சமையல் அறையில் மருத்துவ பொருட்கள்
சுக்கு :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றுஞ் செய்கையும், பசித்தீயை தூண்டும் செய்கையும் உண்டு. இதனால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அசீரணம், பேதி, குன்மம், சூலை, வாய்வ முதலியன குணமாகும். சுக்குத்தூளில் திரிகடிப்பிரமாணம் எடுத்து சமன் கற்கண்டு சேர்த்து பாலில் அருந்திவர வாய்வு நீங்கும். சுக்கிற்க்கு உப்பை அரைத்து கவசஞ் செய்து நெருப்பணலில் வாட்டவும். இப்படி 10முறை செய்து இடித்து சூரணித்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 1/4முதல் 1/2 வராகனெடை வீதம் அருந்தி வர, வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், அசீரணம், உஷ்ணபேதி, குன்மம், சூலை முதலியன குணமாகும்.
மிளகு :- இதற்கு முறைசுர மகற்றி, வாதமகற்றி செய்கையும் உண்டு. இதனால் குளிர்சுரம், வாய்வு, சுரம், அசீரணம், முதலியன குணமாகும். மிளகை இளம் வறுப்பாக வறுத்தி டித்துச் சூரணத்தில் நாலைந்து குன்றினெடை வீதம் சமன் கற்கண்டு தூள் கூட்டிப் பாலில் கொடுத்து வர இருமல், தொண்டை, ரணம், வாய்வு, வயிற்றுவலி, முதலியன குணமாகும். மிளகைத் தனியாகவாவது அல்லது தும்பைப்பூவுடன் சேர்த்தாவது முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வர குளிர்சுரம், முறைச்சுரம் முதலியன குணமாகும்.
திப்பிலி :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றல், கபத்தை சமணப்படுத்துதல் சீரணசக்தியை உண்டாக்கல் முதலிய செய்கையு முண்டு. இதனால் இருமல், தொண்டை, கபக்கட்டு, இரைப்பு நோய், அசீரணம், பேதி, முதலியன குணமாகும். திப்பிலி யை இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்தில் திரிகடிப்பிரமாணம் தேனுடன் சேர்த்து அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு, கபம் முதலியன குணமாகும். திப்பிலியுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்து தேனில் கொடுத்து வர விக்கல், வாந்தி, அரோசகம், அசீரணபேதி, பசியின்மை முதலியன குணமாகும்.
கடுக்காய் :- இது துவர்ப்புச்சுவை யுடையதாக இருப்பினும் மலத்தைப் போக்கும் செய்கையுடையது. இதனால் வாதகப நோய்கள் காமாலை, பெருவயிறு, குன்மம், விரணம் முதலியன குணமாகும். கடுக்காய்த்தோலை குடிநீரிட்டு விரணம், இரத்தமூலம், பெரும்பாடு, வாய், ரணம் முதலிய நோய்களில் அவ்வவ்விடங்களைக் கழுவிவர நல்ல பலனைத் தரும். கடுக்காய்ச் சூரணம் 1/2 வராகனெடை அருந்த மலங்கழியும். கடுக்காய் சூரணத்தில் வேளைக்கு 5முதல் 10 குன்றி வீதம் காலைதோறும் தினம் 1 வேளை சாப்பிட்டு வர உந்திரணம், வயிற்று வலி, மூலம், குன்மம், வாதகப நோய்கள் முதலியன குணமாகும். கற்பமாகவும் பயன் படும்.
நெல்லிக்காய் :- பச்சை நெல்லிக் காய்க்கு குளீச்சி யுண்டாக் கும் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். பச்சை நெல்லிக்காய்ச்சாறுடன் சமன் சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து 2முதல் 4 தேக்கரண்டி வீதம் அருந்தி வர வாந்தி, அரோசகம், இரத்தபித்தம், நீர்சுருக்கு முதலியன குணமாகும். ஒரு தோலா நெல்லிவற்றலை ஒர் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர பித்தாதிக்கம், உட்சூடு, முதலியன குணமாகும்.
தான்றிக்காய் :- இதற்கு துவர்ப்புச்செய்கையும், கோழை அகற்றுஞ் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். இதனால் சுவாசம், காசம், இரத்தபித்தம், கீழ்மேகம், முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோல் 1/4 பலம் எடுத்து சூரணித்துச் சமன் சர்க்கரை சேர்த்து நீரிலாவது அல்லது தேனுடனாவது அருந்தி வர உஷ்ண இருமல்,கபக்கட்டு, ரணம், தொண்டை, நீர்சுருக்கு பிரமேகம் முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோலைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்துவர வாய் ரணம், பல் வலி முதலியன குணமாகும். விரணங்களை கழுவிவர விரைவில் ஆறும்.
சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், சீரண சக்தியை உண்டாக்கல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கையும் உண்டு. இதனால் அசீரணம், அதிசாரம் கிரகணி, பித்தாதிக்கம், முதலியன குணமாகும். சீரகத்தைதனியாக வாவது, அல்லது சிறிது மிளகு சேர்த்தாவது வறுத்து இடித்துச் சூரணித்து1/4 அல்லது1/2 வராகனெடைவீதம் நெய்யில்கொள்ள மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும். சீரகத்தை இஞ்சிச் சாற்றிலும், பழச் சாற்றிலும், ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணித்து சமன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக கொண்டு வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடைவீதம் தினம் இரு வேளையாக அருந்திவர பித்தாதிக்கம்,வாந்தி, அரோசகம், அசீணம் முதலியன குணமாகும். சீரகத்தை எண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி வடித்து தலைமுழுகி வர பித்தமயக்கம், நேத்திரரோகம் தலைபாரம் முதலியன குணமாகும்.
கருஞ்சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், சூதகச் சிக்கலை அகற்றல், கிருமிகளை நாசம் செய்தல் முதலிய செய்கையும்உண்டு. இதனால் கரப்பான், விரணம், வயிற்றுப் பொருமல், கிருமிநோய், குன்மம், சூதகச் சிக்கல் முதலியன குணமாகும். இதனுடன் சமன் சுக்கு சேர்த்து இடித்துச் சூரணித்து 1/4 விராகனெடை வீதம் நீரில் கொடுத்துவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மார்புவலி, குன்மசூலை முதலியன குணமாகும். இதை காடிவிட்டரைத்து கரப்பான், சொறி, சிரங்கு, சர்மபடைகள் முதலியவற்றிற்குப் பூச குணமாகும்.
பெருஞ்சீரகம் :- இதுவே சோம்பு எனப்படும். இதனால் வெட்டை, நீர்சுருக்கு, அசீரணம், வயிற்றுப் பூசம், குன்மம், இருமல் சுவாசம் முதலியன குணமாகும். இதனை இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து 1/4 வராகனெடைவீதம் சமன்சர்க்கரை சேர்த்து அருந்திவரலாம். இதனை குடிநீர் அல்லது தீநிர் செய்தும் வழங்குவதுண்டு.
இலவங்கம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத் தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, வாந்தி, கண்ணோய், பல்வலி முதலியன குணமாகும். இதை நீர்விட்டரைத்து நெற்றியில் தடவ சலதோஷம், நீரேற்றம் தலைபாரம் முதலியன குணமாகும். இதன் ஊறல் குடிநீர் வாந்தி பேதி முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு. இதன் தைலம் பல்வலிக்குத் தடவ குணத்தைத் தரும். இன்னும் இதனை இருமல், இரைப்பு முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு.
இலவங்கப்பட்டை :- இதற்கு துவர்ப்புச்செய்கை உண்டு. இதனால் பேதி, சீதபேதி, தாதுநட்டம் முதலியன குணமாகும். இதனைத் தனியாகவாவது அல்லது காய்ச்சுக்கட்டியுடன் சேர்த்தாவது சூரணஞ் செய்து கொடுத்துவர பேதி, சீதபேதி, கிரகணி முதலியன குணமாகும்.
ஏலக்காய் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல் பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு.இதனால் வாந்தி தாகம், பித்தாதிக்கம், உஷ்ணபேதி முதலியன குணமாகும். ஏலக் காயை சதைத்து நீரிட்டு காய்ச்சி அருந்த தாகம், பித்தம், வாந்தி முதலியன குணமாகும்.
சிறுநாகப்பூ :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, வாய்வு, இருமல், விரணம் முதலியன குணமாகும். இதனை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/4, 1/2 வராகனெடை
வீதம் அருந்திவர அசீரணம், பேதி, சீதபேதி, இரத்தமூலம், பெரும்பாடு, கபத்தோடு கூடிய இருமல் முதலியன குணமாகும்.
வெந்தயம் :- இதற்கு மலத்தைக்கட்டல் , உள் அழலை ஆற்றல், உடலை உரமாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, இரத்தபித்தம், பிரமேகம், கணச்சூடு, அஸ்திசுரம் தாது நட்டம் முதலியன குணமாகும். வெந்தயத்தை நீரிலிட்டு வேகவைத்து, தேன் விட்டு கடைந்து அருந்தி வரலாம். இதனால் மேற்கூறப்பட்ட பலன்கள் உண்டாகும்.
கடுகு :- இதற்கு மேலுக்கு வெப்பமுண்டாக்கி, தடிப்புண்டாக்கி செய்கைகளும்; உள்ளுக்குள் வாந்தி யுண்டாக்கல், சீரணத்தை யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பசிமந்தம், வாததோஷம், விக்கல் முதலியன குணமாகும். 1 முதல் 4 வராகனெடைக் கடுகை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வாந்தியாகும். இது வமன சிகிச்சைக்கு பயன்படும். கடுகுத்தூள் 1-2 வராகனெடை ஆழாக்கு வெநீரில் ஊறல் குடிநீராகச் செய்து வடித்துக் கொடுக்க விக்கல் குணமாகும். வாதரோகங்ககு கடுகை அரைத்து பற்றிடுவதுமுண்டு.
ஓமம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், மலத்தைக் கட்டல்முதலிய செய்கைகள் உண்டு. இதனால் மந்தம், அசீரணபேதி, வயிற்றுப் பொருமல் முதலியன குணமாகும். ஓமத்துடன் சமன் மிளகு சேர்த்து இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து திரிகடிப் பிரமாணம் வெல்லத்துடன்சேர்த்து அருந்திவர மந்தம், அசீரணபேதி, வயிற்றுவலி முதலியன குணமாகும். ஓமத்துடன் பொடுதலை சேர்த்துக் குடிநீர்செய்து குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சலுக்கு வழங்குவதுண்டு. ஓமத் தீநீர் செய்தும் வழங்குவதுண்டு.
பெருங்காயம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றல், இசிவை யகற்றல், ரிதுவை யுண்டாக்கல் முதலியச் செய்கைக ளுண்டு. இதனால் வயிற்றுப்புசம், அசீரணம், குன்மம், வாதாதிக்கம், சூதகச்சிக்கல், செவிநோய் முதலியன குணமாகும். பெருங்காயத்தை நீர் விட்டரைத்து சீதள சைத்திய வீக்கங்களுக்கு மேலுக்கு பற்றிட குணமாகும். காயத்தை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி காதில்விட காதுவலி குணமாகும். காயத்தைச் சிறிது நெய்விட்டு பொரித்துப் பொடித்து 2-3 குன்றிஎடைவீதம் வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம், அசீரணம் முதலியன குணமாகும். பொரித்த காயத்துடன் வெள்ளைப் பூண்டும் வெல்லமும் சேர்த்து அரைத்துக் கொடுத்துவர மாதர்களுக்கு பிரசவத்திற்குப்பின்காணும் உதிரச்சிக்கலை ந்ன்கு வெளிப்படுத்தும்.
கடுகுரோகணி :- இதற்கு மலத்தைப் போக்கல், முறைசுரமகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதைத் தனியாகவாவது அல்லது இதர சரக்குகளுடன் சேர்த்தாவது மலக்கட்டுடன் கூடிய சுரத்திற்குக் குடிநீரிட்டு வழங்குவதுண்டு.
சாதிக்காய் :- இதற்கு முக்கியமாக வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. மற்றும் காமத்தைப் பெருக்கல், உடலுக்கு உரம்தரல் முதலிய செய்கைகளும், அதிக அள்வில் மயக்கத்தை உண்டாக்கும் செய்கையும் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். ஒரு பங்கு சாதிக்காயுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்திடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடிபிரமாணம் சமன் சர்க்கரை சேர்த்து அருந்திவர முற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலுக்கு சாதிபத்திரி யென்று பெயர். இதற்கும் சாதிக்காயின் செய்கையே உண்டு. இதையும் சாதிக்காயைப் போலவே பேதி கிரகணி முதலியவைகட்கு வழங்கும் மருந்துகளிலும், தாது விருத்திக்குரிய லேகியங்களிலும் சேர்ப்பதுண்டு.
தாளிசபத்திரி :- இதற்கு கோழையகற்றல், பசித்தீயைத் தூண்டல், மலத்தை கட்டல், உடலுக்கு உரம்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அசீரணபேதி, நாட்பட்ட அதிசாரம், கிரகணி, துர்பலம், நாட்பட்ட இருமல், இரைப்பு, அஸ்திசுரம் முதலியன குணமாகும். இதன் சூரணத்தில் 1/4, 1/2 வராகனெடை வீதம் ஆடாதோடை சுரசத்துடன் சேர்த்து தேன் கூட்டிக் கொடுத்துவர இருமல், இரைப்பு, கபக்கட்டு முதலியன குணமாகும். தாளிசபத் திரி சூரணத்துடன் சமன் திரிகடுகு சூரணம் சேர்த்து அருந்திவர பசி மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும்.
மாசிக்காய் :- இதற்கு மலத்தைக் கட்டச்செய்தல், விரணத்தை ஆற்றல், உதிரப்போக்கைத் தடுத்தல், உடலுக்கு உரந்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அக்கரம், விரணம், அதிசாரம், உட் சூடு, கணச்சூடு, சீதபேதி முதலியன குணமாகும். உடலுக்கு பலந்தரும். இதனை நீர் விட்டிழைத்து வாய் ரணம், நாசி விரணம், ஆசனவெடிப்பு, மூலவிரணம், தீச்சுட்ட புண் முதலியவைகட்கு மேலுக்குத் தடவிவர விரைவில் குணமாகும். இதன் சூரணத்தில் 5-முதல் 10-குன்றி வீதம் தினம் இருவேளையாகக் கொடுத்து வர இரத்தகாசம், இரத்த வாந்தி இரத்தமூத்திரம், பேதி, சீதரத்த பேதி, பெரும்பாடு முதலியன குணமாகும்.
அரத்தை :- இதில் சிற்றரத்தை பேரரத்தை என இருவகை உண்டு. இவைகளின் குணம் ஏறத்தாழ ஒன்றேயாகும். இதற்கு முக்கியமாக கோழையை அகற்றுஞ் செய்கையும், வெப்பத்தைத் தணிக்குஞ் செய்கையும் உண்டு. இதனால் இருமல், ஈளை, கபக்கட்டு, சுரம், வாயு முதலியன குணமாகும். இதன் தனி சூரணம் 1/4- வராகனெடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து நெய் அல்லது தேனில் அருந்திவர இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும். வாதகப சுரக் குடிநீர்களிலும் இதனைச் சேர்த்து வழங்குவதுண்டு.
அதிமதுரம் :- இதற்கு கோழையகற்றல், உள் அழலைத் தனித்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் இருமல், தாகம் தொண்டைரணம், உடல் காங்கை முதலியன குணமாகும். தனி அதிமதுரச் சூரணம் 5-முதல் 10-குன்றி எடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து சிறிது காய்ச்சிய பாலில் அருந்திவர உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல், தொண்டைரணம், கபக்கட்டு முதலியன குணமாகும்.
அக்கராகாரம் :- இதற்கு உமிழ் நீரைப் பெருக்கல், வெப்ப முண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நாவரட்சி, தாகசுரம், ஜன்னிதோஷம் முதலியன குணமாகும். இதில் ஓர் துண்டை வாயிலிட்டு மென்று சுவைத்து வரலாம். அல்லது ஊறல் குடிநீரிட்டும் வழங்கலாம். இதனால் மேற்கண்ட குணங்கள் ஏற்படும்.
கோஷ்டம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல் வியர்வையைப் பெருக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வாதம், சுரம், இருமல், ஈளை, தோஷசுரம், வீக்கம் முதலியன குணமாகும். இதனைப் பெரும்பாலும் சுரக் குடிநீர்களில் சேர்த்து வழங்குவதுண்டு.
வசம்பு :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், பசித்தீயைத் தூண்டல், முறை சுரத்தை தடுத்தல், கிருமிகளை நாசஞ் செய்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சர்பகீட தாவர விஷங்கள், சுர சன்னிதோஷம், மாந்தக் க்ழிச்சல், மலக்கிருமி முதலியன குணமாகும். வசம்பை ஊறல் குடிநீரிட்டுக் கொடுக்க குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சல், முறை சுரம் முதலியன குணமாகும். இதைச் சுட்டுக் கரியாக்கி ஆமணக்கு நெய்யில் குழைத்து குழந்தைகளின் அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியன குணமாகும். வசம்பிற்கு மஞ்சளை அரைத் துக் கவசமிட்டு கருகும்படி சுட்டுக் கரியாக்கித் தேனில் கொடுத்து வர நேர்வாளத்தினால் ஏற்பட்ட நிற்காதபேதி, வாந்தி, வயிற்று வலி முதலியன குணமாகும்.