கோச்சடையான்' ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர், ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, நடிகர் ஆதி ஆகியோருடன் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், பலதரப்பட்ட மீடியா மற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னார். அவரிடம் நமது நிருபர் கேட்ட வித்தியாசமான வினாக்களும், அதற்கு செளந்தர்யா அளித்த விறுவிறுப்பான விடைகளும் இங்கு உங்களுக்காக...
நமது நிருபர் : உங்களது தந்தை ரஜினிகாந்த், ''என் மகள்கள் இயக்குநராக பேரும் புகழும் சம்பாதிப்பதை விட குடும்ப தலைவிகளாக தொடர்ந்து குறைந்தது 2 குழந்தைகளாவது பெற்றுக் கொண்டு 12 வயது வரை அவற்றை பார்த்து, பார்த்து வளர்த்து ஆளாக்கி நல்ல குடிமக்களாக இந்த நாட்டிற்கு தர வேண்டும்! அது தான் என் ஆசை, சந்தோஷம், பெருமை என்றார். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும், தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தாலும் செளந்தர்யா குடும்பத்திற்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.'' 'கோச்சடையான்' மேடையில் இதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள் செளந்தர்யா? அடுத்து உடனடியாக படமா? குழந்தை குட்டியா...?
செளந்தர்யா : அப்பாவே அப்படி சொல்லிவிட்டார் எனும்போது இனி நான் சொல்ல என்ன இருக்கிறது. நிச்சயம் அப்பா சொல்படி நடப்பேன். குடும்பத்திற்கும், என் கணவர் அஸ்வினுக்கும் உரிய முக்கியத்துவம் அளிப்பேன். இச்சமயத்தில் அப்பாவிற்கும், அஸ்வினுக்கும் நன்றியும் சொல்லிக் கொள்கிறேன்.
நமது நிருபர் : அதென்ன செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்? நம் இந்திய பெண்கள் திருமணம் ஆனதும் அப்பாவை கழட்டி விடுவதுதானே மரபு.? இது என் போன்ற பெண் குழந்தை பெற்ற ஆண்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும், மற்றொரு பக்கம் ஒரு பெண்ணிற்கு கணவனாக சற்றே வருத்தத்தையும் தருகிறதே...?
செளந்தர்யா : ஏன்? ஐஸ்வர்யா ராய் பச்சன் இல்லையா? அவரை கேட்டீர்களா இப்படி? எல்லோருக்கும் பிடித்த என் அப்பாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும். பிறந்ததில் இருந்து என் பெயருடன் இருக்கிறது அப்பாவின் பெயரும், இருந்துவிட்டு போகட்டுமே. (ஐஸ்வர்யா ராய் பெயரில் வரும் 'ராய்' அவரது ஜாதியை குறிக்கும் சொல் என்றாலும் எல்லா கேள்விகளுக்கும் மடை திறந்த வெள்ள போல் படபடவென பேசும் செளந்தர்யாவை மடக்க பிடிக்கவில்லை நமக்கு...)
நமது நிருபர் : அப்போ, ஐஸ்வர்யா ராய் பச்சன் உங்கள் ரோல் மாடலா? இதுமாதிரி நிறைய விஷயங்களுக்கு அவரை பின்பற்றுகிறீர்களா...?
செளந்தர்யா : அப்படி அல்ல, அவரையும் பிடிக்கும். சும்மா உதாரணத்திற்கு சொன்னேன்.
நமது நிருபர் : 'கோச்சடையான்' என முதல் படத்திலேயே சிவனின் பெயர்?, டிரையிலரில் அப்பா ரஜினியை ருத்ர தாண்டவமெல்லாம் ஆடவிட்டிருக்கிறீர்களே? நீங்களும் அப்பா ரஜினி மாதிரி ஆன்மிகவாதியோ?
செளந்தர்யா : ஆமாம், அதில் என்ன தப்பு. சிவன் எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பிடித்த கடவுள்தானே. அப்பாவை இனி நிஜத்தில் 'ருத்ரதாண்டவம்' ஆட விட முடியாது. அதுதான் கற்பனையில் என் அனிமேஷன் படத்தில் ஆடவிட்டுள்ளேன். 'ருத்ரதாண்டவம்' சிவனின் பேவரைட் அல்லவா.?!
நமது நிருபர் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எல்லாம் 'கோச்சடையான்' ரஜினிகாந்த் பற்றி குழந்தை அழுதால் அப்பா பொம்மை வாங்கி தருவார்... இங்கு அப்பாவே குழந்தைக்காக பொம்மையாக மாறி இருக்கிறார்... எனும் கமெண்ட்டுகள் கண்டீர்களா...? அதுப்பற்றி உங்கள் கருத்து?
செளந்தர்யா : ஆமாம்! கோச்சடையான் பொம்மை படம்தானே. அதில் தவறில்லை. ஆனாலும் 'அவதார்' மாதிரி உலகெங்கிலும் ரசிக்க பட இருக்கும் அனிமேஷன் பொம்மை படம் என்பது தான் ஹைலைட்! (சிரிக்கிறார்)
நமது நிருபர் : தமிழ், 'கோச்சடையானில்' 9 பாடல்கள். இது இந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலீஷ், ஸ்பானிஷ், ஜப்பனிஷ் மொழிகளிலும் இருக்குமா...?
செளந்தர்யா : 9 பாடல்கள் என்றால் அதில் சில மாண்டேஜ் பாடல்கள். அவை மொழிக்கு ஏற்றபடி அவசியம் கருதி வைத்துக் கொள்ளப்படும்.
நமது நிருபர் : கோச்சடையான் படத்திற்கு உங்கள் அக்கா ஐஸ்வர்யாவும், அக்கா வீட்டுக்காரர் தனுஷூம் எவ்வாறு ஒத்துழைத்தார்கள்? ஆதியை பயன்படுத்திய நீங்கள் தனுஷை நடிக்க வைக்காதது ஏன்?
செளந்தர்யா : அவரது(தனுஷ்) கால்ஷீட் வாங்கி தாருங்களேன் (சிரிக்கிறார்...) தொடர்ந்து, இருவருமே கிரியேட்டர்கள். நிறைய ஐடியா கொடுத்து உதவியுள்ளனர் என்ற செளந்தர்யா பிற நிருபர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறி அனைவரையும் அசத்தியது ஆச்சர்யம்!!