Friday, 14 March 2014

விஷாலின் நாசுக்கான பேச்சை நம்பும் நடிகர்!

விஷால்-விக்ராந்த் இருவருமே நல்ல நண்பர்கள். அதன் அடிப்படையில்தான் மார்க்கெட்டில் எழ முடியாமல் தடுமாறிக்கொண்டு வந்த அவருக்கு தனது பாண்டியநாடு படத்தில் நல்லதொரு வேடத்தை கொடுத்து கைதூக்கி விட்டார் விஷால்.


இதனால் நெகிழ்ந்து போன விக்ராந்த், இதே சினிமாவில் எனக்கு நெருக்கமான அண்ணன் இருந்து செய்யாத உதவியை விஷால் செய்து விட்டார் என்று அவரை பெருமையாக பேசினார்.


ஆனால், அதையடுத்து தான் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் விக்ராந்துக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை விஷால். அதனால் இதுகுறித்து அவரைக்கேட்டால், இந்த படத்தில் விக்ராந்துககு ஏற்ற வேடம் இல்லை. அதனால் கொடுக்கவில்லை. ஆனால், அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன் என்கிறார்.


அப்படி விக்ராந்த்தை வைத்து தயாரிக்கும் படத்தில் நான் இருக்க மாட்டேன். அந்த படத்தில் அவர் மட்டுமே நாயகன். அதனால், இந்த படத்தில் சின்ன கேரக்டரை கொடுத்து அவரது ரேஞ்சை இறக்க வேண்டாமே என்ற ஒரு எண்ணமும் மனதளவில் இருந்ததால் அவரை இந்த படத்தில் பயன்படுத்தவில்லை என்று கூறும் விஷால், விக்ராந்துக்காக வித்தியாசமான கதையை தேடிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்.

கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியாச்சு!

பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்களுக்கு மத்தியில் பசங்க நடித்த கோலிசோடா ரொம்ப பவர்புல்லாக அமைந்து விட்டது. கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியிருக்கிறது.


தொடர்ந்து 50 நாட்களாக கோலிசோடாவின் விற்பனை குறையவில்லை. 75 லட்சம் ரூபாய் தயாரிக்கப்பட்ட கோலிசோடா, இதுவரைக்கும் 7 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும், தயாரிப்பாளர் ஷேர் மட்டும் 5 கோடிக்கு மேல் கிடைத்திருப்பதாகவும் விநியோகஸ்தர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


படத்தை இயக்கிய விஜய் மில்டனை, விஜய்யிலிருந்து விஜய் சேதுபதி வரைக்கும் பாராட்டி, அடுத்து எனக்கொரு கதை ரெடி பண்ணுங்க என்று கேட்டிருக்கிறார்கள். படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா ஆகியோருக்கும் அடுத்த படங்கள் கிடைத்திருக்கிறது.


விஜய் மில்டன் தற்போது பாலாஜி சக்திவேலின் ரா...ரா...ரா...ராஜ்குமார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


இதே நிறுவனத்திற்கு தான் விஜய்மில்டன் அடுத்த படம் இயக்க இருக்கிறார். கோலிசோடாவை பார்க்க தவறவிட்டவர்கள் இப்போதும் சத்யம், எஸ்கேப், தேவி, அபிராமி, பிவிஆர், மாயாஜால் மால் தியேட்டர்களில் பார்க்கலாம்.

கோச்சடையான் - என்ன ரீலுவிட்டாலும் ஓடவே ஓடாது...?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் கோச்சடையான் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா நடந்ததையடுத்து அப்படத்தின் பாடல் மற்றும் டரைலரும் யு.டியூப்பில் வெளியிடப்பட்டது.


அதை இரண்டே நாளில் 12 லட்சம் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். அதைப்பார்த்து சில ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டபோதும், பலர் இதென்ன கார்ட்டூன் படம் மாதிரி உள்ளது என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார்களாம்.


ரசிகர்களின் இந்த கருத்து அப்படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை பெரும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அதையடுத்து ரசிகர்களை தெளிவுபடுத்தும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதையடுத்து செளந்தர்யா வெளியிட்டுள்ள செய்தியில், கோச்சடையானை கார்ட்டூன் படம் என்று நினைக்கக்கூடாது.


 இதுஒரு அனிமேஷன் படம். அவதார், டின் டின் போன்ற படங்களை எப்படி ரசித்தீர்களோ அதேபோன்ற மனநிலையுடன் ரசிக்க வேண்டும். மாறாக, ரஜினியின் முந்தைய படங்களை மனதில் கொண்டு இப்படத்தை பார்க்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும், கோச்சடையானில் நிஜ ரஜினியை திரையில் பார்க்க முடியாது. அனிமேஷன் வடிவில்தான் பார்க்க முடியும். ஆனால், எல்லா வகையிலும ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இப்படம் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார் செளந்தர்யா.

யோவ்வ்.. என்னையான்யா காப்பியடிச்ச...? பாலாவின் மிரட்டல் கேள்வி?

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.


 ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையில் அதாவது திடீர் திடீரென்று தூங்கி விழும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார் விஷால்.


இந்நிலையில், நேற்று நடந்த நான் சிகப்பு மனிதன் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தைப்பற்றி பலரும் ஜாலியாக பேசினார். அதிலும் எந்த விழாவிலும் அதிகமாக பேசாத டைரக்டர் பாலாவும் இந்த விழாவில் ஜாலியாக பேசினார். அவர் பேசும்போது, இந்த படத்தில் எனது நிஜ கேரக்டரையே காப்பியடித்து படமாக்கி விட்டனர் என்றார்.


 காரணம், நான் தினமும் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு செல்வேன். அதேமாதிரி,நள்ளிரவு படப்பிடிப்பு என்றால் அதிகாலையில்தான் செல்வேன். இதை நான் வேணுமென்று செய்யவில்லை. எல்லாத்துக்கும் காரணம் தூக்கம்தான்.



நல்லா தூங்கி விடுவேன். அதனால் இந்த படத்தில் விஷால் தூங்கிக் கொண்டேயிருப்பார் என்பதை கேள்விப்பட்டதும் என்னை காப்பியடித்துதான் இந்த கேரக்டரை டைரக்டர் திரு உருவாக்கி விட்டனர் என்று தோன்றியது என்று பாலா கிண்டலாக பேச, விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது.

தனுஷின் வேங்கைசாமி முடிவாகவில்லையாம்... காரணம் என்ன..?

தனுஷை நாயகனாக வைத்து பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறன் அதையடுத்து ஆடுகளம் என்ற படத்தை இரண்டாவதாக இயக்கினார்.


 இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதையடுத்து, சிம்புவைக்கொண்டு வடசென்னை என்றொரு படத்தை இயக்கயிருந்தார் வெற்றிமாறன். ஆனால் பின்னர் அந்த படம் பற்றிய தகவலே இல்லை.


சில ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது மீண்டும் அதே தனுசுடன் மூன்றாவதாகவும் இணைந்திருக்கிறார் வெற்றிமாறன். அப்படத்திற்கு வேங்கைசாமி என்ற தலைப்பு வைத்திருப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகின.


ஆனால், இப்போது படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நேரத்தில் அதுபற்றி விசாரித்தால் இன்னும் தலைப்பே வைக்கவில்லை என்கிறார்கள்.


சரி, படத்தில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராமே என்றால், அதுவும் முடிவாகவில்லை என்கிறார்கள். ஆனால், மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பார்த்திபன் நடிப்பது உறுதியாகியிருக்கிறதாம்.


இதற்கிடையே படத்திற்காக தலைப்பு பற்றிய ஆலோசனையும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறதாம்.

இவரு அரசியலுக்கு வந்து என்ன கிழிக்கப்போகிறார்....?

ரஜினி, அரசியலுக்கு வருவாரா...? மாட்டாரா...? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என்று கேரளாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் முருகதாஸ் குட்டி கணித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.


தமிழகத்தை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் எல்லோரும் சினிமாவில் இருந்து, பெரிய ஸ்டாராகி ஒருகட்டத்தில் மாநிலத்தையும் ஆட்சி செய்தார்கள், ஆட்சி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.


அந்தவகையில், தமிழகத்தில் கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த்திற்கும், அரசியலில் நுழையும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்லாமல் இருந்து வருகிறார். ஆயினும், தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டால் ரஜினி, அரசியலுக்கு வந்துவிட மாட்டாரா...?


அதுப்பற்றிய அறிவிப்பை வெளியிட மாட்டாரா என்ற ஏக்கம் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது. அதேசமயம் அரசியல் கட்சிகளோ, ரஜினி தங்களது கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாரா என்று அவரது வீட்டுக்கு வரிசையாக படையெடுக்க தொடங்கி விடுவர். அந்தவகையில், தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ரஜினியின் அரசியல் பற்றி இப்போது மீண்டும் பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது.


இந்நிலையில், லோக்சபா தேர்தலில், போட்டியிடும் அரசியல் கட்சித் தலைவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து, கேரள ஜோதிடர், முருகதாஸ் குட்டி முத்துப்போட்டு கணித்துள்ளாராம். அதில் மோடிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பவர், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ளார். அதேப்போல் நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் கணித்துள்ளார்.


அதில், ரஜினிகாந்த், அரசியலுக்கு வர மாட்டார். அவருக்கு போன ஜென்மத்தில், அவரது ராசியில் முனி இருந்தது. இந்த ஜென்மத்திலும் அது தொடர்வதால், அவர் ஆன்மிக பாதையில் மட்டுமே செல்வார் என்று கூறியுள்ளார்.

கானா பாலாவின் அடுத்த அதிரடி ஹிட் பாடல் இங்கே...!

கோலிவுட்டில் கானா பாலாவுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவர் பாடினால் அந்த பாடல் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டாகி விடுவதால், அவரை வைத்து ஒரு பாடலையாவது பாட வைத்து விட வேண்டும் என்று டைரக்டர்களும், படாதிபதிகளும் ஆசைப்படுகிறார்கள்.


அந்த வகையில், கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பிசியாக பாடிக்கொண்டிருக்கும் கானா பாலா, தனது முதல் படமான அட்டகத்தி படத்தில் நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா -என்று பாடியதைப்போன்று இப்போது சோக்கு சுந்தரம் என்ற படத்திற்காகவும் ஒரு கப்பல் பாடலை பாடியிருக்கிறார்.


இந்த படத்துக்காக இளைய கம்பன் எழுதிய, ''கப்பல் விடாதே கப்பல் விடாதே கட்டாந்தரையில் கப்பல் விடாதே, கவுந்து விடாதே கவுந்து விடாதே கன்னக்குழியில் கவுந்து விடாதே...'' என்பதுதான் அந்த பாடலின் வரிகள். இப்பாடலின் டியூனைக்கேட்டதும் குஷியாகி விட்டாராம் கானா பாலா. இந்த பாடல் இந்த 2014ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாகப்போகிறது என்று சொன்னவர், ஒரே டேக்கில் பாடியும் ஓ.கே செய்து விட்டாராம்.


இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர் கூறுகையில், இதற்கு முன்பு நான் வேடப்பன், ஒரு சந்திப்பில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். அந்த படங்களில் கானா பாடல் வைக்கவில்லை. ஆனால் இப்போது கானா பாடல் டிரன்டாகி விட்டதால் பாலாவை மனதில் கொண்டே இந்த பாடலை பாட வைத்தோம்.


அவர் பாடியதால் அந்த பாடலும் மெருகேறியிருப்பதோடு, படத்துக்கும் பெரிய பலமாகியிருக்கிறது என்று சொல்லும் அவர், கானா பாலா பாடிய இந்த பாடல் சிறப்பாக அமைந்ததால், அதிக செலவு பண்ணி கலர்புல்லாக அந்த பாடல் காட்சியையும் படமாக்கியிருக்கிறோம் என்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் அடுத்த ஹீரோ யார்... முடிவாகிவிட்டது!

தமிழில், விஜயகாந்தை நாயகனாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் 'ரமணா'. இதே படத்தை அதன்பிறகு தெலுங்கில் சிரஞ்சீவியைக்கொண்டு ஸ்டாலின் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.


அப்படமும் சூப்பர் ஹிட்டானது. இருப்பினும் அதன்பிறகு இந்திக்கு சென்று அதே படத்தை ரீமேக் செய்த முருகதாஸ், தெலுங்கில் படம் இயக்கும் சூழ்நிலை அமையவில்லை.


இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் தற்போதைய மாஸ் ஹீரோக்களில் ஒருவரான மகேஷ்பாபுவை வைத்து அடுத்து ஒரு ஆக்ஷ்ன் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் முருகதாசுக்கு ஏற்பட்டுள்ளதாம்.


தற்போது விஜய்யைக்கொண்டு தீரன் படத்தை விறுவிறுப்பாக இயக்கி வரும் அவர், இப்படத்தை முடித்ததும் தெலுங்கு படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.


ஆனால், இந்த படமும் ரமணா ரீமேக் மாதிரி, தமிழில் ஏற்கனவே அவர் இயக்கிய படங்களின் ரீமேக்கா அல்லது மகேஷ்பாபுவுக்காக தனி கதை ரெடி பண்ணுகிறாரா? என்பது பற்றிய முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லையாம்.


விஜய்யை இயக்கும் படம் வெளியான பிறகுதான் அதுபற்றி முடிவெடுக்க உள்ளாராம்.

மருதநாயகமும் - கமலின் அதிரடி முடிவும்!



நம்ம கமல்ஹாசன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கைவிட்டஒரு படம் மருதநாயகம் அந்த படத்தை மீண்டும் அவர் இயக்க போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற ஒரு போர் வீரரைப் பற்றிய சரித்திரப் படம் தான் இந்த மருதநாயகம்.


பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் கையால் தொடங்கி வைக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. கோடம்பாக்கத்தின் அணைத்து முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட பெரிய திரையுலக விழாவாக இருந்தது அன்றைய தேதிக்கு இந்திய ரூபாய் 50 கோடி தேவைப்படுவதாக கமல் அறிவித்திருந்தார்.. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த படப்பிடிப்பு நிதிச் சிக்கலில் விழ திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


படத்துக்கு முதலீடு செய்வதாகக் கூறிய வெளிநாட்டவர்கள், நம்பிக்கையின்றி கைவிரித்துவிட்டதாகவும், தானே அந்தப் படத்தை தயாரிக்கும் அளவு சூழல் உருவானதும் மீண்டும் படத்தைத் தொடங்குவேன் என்றும் கமல் அறிவிக்க அத்தோடு அந்த திரைப்படம் செய்திகளில் அடிபடுவது குறைந்தது, இருந்த போதிலும் சில பல சமயங்களில் கமல் ஏதாவது அந்த படத்தை பற்றி அங்கும் இங்குமாக சொல்லி கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது. தற்போது ‘விஸ்வரூபம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார்.


விஸ்வரூபம் வெற்றியும், வெளிநாடுகளில் அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பும் மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை அவருக்கு உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்களாம். எனவே, லிங்குசாமி படம் முடிந்த பிறகு இந்த மருதநாயகத்தை மீண்டும் கையிலெடுப்பார் கமல் என்கிறார்கள்.


இந்த செய்தி உண்மையா என்பது போக போக தெரியும்…ஆனால் கமலஹாசன் இயக்கத்தில் அது போன்ற ஒரு சரித்திர படம் பார்க்க வேண்டும் என்பது உங்களை போல அனைத்து கோடம்பாக்க ரசிகர்களுக்கும் நிச்சயம் இருக்கும் 

காப்பி அடித்தேனா? உத்தம வில்லன் பற்றி கமல் பதில்!

பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வெளிவந்தவை என்ற சிறப்பு பெற்றவை கமல்ஹாசனின் படங்கள். ஆனால் சமீபகாலமாக ஒரே ஒரு போஸ்டர் வெளியிட்டதற்கே பலவித விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார் கமல்ஹாசன்.


’தெய்யம்’ எனப்படும் கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைஞரைப் போன்று முகத்தில் ஓவியம் வரைந்து கமல்ஹாசன் வெளியிட்டிருந்த போஸ்டர் பிரெஞ்சு ஃபோட்டோகிராஃபர் ஒருவரின் ஃபோட்டோவிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று எழுந்த விமர்சனங்களுக்கு, சமீபத்தில் மும்பையில் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் பதிலளித்திருக்கிறார் கமல்.



இதுகுறித்து பேசிய கமல் “தெய்யம் என்பது 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கலை. இந்த கலையில் இயங்கிவரும் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவரால் இந்த ஓவியம் என் முகத்தில் 4 மணிநேரமாக வரையப்பட்டது. இரு காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒரே திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் ஏக் துஜே கே லியே’ திரைப்படத்தின் போஸ்டரைப் பார்த்து காப்பி அடித்தார்கள் என்று சொல்லிவிடமுடியுமா?



தெய்யம் என்பது ஒவ்வொரு தலைமுறையினரிடமிருந்தும் அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்துவரப்படும் பழமை வாய்ந்த கலை” என்று கூறியுள்ளார். உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிகர் ஜெயராமும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

உத்தமவில்லனுக்கு 60 நாட்கள் பிறகு திரிஷ்யம்! கமலின் ரகசிய திட்டம்!

கடந்த இரண்டு வருடங்களாக விஷ்வரூபம் திரைப்படத்தின் பணிகளில் மூழ்கியிருந்த கமல்ஹாசன் தற்பொழுது விஷ்வரூபம் - 2 படத்தின் பணிகளையும் முற்றிலும் நிறைவு செய்துவிட்டு அடுத்த படமான உத்தமவில்லன் திரைப்படத்தின் நடித்துவருகிறார்.


கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கிவரும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் கமல்ஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெங்களூருவில் துவங்கின.


கமலின் குருவான கே.பாலச்சந்தரின் அறிவுரையின் பேரில் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்துவிடவேண்டும் என்று உறுதியெடுத்திருக்கும் கமல்ஹாசன் உத்தமவில்லன் திரைப்படத்திற்கு 60 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளாராம்.



உத்தமவில்லன் திரைப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மெஹா ஹிட்டான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஜூன் மாதம் துவங்கவுள்ளன.



உத்தமவில்லன் திரைப்படத்தில் விஷ்வரூபம் நாயகிகளான ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் மரியான் நாயகியான பார்வதி மேனன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.