Saturday, 1 March 2014

இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாக்கி - ஷங்கர்!

 இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாக்கி. கோடை விடுமுறைக்கு 'ஐ' வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு.


விக்ரம், ஏமி ஜாக்சன், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிக்க, ஷங்கர் இயக்கி வரும் படம் 'ஐ'. பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.


இப்படத்திற்காக பல்வேறு வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருவதால், படம் எப்போது தயாராகும், எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியாகவில்லை.


இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில், "A முதல் Y வரை 'ஐ' திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி முடிந்துவிட்டது. விக்ரம் மற்றும் விட்டா தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகள் 25ம் தேதியோடு முடிந்துவிட்டது.


இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் ஏமி ஜாக்சனை வைத்து படமாக்கப்பட இருக்கிறது. எடிட்டிங், டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


அனைவருமே படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள். அனைத்தும் நல்லவிதமாக அமையும் பட்சத்தில் 'ஐ' கோடை விடுமுறைக்கு வெளியாகலாம். பெரிய பட்ஜெட் படம் என்பதால், பட வெளியீடு தயாரிப்பாளரின் திட்டமிடுதலிலும் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். 

காவியத் தலைவன்: ரசிகர்கள் பார்க்காத உலகம்!

 "இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடினாங்க. அப்போ தமிழ் சினிமாவோட சிறந்த படங்களோட பேனர்களை அங்கங்கே வச்சிருந்தாங்க. அதுல 'வெயில்', 'அங்காடி தெரு' பேனர் இருந்துச்சு. அந்த வரிசையில் என்னோட 'காவியத் தலைவன்' படமும் கண்டிப்பாக இடம்பெறும்" என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

'வெயில், 'அங்காடித் தெரு’ படங்களின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையைப் பேசியவர், 'அரவான்’ மூலம் 18ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றார். தற்போது 'காவியத் தலைவன்' மூலம் நம்மை எங்கே அழைத்து செல்ல இருக்கிறார் என்று உரையாடியதிலிருந்து..

'காவியத் தலைவன்' மூலம் எங்களை எந்த உலகிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறீர்கள்?

இது ஒரு பிரீயட் பிலிம். சுதந்திரத்திற்கு முன்பு நிறைய நாடக கம்பெனிகள் இருந்தன. அங்குதான் எம்.ஆர். ராதா, காக்கா ராதாகிருஷ்ணன், சிவாஜி எல்லாருமே பயிற்சி எடுத்த பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட நாடக கம்பெனிகள் இருந்தன. அந்த நாடக கம்பெனிகளைப் பற்றிய படம் தான் 'காவியத் தலைவன்'

கிட்டப்பா - கே.பி.சுந்தரம்பாள் கதையைத்தான் படமாக எடுக்கிறீர்கள் என்ற செய்தி உலா வருகிறதே?

கிட்டப்பா - சுந்தரம்பாள் கதை மிகவும் சுவாரசியமானது. அமர்த்துவம் வாய்ந்த ஒரு பெரிய காதல் கதை. கே.பி. சுந்தரம்பாள் கிட்டப்பாவிற்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தீர்கள் என்றால் தெரியும். பயங்கர காதல் ரசம் பொங்க, அன்பு பொங்க இருக்கும். பெரிய இன்ஸ்பிரேஷன் அது.

எனக்கு சுயசரிதை எடுப்பதில் விருப்பம் கிடையாது. சுயசரிதை எடுத்தால் கிட்டப்பா மாதிரி ஒருவரைக் கொண்டுவரணும், கே.பி. சுந்தரம்பாள் மாதிரி ஒருவரைக் கொண்டுவரணும். கிட்டப்பாவின் சந்ததியினர் இன்னும் இருக்காங்க. அவங்க எதுவும் மனசு வருத்தப்படக் கூடாது. அவங்க கூட போன் பண்ணி கேட்டாங்க. நீங்க எங்க தாத்தாவோட கதையைத்தான் எடுக்கறீங்களான்னு. சுயசரிதை எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இது நாடக வாழ்க்கையில் இருக்கிற நடிகர்கள் சம்பந்தமான கதைதான். தனியா ஒரு ரெண்டு பேரோட கதை கிடையாது.

நாடக கம்பெனிகளோட கதையைப் படமாக எடுக்கத் தோன்றியது எப்படி?

ஜெயமோகனோடு திருநெல்வேலியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். இரவு ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். அப்போ ஜெயமோகன், அவ்வை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ன்னு ஒரு புத்தகம் இருக்கிறதா சொன்னார். அதற்கு பிறகு நாடகம் சம்பந்தமா நிறைய பேச்சு வந்தது. எப்படியெல்லாம் நாடகம் நடக்கும், எப்படியெல்லாம் தயாராவாங்க அதுல இருக்கிற சுவாரசியமான சம்பவங்கள் இப்படி பேசிக்கொண்டே இருந்தோம்.

இன்றைக்கு இருக்குற நாடக வாழ்க்கைக்கும், அன்றைக்கு இருக்குற நாடக வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள். அன்றைக்கு ஒரு குழுவா தங்கி பயிற்சி எடுத்துக்கிறது. சின்ன வயசிலேயே கொண்டுவந்து நாடகத்துல நடிக்கிறதுக்காக விட்டுறது. அப்புறமா, கட்டபொம்மனோட கூத்தைப் பார்த்துதான் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து நாடக கம்பெனில சேர்ந்திருக்கிறார். அவரோட பக்கத்து வீட்டுக்காரர் தான் காக்கா ராதாகிருஷ்ணன். எம்.ஆர். ராதா குழுவில் எல்லாம் சிவாஜி நடித்திருக்கிறார். இப்படி நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு.

ராஜ பார்ட், கள்ள பார்ட், ஸ்த்ரீ பார்ட் அப்படினு அவங்களோட வாழ்க்கையே வேறு ஒரு உலகம். குருகுலம் மாதிரியான ஒரு வாழ்க்கை. ஜெயமோகன் பேசிவிட்டுப் போய்விட்டார். உடனே, நான் பழைய நாடகங்கள் சம்பந்தமா நம்ம கிட்ட என்ன தரவுகள் இருக்குன்னு தேடினேன். நிறைய புத்தகங்கள் கெடச்சது. நூலகங்களில் நிறைய தரவுகள் கிடைச்சது.

இவ்வளவு சுவாரசியமா இருக்கே. இதை ஏன் படமா பண்ணக் கூடாது, ரொம்ப கலர்ஃபுல்லா வரும்னு நினைச்சேன். நிறைய கலர் கலரான துணிகள், மேக்கப்புகள், விதவிதமான கெட்டப்புகள்னு ஒரு பெரிய உலகம் அது. அந்த உலகம் தமிழ் சினிமால வரல. மக்களுக்கும் இலக்கியத்திற்கும் ஒரு பாலமா நாடகங்கள் இருந்திருக்கு. நாடகக் கலைஞர்தான் நேரடியா மக்கள்கிட்ட பேசியிருக்கார். அந்தக் காலத்தில் மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு நாடகம் மட்டும்தான். கூட்டம் கூட்டமா போய் நாடகம் பாத்துருக்காங்க. இப்படி நிறைய தரவுகளை வைச்சு எடுத்திருக்கும் படம் தான் 'காவியத் தலைவன்'

படப்பிடிப்பு தளங்களுக்கு நிறைய மெனக்கெடல்கள் இருந்திருக்குமே?

ரொம்ப கஷ்டப்படல. மதுரை, காரைக்குடி இப்படி தென் மாவட்டங்களைச் சுற்றிதான் நாடகம் போட்டுருக்காங்க. எங்களுக்குக் காரைக்குடி ரொம்ப வசதியா இருந்தது. நாடகக் கொட்டகை செட் போட்டு எடுக்க வேண்டிய இடம். ஓலைகளால் செய்யப்பட்ட கொட்டகைதான். அதனால படப்பிடிப்பு தளத்திற்காக மெனக்கெடல் இல்ல. ஆனா காஸ்டியூம்ஸ், மேக்கப், மொழி, நாடக வார்த்தைகள் இதுக்குதான் ரொம்ப மெனக்கெடல் இருந்தது.

இந்த மாதிரியான கதைக்கு இசை முக்கியமான பங்காக இருக்குமே?

கர்நாடக இசையும், நாட்டுப்புற இசையும் கலந்த படம். 'காவியத் தலைவன்' ஒரு மியூசிக்கல் படம்னுகூட சொல்லலாம். 8 பாடல்கள் இருக்கு. சரியான இசையமைப்பாளர் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். எப்போது கனவு காண்றது பெருசா கனவு கண்டுற வேண்டியதுதானே. ரஹ்மான் சார் இருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சேன். அவரை எப்படி சந்திக்கிறதுனு எனக்குத் தெரியல.

சித்தார்த் கிட்ட ரஹ்மான் சார் இருந்தா எப்படியிருக்கும்னு சொன்னேன். அவர்தான் ட்ரை பண்ணி ரஹ்மான் சாரை சந்திக்க ஏற்பாடு பண்ணினார். நான் போய் கதை சொன்னேன். கதையை கேட்டவுடனே அவருக்கு பயங்கர சந்தோஷமாயிடுச்சு. ஒத்துக்கிட்டார். இசை ஒரு புதிய தன்மையோட இருக்கும்.

ப்ரீயட் படங்கள் மீது அப்படி என்ன காதல்?

பார்க்காத உலகத்தை நீங்க ப்ரீயட் படங்கள்ல பார்க்க முடியும். டிஸ்கோத்தே, டாஸ்மார்க் பார், போன் உரையாடல்கள், பேஸ்ஃபுக், ட்விட்டர் இப்படி இப்போ இருக்குற உலகத்துல நிறைய விஷயங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அது நம்ம பார்க்குற படங்கள்ல பிரதிபலிச்சுகிட்டே இருக்கு. வித்தியாசமே இல்லாம போச்சு.

புதுசா, வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கணும்னு எனக்கு ஆசை. எல்லாருமே பார்க்குற விஷயங்களைக் காட்டுறதைவிட, புதுசா, பல விதமான படங்களையும் கொடுக்கணும்னு ஆசை. என்னோட படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு விதத்தில் பார்ப்பவர்களுக்குப் புதுசாயிருக்கும். ரெண்டு வருஷத்திற்கு ஒரு தடவை படம் இயக்குறேன், நாலு வருஷத்திற்கு ஒரு தடவை படம் ரிலீஸாகிறது. 2002ல என்னோட முதல் படம் வந்தது, திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் ஒடிவிட்டன. இதுவரைக்கும் 5 படங்கள் பண்ணியிருக்கேன். அவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கிறப்போ ரசிகர்களுக்கு புதுசாதான் கொடுக்கணும்னு ஆசைப்படறேன். அதுக்கு மெனக்கெடல், கஷ்டம் எல்லாமே அதிகம்தான்.

'அங்காடி தெரு' படத்தோட தாக்கம் இன்னும் இருக்கே?

எல்லாருமே 'அரவான்' படத்தை மறந்துட்டாங்க. 'அங்காடி தெரு' படத்தை தான் ஞாபகம் வச்சிருக்காங்க. நான் எங்கே போனாலும், 'அங்காடி தெரு' படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான ஜவுளிக் கடைகளுக்கு போறப்போ 'அங்காடி தெரு' படம்தான் ஞாபகம் வருதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் உண்மையைப் பதிவுசெய்யும் சுதந்திரம் குறும்படங்களுக்கு மட்டும்தான் இருக்கிறதுன்னு சொல்றீங்களே… ஏன் திரைப்படத்தில் இது சாத்தியமில்லை?

திரைப்படங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. கமர்ஷியலா நல்ல போகணும் அப்படிங்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனா, குறும்படங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லை. அழகா பண்ணிருந்தா மட்டும் போதும்.

கடைக்கோடி ரசிகன் வரைக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டுபோகணும் என்றால், அதை தேன் தடவி தான் சொல்ல வேண்டியதிருக்கு. அந்த மாதிரி தேன் தடவி சொன்னாலே இருட்டு உலகம் அப்படிங்குறது போயிரும். உண்மையான விஷயங்கள் என்ன அப்படிங்கிறதை மக்கள்கிட்ட சேர்க்க முடியாமலே போய்விடுகிறது.

ஒரு குறும்படத்தில் 'அங்காடி தெரு' படத்தை உலக தரத்தில் எடுத்திருக்க முடியும். அதற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. நம் கண் முன்னாடி நடந்த மிகப் பெரிய கொடூரம் வந்து ஈழத்தோட போர். நம்மோட சந்ததியினர், இனம் அழித்து ஒழிக்கப்பட்டது. அதற்கான எந்த ஒரு பதிவும் நம்மிடம் இல்லை. அதை ஒரு குறும்படமாக, அந்த வலியை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அந்த நாட்டின் மீது போர்க் குற்றம் சுமத்த ஒரு குறும்படத்தால் முடியும்.

உதவி இயக்குநர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

இலக்கியம் சார்ந்த அறிவு இருக்கணும்னு நினைக்கிறேன். நான் ரொம்ப இலக்கியம் படிக்கிற ஆள். எனக்கு விருப்பம், ஆசைகள் இருக்கிறது. இதையெல்லாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய, விவாதிக்கக்கூடிய நபர்களைத்தான் நான் உதவி இயக்குநராக சேத்துக்கறே. இலக்கிய ரசனை இருக்கிறதா, எழுத்து ஆர்வம் இருக்கிறதா என்பதுதான் முதல் தகுதி. அடுத்ததா தொழில்நுட்ப அறிவு இருக்கணும். கேமிராவைப் பற்றி தெரியணும். கம்ப்யூட்டர் சம்பந்தமான அறிவு இருக்கணும்.

இப்போ காமெடி படங்கள் தான் தொடர்ச்சியாக ஹிட்டாகுது. இதை எப்படி பாக்குறீங்க?

சுவாரசியமான படங்கள் எப்போதும் ஹிட்டாகும். காமெடி படம், காமெடி இல்லாத படம் அப்படிங்கிற விதிவிலக்கு எப்போதுமே இல்லை. வரிசையாக காமெடி படங்கள் எடுத்த இயக்குநரின் கடைசி படம் மாபெரும் தோல்வி. இப்போ காமெடி படங்கள் பாத்தீங்கன்னா, கதை இல்லாததினால் ஓடல. எப்போதுமே சுவாரசியமான படங்கள் மக்கள் கிட்ட ரீச்சாகும். 'கோலி சோடா'னு ஒரு படம். சுவாரசியமான படம். மக்கள் கிட்ட எப்படி ரீச்சாச்சு பாத்தீங்களா. அதை யாருமே தடுத்து நிறுத்த முடியாது. 

'கோச்சடையானும்' - செளந்தர்யாவும்!

 'கோச்சடையான்' திரைப்படம் வெளியாகும் தேதி, இசை வெளியீட்டு விழா முடிந்த உடன் முடிவு செய்யப்படும் என்று இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.


ரஜினி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. அமிதாப் பச்சன், இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் ஷங்கர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


'கோச்சடையான்' படத்திற்காக கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், 'கோச்சடையான் மொபைல்ஸ்’ என்ற பெயரில் மொபைல் போன்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. 'கோச்சடையான் மொபைல்' போனை இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.


இப்பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பேசியது, "'கோச்சடையான்' படத்தின் இசை மார்ச் 9ம் தேதி கண்டிப்பாக வெளியாக இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகே, படம் வெளியாகும் தேதி முடிவு செய்யப்படும்.


என்னோட அப்பா இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக நடந்து கொண்டது என்னை வியக்கவைத்தது. அதுமட்டுமன்றி, தீபிகா படுகோனுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் சங்கடப்பட்டார்.


'கோச்சடையான்' படத்தின் பட்ஜெட் மிகவும் பெரியது. இப்படத்தில் நாகேஷை நவீன முறையில் கொண்டு வந்து இருக்கிறோம். கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்" என்று கூறினார். 

'காவியத்தலைவன்' படத்துக்காக ஹாலிவுட் வாய்ப்பை விட்டேன் : ஏ.ஆர்.ரஹ்மான்

 'காவியத்தலைவன்' படம் இசையமைக்க என்னிடம் வந்ததால், ஹாலிவுட் படத்தினை விட்டு விட்டேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'காவியத்தலைவன்'. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். சசிகாந்த் மற்றும் வருண்மணியன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

படக்குழுவினர் அனைவருமே இப்படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்கள். இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது "எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் வசந்தபாலன் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கார். நானும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

நான் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணியில் இருக்கும் போது, ஒரு ஹாலிவுட் படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருந்தேன். ரொம்ப டார்க்கான படம் அது. இந்த படம் வந்த உடனே, ஹாலிவுட் படத்தை வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கிறது. நாடகம் சம்பந்தமான படம் என்பதால் ஒவ்வொரு பாட்டிலும் 8 பாட்டு இருக்கும். சின்ன சின்ன பாடல் எல்லாம் சேர்த்தால் படத்தில் 20 பாடல்கள் இருக்கும். 1930ல் நடக்கும் கதை என்பதால், எந்த மாதிரி பாடல்கள் பண்ணினால் மக்கள் கேட்பார்கள், அப்புறம் எந்த ராகம் உபயோகிக்கலாம் என்று நிறைய யோசித்து செய்திருக்கிறேன்.

அக்காலத்தின் இசைக்கு கொஞ்சமாவது ஒட்டுற மாதிரி இருக்கணும். இப்படம் ஒரு குழு முயற்சி தான். இப்படத்தில் பணியாற்றியதற்காக பெருமையடைகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே." என்று கூறினார். 

‘நோ’ சொன்ன சிம்பு! - சொல்ல மறுக்கும் திரிஷா!


‘நோ’ சொன்ன சிம்பு! - சொல்ல மறுக்கும் திரிஷா!


பிப்ரவரி மாதத்தின் காதலர் தினத்தை காதல் ஜோடிகள் வெகு சிறப்பாக கொண்டாடினர். ஆனால் திரையுலத்தைச் சேர்ந்த சில காதல் ஜோடிகளுக்குத் தான் இந்த வருட காதலர் தினம் அவ்வளவாக மகிழ்ச்சி தரக்கூடிய தினமாக அமையவில்லை.



சமீபத்தில் கைகோர்த்த காதல் ஜோடிகளான சிம்புவும் ஹன்ஸிகாவும் இந்த காதலர் தினத்தை எப்படி கொண்டாடப்போகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த திரையுலகமும் உற்று கவனிக்க எந்த கொண்டாட்டமும் இல்லாமல் சொதப்பியது.


பேட்டிகளில் சிம்புவைப் பற்றிய கேள்விகளை ஹன்ஸிகா தவிர்த்துவர, சிம்புவோ சமீபத்தில் எங்கள் காதல் முறிந்துவிட்டது என்று அறிக்கையே விட்டுவிட்டார். “காதல் என்ற சீரியஸான உறவுமுறைக்கு ஹன்ஸிகா ஏற்றவரல்ல. அவர் இன்னும் வளரனும்” என்று சிம்பு விட்ட அறிக்கையில் திரையுலகமே ஆடிவிட்டது.



சிம்பு ஹன்ஸிகாவின் காதல் முறிந்த கதை திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட, இந்த பரபரப்பை அப்படியே தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் காஜல் அகர்வால். காதலுக்கும் நேரமில்லை, கல்யாணத்துக்கும் நேரமில்லை என்று பேட்டிகளைக் கொடுத்தவண்ணம் இருந்தவர், திடீரென தனது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் முடித்துவைத்து பல கோவில்களுக்கும் சென்று வந்தார்.


தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்துவிட்டு அடுத்த ரவுண்டுக்காக காத்திருக்கும் காஜல், காதலில் சிக்காமல் இருக்கிறாரே என பலரும் சிலாகித்த சமயத்தில், காஜல் அவர் பாய்-ஃபிரண்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகிவிட்டன. மும்பையைச் சேர்ந்த டிசைனிங் நிறுவன தொழிலதிபருடன் காஜல் காதல் வயப்பட்டிருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகிவிட்டதால் கூடிய விரைவில் அவருக்கும் திருமணம் நடந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




திரையுலகில் தனது 10-வது ஆண்டைக் கடந்து கொண்டிருக்கும் த்ரிஷா கேமரா முன்பு நின்றதுமே, அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ’ரம் (ரம்பா ஊர்வசி மேனகா) ’ திரைப்படத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறாராம். பலவித ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருப்பதாகவும், எத்தனையோ படங்களில் நடித்துவிட்டாலும் தற்போது தான் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடித்துக்கொண்டிருப்பதாகவும் மகிழ்ச்சியில் பூரிக்கிறார் த்ரிஷா.


வழக்கம் போலவே ‘உங்களுக்கும் ராணாவுக்கும் இடையில் இருப்பது காதலா? நட்பா? என்ற கேள்விக்கு ‘சிலவற்றைப் பற்றி பேச சரியான நேரம் வரவேண்டும். அந்த சமயத்தில் கண்டிப்பாக பேசுவேன். உங்களை விட்டால் வேறு யாரிடம் பேசப்போகிறேன்’ என தொடர் புள்ளிகளை வைக்கிறார் த்ரிஷா. 

வல்லினம் -கிரிக்கெட்டுக்கு எதிரான படமா?(விமர்சனம்)!

வல்லினம் - விமர்சனம்

பலருக்கும் வாழ்க்கை விளையாட்டாக இருக்கிறது. ஆனால் விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் வல்லவர் தான் படத்தின் நாயகன். எல்லா விளையாட்டுகளிலும் சுவாரஸ்யம் இருக்கிறது. கூடைப்பந்து விளையாட்டில் உள்ள சுவாரஸ்யங்களை அதே அளவோடு அதில் கொஞ்சம் சினிமாவையும் கலந்து அதிரடி ஆட்ட நாயகனாக விளங்குகிறார் இயக்குனர் அறிவழகன். இது கிரிக்கெட்டுக்கு எதிரான படமா? என சில சர்ச்சைகளையும் இயக்குனர் சம்பாதிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது!


கூடைப்பந்து விளையாட்டு வீரன் நகுல். தன் நண்பனான கிருஷ்ணாவும் கூடைப்பந்து வீரர். திருச்சி கல்லூரியில் படிக்கும் இவர்களுக்கு, படிப்பை விட அதிக கவனம் விளையாட்டில் தான். விளையாட்டு நேரத்தில் விபத்து ஏற்பட, கீழே விழுந்த நகுலின் நண்பன் கிருஷ்ணா இறந்துவிடுகிறார். அவருக்கு முன்பே இதயம் பலவீனமாய் இருந்ததும் தெரியவருகிறது. நண்பனின் நினைவில் இருந்து மீள, அன்றுமுதல் கூடைபந்தை தொடுவதில்லை என சபதமெடுத்து, சென்னை கல்லூரியில் சேர்கிறார் நகுல்.


சென்னை கல்லூரியில் புது நண்பன் கிடைக்க, அவரும் கூடைப்பந்து வீரர் என நாயகன் நகுலுக்கு தெரியவருகிறது. கல்லூரியில் கிரிக்கெட் டீமுக்கும் கூடைப்பந்து டீமுக்கும் தகராறு ஏற்படுகிறது. மாணவர்களுக்குள் இருக்கும் அரசியல் கல்லூரி நிர்வாகம் வரை தெரியவருகிறது. தொடர்ந்து மாநில அளவில் சாம்பியன்ஷிப் வாங்குவது கிரிக்கெட் அணி தான் என்பதால், மற்ற விளையாட்டு மைதானங்களை மோத்தாமாக கிரிக்கெட் மைதானமாக மாற்றி அமைக்க முடிவுசெய்கிறது கல்லூரி நிர்வாகம்.


தான் நேசிக்கும் விளையட்டின் தன்மானத்தைக் காப்பாற்ற மீண்டும் கூடைப்பந்தைக் கையில் எடுக்கிறார் நாயகன் நகுல். வால் ஏந்திய வீரனைப்போல பந்தைக் கொண்டு அதகளம் புரிகிறார் நகுல். ஏற்கெனவே இருக்கும் கூடைப்பந்து வீரர்களை கட்டமைக்கிறார். ஸ்பான்சர்ஷிப், விளம்பரம், வியாபாரம் என எல்லாம் கிரிக்கெட் பக்கம் இருக்கிறது. அதை எதிர்த்து போராட நகுலிடம் திறமையும், தன்னம்பிக்கையும் மட்டுமே உள்ளது.


கல்லூரியில் மாநில அளவிளான கூடைப்பந்து போட்டிகள் அறிவிக்கப்படுகிறது. கல்லூரி, அரசாங்கம் என தன் பணபலத்தால் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார் கிரிக்கெட் அணி கேப்படன். பல சதிகளைத் தாண்டி, பெரிய போராட்டத்திற்குப் பிறகு தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள் கூடைப்பந்து வீரர்கள்.


கிரிக்கெட் எந்த அளவிற்கு ஆபத்தை சமூகத்தில் விளைவித்திருக்கிறது என்று எடுத்து சொல்லும் இயக்குனர், அதற்கு முற்றிலும் எதிராக படத்தை சித்தரிக்காமல் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முன்னுரிமை வேண்டும் என்று படத்தின் கருத்தை வெளிப்படுத்துவது அவரின் புத்திசாலிதனத்தைக் காட்டுகிறது. கிரிக்கெட் வேண்டாம் என்று சொல்லவில்லை, கிரிக்கெட் விளையாட்டை மட்டும் தூக்கிக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறது வல்லினம்.


1983யில் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற நாளில் தொடங்கிய மோகம், இன்று ஐ.பி.எல், சி.சி.எல் என்று நட்சத்திர வெளிச்சத்தில் கிரிக்கெட் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையை ஒரு கூடைப்பந்து வீரர் விளக்கும் காட்சி அற்புதம். தன் சீனியருடன் போட்டிபோடும் நகுல் வெற்றியை விட்டுக்கொடுத்து அதற்கு விளக்கம் சொல்வது நச்!


நகுல் சென்னைக்கு வந்த புதிதில் ரயிலில் நடக்கும் ஈவ்-டீசிங் காட்சியும், தப்பி செல்ல ரயிலின் முன்புறம் தாவிகுதிப்பதும் பில்டப் காட்சிகளே தவிற அதில் அர்த்தம் இருந்ததாக தெரியவில்லை. கடற்கரை மணலில் ஹீரோவையும் ஹீரோயினையும் கட்டிப்புரள வைத்திருப்பது என சில காதல் கசமுசா காட்சிகள் படத்தின் தரத்தை குறைத்துவிடுகிறது என்பதும் உண்மை.


இடைவேளைக்கு முன்பு நடக்கும் கூடைப்பந்து போட்டியும், க்ளைமாக்ஸ் காட்சியின் போது நடக்கும் கூடைப்பந்து போட்டியும் பறபறவென ராக்கெட் வேகத்தில் பறக்கிறது காட்சியமைப்பு. காட்சிகளின் வேகத்திற்கு ஒளிப்பதிவார் பாஸ்கரன் மற்றும் படத்தொகுப்பாளர் சபு ஜோசப் ஆகியோருக்கு பாராட்டுகள்.


‘வல்லினம்’ என்ற தீம் பாடலைத்தவிர மற்ற பாடல்களில் ஏமாற்றத்தையே தருகிறார் இசையமைப்பாளர் தமன். பின்னணி இசையில் பரவசப்படுத்துகிறார்.


நியாயமான உண்மையை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு வாழ்த்துகள்!

வல்லினம் - துணிச்சலான பதிவு!