தலைவா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சைவம்’. நாசர் மற்றும் பேபி சாரா(நிலா) முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.
இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் ”சைவம் திரைப்படத்தில் சாராவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சைவம் திரைப்படத்தில் எனது மிகப்பெரிய குறிக்கோள், ரசிகர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு நிலாவை மறந்துவிட்டு தமிழ் என்ற பெயரை தான் நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். சாரா தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
காரைக்குடியில் நடக்கும் ஊர்த்திருவிழாவிற்குச் செல்கிறது தமிழின் குடும்பம். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்படவேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்துவிட்டு தலைவா எடுத்தேன்.
தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல. காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ளமுடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம் தான்” என்று கூறினார்.
சைவம் என்று டைட்டில் வைத்துவிட்டு போஸ்டரில் சேவலின் படத்தை வைத்திருப்பதும், நாசர், சாரா என ‘தெய்வத்திருமகள்’ கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.