Tuesday, 4 February 2014

கண்ணீரும் கதைசொல்லும்!

கண்ணீரும் கதைசொல்லும்!

அழுங்கள்! உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம்மால் நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே அறிவியல் உண்மையாகவும் இருக்கிறது. அழுவதால் உடலுக்கு நன்மைகளே அதிகம். மாறாக அழுகையை அடக்கிவைத்தல், உணர்ச்சிகளை அழுகையின் மூலம் வெளிக்காட்டாது மறைத்தல் போன்ற செயல்களால் உடலுக்கு நேரும் தீங்குகள் ஏராளம். துன்பங்கள் நேர்கையில் நம் கண்ணீர், கண்களிலிருந்து ஆறாக ஓடாமல் தடுக்கப்படும்போது நம் உடலானது கடுமையாக எதிர்வினையாற்றுகிறது. அது ஏராளமான நச்சு ஹோர்மோன்களைத்(மன அழுத்தத்தைத் தோற்றுவிப்பது) தோற்றுவிக்கிறது. இதனால் உடல் நோய்வாய்ப்படுதல், உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

கண்ணீரின் வகைகள்:

பிரதிபலிப்புக் கண்ணீர்:- 

இது கண்களுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால் (உதாரணமாக தூசி, அழுக்கான சிறு துணிக்கைகள்) மற்றும் கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தும் வாயுக்கள் அல்லது அமிலங்கள் (வெங்காயம், கண்ணீர்ப் புகை) கண்களில் புகுந்துவிட்டால், தானாகவே சுரந்து கண்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறது.

உணர்வெழுச்சிக் கண்ணீர்:-

இக்கண்ணீரானது மனிதனின் உளவியல் ரீதியான தாக்கங்களின்போது(கவலை, துன்பம்,ஆனந்தம்) வெளிப்படுவது. இது உலகிலுள்ள அத்தனை மனிதருக்கும் பொதுவானது என்று கருதப்படுகிறது.

கழுவும் கண்ணீர்:- 

இது பிறப்பிலிருந்து இறப்புவரை எம் கண்களை ஈரத் தன்மையுள்ளதாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு ஒரு திரவம் நம் கண்ணில் சேவை புரிந்துகொண்டிருப்பது, நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதை உணர வேண்டுமெனில் ஈரமில்லாத, சுத்தமான விரலால் கண்களில் தொட்டுப் பார்த்து(பிசுபிசுப்பை) அறிய முடியும்.

அழுகையில்:

நாம் சிரிக்கும்போது எவ்வளவு சக்தியைச் செலவு செய்கிறோமோ(நிமிடத்திற்கு 1,3 கலோரிகள்) அதேயளவு சக்தியை, அழும்போதும் செலவு செய்கிறோம். அழுவதை விட சிரிப்பது உடலுக்குச் சிறந்தது என்று யார் சொன்னது?

கண்களில் 'பீளை' உருவாகுதல், அழுததால் கண்கள் வீங்குதல், கண்கள் சிவத்தல் எல்லாமே கண்கள் தம்மைக் காத்துக்கொள்ள, தாமாகவே(automatic) எடுக்கும் முயற்சியாகும்.
அழுகை மட்டும் இல்லாது போயிருந்தால், தன் கைக்குழந்தைக்குப் பசி எடுப்பதைத் தாயால் எப்படி உணர முடியும்?

நாம் துன்ப, துயரமான சூழ்நிலைகளில் அழாமல் அடக்கி வைக்கும்போது எங்கள் உடலானது, கூடிய விரைவில் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புள்ளது, நாம் கவலையடையும்போது எமது உடலானது அதிக அளவில் அழுத்த, நச்சுக் ஹோர்மோன்களை உற்பத்தி செய்கிறது, நாம் அழும்போது இக் ஹோர்மோன்கள் உடலிலிருந்து கண்ணீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றது. இவ்வாறு அழாமல் தேக்கி வைக்கும் ஹோர்மோன்கள் உடலுக்கு ஆபத்தானவையாகும். இவை மன அழுத்தம், பலவித வாத, நரம்பு நோய்கள், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

0 comments:

Post a Comment