Saturday 1 March 2014

வல்லினம் -கிரிக்கெட்டுக்கு எதிரான படமா?(விமர்சனம்)!

வல்லினம் - விமர்சனம்

பலருக்கும் வாழ்க்கை விளையாட்டாக இருக்கிறது. ஆனால் விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் வல்லவர் தான் படத்தின் நாயகன். எல்லா விளையாட்டுகளிலும் சுவாரஸ்யம் இருக்கிறது. கூடைப்பந்து விளையாட்டில் உள்ள சுவாரஸ்யங்களை அதே அளவோடு அதில் கொஞ்சம் சினிமாவையும் கலந்து அதிரடி ஆட்ட நாயகனாக விளங்குகிறார் இயக்குனர் அறிவழகன். இது கிரிக்கெட்டுக்கு எதிரான படமா? என சில சர்ச்சைகளையும் இயக்குனர் சம்பாதிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது!


கூடைப்பந்து விளையாட்டு வீரன் நகுல். தன் நண்பனான கிருஷ்ணாவும் கூடைப்பந்து வீரர். திருச்சி கல்லூரியில் படிக்கும் இவர்களுக்கு, படிப்பை விட அதிக கவனம் விளையாட்டில் தான். விளையாட்டு நேரத்தில் விபத்து ஏற்பட, கீழே விழுந்த நகுலின் நண்பன் கிருஷ்ணா இறந்துவிடுகிறார். அவருக்கு முன்பே இதயம் பலவீனமாய் இருந்ததும் தெரியவருகிறது. நண்பனின் நினைவில் இருந்து மீள, அன்றுமுதல் கூடைபந்தை தொடுவதில்லை என சபதமெடுத்து, சென்னை கல்லூரியில் சேர்கிறார் நகுல்.


சென்னை கல்லூரியில் புது நண்பன் கிடைக்க, அவரும் கூடைப்பந்து வீரர் என நாயகன் நகுலுக்கு தெரியவருகிறது. கல்லூரியில் கிரிக்கெட் டீமுக்கும் கூடைப்பந்து டீமுக்கும் தகராறு ஏற்படுகிறது. மாணவர்களுக்குள் இருக்கும் அரசியல் கல்லூரி நிர்வாகம் வரை தெரியவருகிறது. தொடர்ந்து மாநில அளவில் சாம்பியன்ஷிப் வாங்குவது கிரிக்கெட் அணி தான் என்பதால், மற்ற விளையாட்டு மைதானங்களை மோத்தாமாக கிரிக்கெட் மைதானமாக மாற்றி அமைக்க முடிவுசெய்கிறது கல்லூரி நிர்வாகம்.


தான் நேசிக்கும் விளையட்டின் தன்மானத்தைக் காப்பாற்ற மீண்டும் கூடைப்பந்தைக் கையில் எடுக்கிறார் நாயகன் நகுல். வால் ஏந்திய வீரனைப்போல பந்தைக் கொண்டு அதகளம் புரிகிறார் நகுல். ஏற்கெனவே இருக்கும் கூடைப்பந்து வீரர்களை கட்டமைக்கிறார். ஸ்பான்சர்ஷிப், விளம்பரம், வியாபாரம் என எல்லாம் கிரிக்கெட் பக்கம் இருக்கிறது. அதை எதிர்த்து போராட நகுலிடம் திறமையும், தன்னம்பிக்கையும் மட்டுமே உள்ளது.


கல்லூரியில் மாநில அளவிளான கூடைப்பந்து போட்டிகள் அறிவிக்கப்படுகிறது. கல்லூரி, அரசாங்கம் என தன் பணபலத்தால் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார் கிரிக்கெட் அணி கேப்படன். பல சதிகளைத் தாண்டி, பெரிய போராட்டத்திற்குப் பிறகு தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள் கூடைப்பந்து வீரர்கள்.


கிரிக்கெட் எந்த அளவிற்கு ஆபத்தை சமூகத்தில் விளைவித்திருக்கிறது என்று எடுத்து சொல்லும் இயக்குனர், அதற்கு முற்றிலும் எதிராக படத்தை சித்தரிக்காமல் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முன்னுரிமை வேண்டும் என்று படத்தின் கருத்தை வெளிப்படுத்துவது அவரின் புத்திசாலிதனத்தைக் காட்டுகிறது. கிரிக்கெட் வேண்டாம் என்று சொல்லவில்லை, கிரிக்கெட் விளையாட்டை மட்டும் தூக்கிக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறது வல்லினம்.


1983யில் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற நாளில் தொடங்கிய மோகம், இன்று ஐ.பி.எல், சி.சி.எல் என்று நட்சத்திர வெளிச்சத்தில் கிரிக்கெட் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையை ஒரு கூடைப்பந்து வீரர் விளக்கும் காட்சி அற்புதம். தன் சீனியருடன் போட்டிபோடும் நகுல் வெற்றியை விட்டுக்கொடுத்து அதற்கு விளக்கம் சொல்வது நச்!


நகுல் சென்னைக்கு வந்த புதிதில் ரயிலில் நடக்கும் ஈவ்-டீசிங் காட்சியும், தப்பி செல்ல ரயிலின் முன்புறம் தாவிகுதிப்பதும் பில்டப் காட்சிகளே தவிற அதில் அர்த்தம் இருந்ததாக தெரியவில்லை. கடற்கரை மணலில் ஹீரோவையும் ஹீரோயினையும் கட்டிப்புரள வைத்திருப்பது என சில காதல் கசமுசா காட்சிகள் படத்தின் தரத்தை குறைத்துவிடுகிறது என்பதும் உண்மை.


இடைவேளைக்கு முன்பு நடக்கும் கூடைப்பந்து போட்டியும், க்ளைமாக்ஸ் காட்சியின் போது நடக்கும் கூடைப்பந்து போட்டியும் பறபறவென ராக்கெட் வேகத்தில் பறக்கிறது காட்சியமைப்பு. காட்சிகளின் வேகத்திற்கு ஒளிப்பதிவார் பாஸ்கரன் மற்றும் படத்தொகுப்பாளர் சபு ஜோசப் ஆகியோருக்கு பாராட்டுகள்.


‘வல்லினம்’ என்ற தீம் பாடலைத்தவிர மற்ற பாடல்களில் ஏமாற்றத்தையே தருகிறார் இசையமைப்பாளர் தமன். பின்னணி இசையில் பரவசப்படுத்துகிறார்.


நியாயமான உண்மையை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு வாழ்த்துகள்!

வல்லினம் - துணிச்சலான பதிவு!

0 comments:

Post a Comment