மணமகள், "மேக்கப்’ இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, முகம் பளபளப்பாகவும், மிகுந்த பொலிவுடனும் காணப்படும். அதே நேரம், அழகுப் பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால், அலர்ஜி மற்றும் பாதிப்பு வராமல் இருப்பதற்கு, தரமான அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். மேலும், முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.
மணப்பெண் சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி. மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். பெண்களில் சிலருக்கு நீண்ட தடிமனான முடி இருக்கும். அவர்களுடைய முக வடிவத்துக்கு ஏற்ப, சிகை அலங்காரம் செய்திட வேண்டும். சிலருக்கோ முடி குறைவாக இருக்கும். அவர்களுக்கு தகுந்தபடி முன் பகுதியை சரி செய்யும் விதமாக, ஹேர்ஸ்டைல் செய்வது மிக முக்கியம். மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும்.
குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும்,
நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும்.
முகம் நீளமாக இருந்தால், காதுகளை மூடியும், இரண்டு பக்கத்திலும் சிறிது முடியை, சுருள் செய்து தொங்கவிடலாம். இது, முகத்தை அகலமாக காட்டும். அகலமான முகம் உடையவர்களுக்கு, முகத்தின் முன் பக்க முடியை தூக்கி காட்டுவதன் மூலம், முகத்தை உருண்டையாக காட்ட முடியும். இதில், முகத்தின் முன்பகுதி அமைப்புக்கு ஏற்ப, மொத்த முடியையும், பின் நோக்கி இருப்பது போல், பின்பக்கமாக சீவுவதோ அல்லது நடு வகிடு எடுத்து, இரண்டு புறமும் பின்புறமாக சீவி, முகத்தின் வடிவத்துக்கேற்றாற் போல் உயர்த்தி காட்டலாம்.
நடுவில் வகிடு இருக்கும் இடத்தில், அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இதில், இன்னொரு முறையும் உள்ளது. அது, காதின் ஒரு பக்கத்தில் இருந்து, மறு பக்கத்துக்கு பின்புறமாக தலை சீவ வேண்டும். இதில், நெற்றிச்சுட்டி வைக்க முடியாது. இந்த மாதிரி முன்புறம் சரி செய்யும் போது, முன் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும் சுட்டி கிடைக்கிறது. அவற்றை வைத்தும் பொருத்திக் கொள்ளலாம்.
மாலை, ரிசப்ஷன் அலங்காரத்தில், கொண்டை விரும்பாதவர்கள், பின்னல் வேண்டும் என்பவர்கள் பிரெஞ்ச் பிளேட் போட்டு, பின்னலை பின்னி விட வேண்டும். அக்காலத்தில், மணப் பெண்ணிற்கு, பூக்கள் மூலம் ஜடை செய்வர். ஆனால், இப்போதோ, பின்னலின் மேல் ஜரிகை, முத்து, பூக்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட மோடிவ் ஆகியவைகளை கொண்டு அலங்கரிக்கலாம்.