிவிக்கப்பட்டவர் ரஜினி. அன்றுமுதல் இன்றுவரை அந்த நாற்காலியில் அவர் ஒருவர்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.


இன்னொன்று சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு மட்டுமேயான ஒரு அடைமொழியாகவும் மாறிவிட்டது.


ஆனால் இடையில் பல நடிகர்கள் இரண்டு மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததும் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்ற பேச்சு கிளம்பிவிடும். இதை பல நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்களே கிளப்பிவிடுவதுண்டு.


எண்பதுகளின் ஆரம்பத்தில் கார்த்திக் - பிரபு, இறுதியில் ராமராஜன், ராஜ்கிரண், அடுத்து விஜய் - அஜீத், தனுஷ் - சிம்பு, சூர்யா - விக்ரம் இப்படி பலரும் இந்த சூப்பர் ஸ்டார் அடைமொழிக்குள் திணிக்க முயன்று கடைசியில்.. ம்ஹூம்.. சூப்பர் ஸ்டார் என்ற நிலை காலத்தை தாண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.


இந்த நிலையில் தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு (சினிமாவில் அப்படி சொல்லிக் கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!) நடிக்க வந்த சிவகார்த்திகேயன், வரிசையாக மூன்று ஹிட்கள் கொடுத்ததும், இப்போது தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என நினைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.


மான்கராத்தே ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அத்தனைப் பேருமே இதனை உணர்ந்ததோடு, வெளிப்படையாக இது ரொம்ப ஓவராச்சே என்று கமெண்டும் அடித்துவிட்டுச் சென்றனர்.


இந்த விழாவில் பேசிய அனைவருமே சிவ கார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரோ, ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டுப் பேசி, அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்தி என்றார்.


இந்த பேச்சுகளால் மந்திரித்துவிட்டதுபோலாகிவிட்ட சிவகார்த்திகேயன், தனது பேச்சில் இதற்கெல்லாம் மறுப்போ, சங்கடப்பட்ட உணர்வையோ காட்டிக் கொள்ளவே இல்லை. மாறாக ரொம்ப மகிழ்ச்சியாக இவற்றை ஏற்றுக் கொண்டார்.

ஆஞ்சநேயா படத்தின்போது அஜீத் கேட்டாரே, 'ஏன் நான் சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்படக் கூடாதா?' என்று. அந்தத் தொனியில்தான் அவர் பேச்சு அமைந்தது!

0 comments:

Post a Comment