Friday 28 February 2014

'முக்தா' படங்களில் ரஜினி, கமல்!

ரஜினிகாந்த், கமலஹாசன் நடித்த படங்கள் உள்பட மொத்தம் 65 படங்களை 'முக்தா' சீனிவாசன் இயக்கியுள்ளார்.

1973-ம் ஆண்டு வித்யா மூவிஸ் சூரியகாந்தி என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்தார். இதில் முத்துராமன், ஜெயலலிதா ஆகியோர் நடித்தனர். படம் வெற்றிப்படமானது.

'சூரியகாந்தி' பற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'எந்த திரைப்பட டைரக்டருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சினிமாவே பிடிக்காத பெரியார் ஈ.வெ.ரா, 'சூரியகாந்தி' வெற்றி விழாவிற்கு வந்து கேடயம் வழங்க வேண்டும் என்று விரும்பினேன். கி.வீரமணிதான் பெரியாரிடம் என்னை அழைத்துச் சென்றார். பெரியாரிடம் விஷயத்தைக் கூறினேன்.

'படத்தின் கதை என்ன?' என்று பெரியார் கேட்டார். நான் சொன்னேன். பெரியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். விழா நடக்கும் தேதியை கேட்டு
குறித்துக்கொண்டார். விழாவுக்கு வருவதாக கூறினார்.

ஆனால் என் நண்பர்கள், 'பெரியார் வரமாட்டார்' என்று கூறினார்கள்.

ஆனால் பெரியார், விழாவுக்கு சரியான நேரத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் அனைவரையும் வாழ்த்திப்பேசி, கேடயங்களை வழங்கினார்.

அந்தப் படத்தில் நடித்ததற்காக தற்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கேடயத்தை கொடுக்கும்போது, 'இனி இந்த மாதிரி படங்களிலேயே நடியுங்கள்' என்று பெரியார் கூறினார்.

இன்றைக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான் நடித்த சிறந்த படங்களுள் 'சூரியகாந்தி'யையும் ஒன்றாக கருதுகிறார். எனது டைரக்ஷனில், 'பொம்மலாட்டம்', 'அன்பைத்தேடி', 'சினிமா பைத்தியம்' ஆகிய படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார்.'

இவ்வாறு 'முக்தா' கூறினார்.

முக்தா சீனிவாசன் டைரக்ஷனில், 'சினிமா பைத்தியம்', 'சிம்லா ஸ்பெஷல்' ஆகிய படங்களில் கமலஹாசனும், 'பொல்லாதவன்', 'சிவப்பு சூரியன்' ஆகிய படங்களில் ரஜினியும் நடித்து உள்ளனர்.

கமல் நடித்த 'நாயகன்' படத்தை 'முக்தா'சீனிவாசன் தயாரித்தார்.

இதுபற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'கமலை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். ஒருமுறை கமல் நடித்த 'சினிமா பைத்தியம்' படத்தை பெருந்தலைவர் காமராஜருக்கு போட்டுக் காட்டினேன். அந்த நிகழ்ச்சிக்கு கமலையும் வரச்சொல்லி இருந்தேன்.

படத்தைப் பார்த்துவிட்டு காமராஜர் வெளியே வந்தபோது, கமல் உள்ளே நுழைந்தார். அப்போது கமலை பார்த்த காமராஜர், 'நீ பரமக்குடி சீனிவாசன் மகன்தானே, உன் தாயார் நலமாக இருக்கிறார்களா?' என்று கேட்டார்.

அதன் பிறகு என்னிடம் திரும்பி 'நான் பரமக்குடி செல்லும்போது இவர்கள் வீட்டில்தான் சாப்பிடுவேன்' என்று கூறினார். பின்னர் கமலை தட்டிக்கொடுத்து விட்டு சென்றார்.

ரஜினி கால்ஷீட் கொடுத்த தேதியில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். காட்சி அமைப்புகளை மாற்றும்படி கருத்து எதுவும் சொல்லாமல், மிக மிக ஒத்துழைப்போடு நடித்தார். அந்த நட்புணர்வை நானும், அவரும் இன்றும் போன்றி வருகிறோம்.'

இவ்வாறு முக்தா சீனிவாசன் கூறினார்.

'கோடை மழை', 'கதாநாயகன்', 'சின்ன சின்ன ஆசைகள்', 'வாய்க்கொழுப்பு', 'கண்களின் வார்த்தைகள்' உள்பட 65 படங்களை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்து உள்ளார். நிறைய படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார்.

பல டெலிவிஷன் சீரியல்களையும் டைரக்ட் செய்து உள்ளார்.

சினிமா வாழ்க்கை பற்றி முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

'சினிமா வாழ்வில் எனக்கு ரோல் மாடல் டைரக்டர் கே.ராம்நாத்தான். அவரிடம் இருந்து நான் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாட்டை கற்றுக்கொண்டேன். இன்று வரை நான் எந்தத் தவறும் செய்யாமல் சினிமாத் துறையில் வாழ்க்கையை ஓட்டிவிட்டேன்.

பட உலகில் நடிகை மனோரமா, 'சோ', ஜெமினிகணேசன், நாகேஷ், லட்சுமி, ஸ்ரீபிரியா, ராதாரவி போன்றோர் என் நெருங்கிய நண்பர்கள். கடந்த 4 ஆண்டுகளாக நான் படத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. மீண்டும் வருகிற ஆண்டில் திரைப்படத் தொழிலில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறேன்' என்றார், முக்தா சீனிவாசன்.

இயக்குனர் ஆன பிறகு தான் திருமணம் என்ற முடிவில் இருந்த முக்தா சீனிவாசன் 'முதலாளி' படம் வெளியானதும் தன் அண்ணியின் தங்கையான பிரேமாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம், திருப்பதியில் நடந்தது.

திருமணத்தின்போது 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்த பிரேமா, பின்னர் பொருளாதாரத்திலும், இந்தியிலும் 'எம்.ஏ' படித்து பட்டம் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு ரவி, முக்தா சுந்தர் என்று 2 மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர். முக்தா சுந்தர் சினிமா துறையில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் அமெரிக்காவில் சினிமா 'டெக்னிக்' படித்தவர்.

முக்தா சீனிவாசன் புத்தகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். 'இணையற்ற சாதனையாளர்கள்' உள்பட 45 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளார்.

1947-ம் ஆண்டில் சினிமாத் துறையில் சேர்ந்த 'முக்தா' சீனிவாசன், தற்பொழுது சினிமா துறையில் 59 ஆண்டுகள் முடிந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது, திரைப்படத்துறையில் 'முக்தா'வுக்கு இது வைர விழா ஆண்டு. 

0 comments:

Post a Comment