Wednesday, 12 February 2014

தொண்டைச் சளிக்கு ஓமம்!

ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.

விஸ்வரூபம் 2’ முக்கிய கேரக்டரில் மீண்டும் அபிராமி!

விஸ்வரூபம் 2 படத்தில் கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா ஜோடியாக நடிக்கின்றனர். இதில் அபிராமி எந்த கேரக்டரிலும் நடிக்கவில்லை.

மாறாக, பூஜா குமார் ஏற்று நடித்துள்ள கேரக்டருக்கு குரல் கொடுத்திருப்பவர் அபிராமி தானாம்.


கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அபிராமி ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டப்பிங் வேலைக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.


டப்பிங் பேசி முடித்து அமெரிக்கா கிளம்ப இருந்த நேரத்தில் அபிராமிக்கு ஒரு மலையாள படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அந்தப் படம் சுரேஷ்கோபி ஹீரோவாக நடிக்கும் ‘அப்போத்திக்கிரி.


அபிராமி நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்கும் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மோதலில் பிரபு தேவா- ஏ.ஆர்.முருகதாஸ்!

பாலிவுட்டில் பிரபு தேவா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் இந்தி படம் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஹாலிடே’ (துப்பாக்கி ரீ-மேக்).

இந்த இரண்டு படங்களையும்  ஜூன் 6ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.

ஆனால் இந்த இரண்டு படங்களும் ஒரே தினம் வெளியாகி மோதிக் கொள்வதை அஜய் தேவ்கனும், அக்‌ஷய குமாரும் விரும்பவில்லையாம்.


ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது ரிலீஸ் தேதியில் பிடிவாதமாக இருக்கிறார்களாம்.

தெரிந்தே கசியவிட்ட விஜய் படத்தின் முழு கதை!

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக விஜய் – ஏ.ஆர் முருகதாஸ் படத்தை சொல்லலாம்.

ஏற்கனவே துப்பாக்கி என்ற பிளாக்பஸ்டர் கொடுத்த பிறகு இந்த கூட்டணியை எதிர்பார்க்க மாட்டாங்களா என்ன..


தற்போது இப் படத்தின் கதையை தெரிந்தோ தெரியாமலோ இப் படத்தின் வில்லனாக நடிக்கும் பெங்காலி நடிகர் தோட்ட ராய் கசிய விட்டு இருக்கிறார்.


கதைப்படி  நடிகர் தோட்ட ராய் இப்படத்தில் வெளிநாட்டு தாதாவாக நடிக்கிறார்.
இவரை  பிடிக்க  கொல்கத்தா போலீஸ் துப்பறியும் கம்பெனியை நடத்தி வரும் விஜய்யோட உதவியை நாடுகிறது, விஜய் தன்னுடைய துப்பறியும் மூளையை கசக்கி  பல திட்டங்களை வகுத்து இண்டர்வல் பிளாக்கில் பிடித்து விடுகிறார்.


தன்னை பிடித்து கொடுத்த விஜய்யை பழிவாங்க கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் வில்லன் நடிகர் தோட்ட ராய், விஜய்யை கொலை செய்ய தேடும்போது தான் தெரிகிறது....


 விஜய்யை போல் இன்னொருவர் இருக்கிறார் என்று, பிறகு விஜய்யை அவர்கொலை செய்தாரா, இல்லை வழக்கம் போல் விஜய்யே வில்லனயை புரட்டி போட்டு எடுத்தாரா என்ற பல திருப்பங்களுடன் வெளிவர  இருக்கும் விஜய் – ஏ. ஆர் முருகதாஸ் படத்தின் கதை இது தாங்க.
-

கோச்சடையானுக்கு வந்த சிக்கல்!


பொங்கலுக்கே வெளிவர வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால் அப்போது ஏற்பட்ட தியேட்டர் பிரச்னை காரணமாக, இப்போது ஏப்ரல் 11-ந்தேதியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அதே நாளில் வெளியாவதாக இருந்த சில சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் உலகமெங்கிலும் 6 ஆயிரம் தியேட்டர்களில் கோச்சடையானை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்த நேரத்தில் கமலின் விஸ்வரூபம்-2வும் ஏப்ரலில் திரைக்கு வரப்போவதாக கூறப்படுகிறது. தற்போது டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அது சாத்தியப்படும் என்கிறார்கள். அதனால், கடந்த பொங்கல் தினத்தில் அஜீத்தும், விஜய்யும் மோதிக்கொண்டதுபோல் இந்த முறை ரஜினியும், கமலும் மோதிக்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகியிருக்கிறது.

இதற்கிடையே, விக்ரமின் ஐ, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஷாலின் நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களும் ஏப்ரலில் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒரே நேரத்தில் இத்தனை பிரபலங்களின் படங்களும் வெளியானால் தியேட்டர் பிரச்னை பூதாகரமாக வெடித்து விடும் என்பதால், பேச்சுவார்த்தை மூலம் சில படங்களின் ரிலீசை தள்ளி வைக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆண்ட்ரியாவும் கமலும்....?

சர்ச்சை நாயகியான ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் இது பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் என்ன பாடினாலும் அதை காதில் தேன் வந்து பாய்வது போன்று ரசிக்கிறார்கள். அவரது இனிமையான குரல், தான் இசையமைக்கும் படங்களுக்கு வேண்டும் என்பதினால்தான் உதட்டு முத்த பிரச்சனைக்குப்பிறகு ஆண்ட்ரியாவுடன் கா விட்டிருந்த இசையமைப்பாளர் அனிருத் இப்போது பழம் விட்டு விட்டார். அந்த அளவுக்கு ஆண்ட்ரியா மோகம் கோடம்பாக்கத்தில் தலைவிரித்தாடுகிறது.

இந்த நிலையில்தான், தற்போது தரமணி படத்தில் ஒரு ஆங்கில பாடலுக்கு தானே இசையமைத்து எழுதி, பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. இந்த பாடலை கமல்தான் வெளியிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆண்ட்ரியா, கமலுக்கு ஒரு போன்கூட செய்யவில்லையாம். ஒரு மெசேஜ்தான் அனுப்பினாராம் (மேடையில் ஆண்ட்ரியாவேதான் இதை சொன்னார்), அதைப்பார்த்து விட்டு அவரும் வந்து அந்த பாடலை வெளியிட்டார்.

அதையடுத்து கமல் பேசுகையில், இங்கு எல்லோரும் ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசுவதை ஆச்சர்யமாக சொன்னார்கள். ஆனால், விஸ்வரூபம் படத்தில் நடித்தபோதே ஓரளவு பேசுவார்,.அதற்காக நான்தான் அவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தேன் என்று சொல்ல மாட்டேன். அவரது முயற்சிதான் அவருக்கு வெற்றியை கொடுக்கிறது.

மேலும், ஆண்ட்ரியா பாடல் கம்போஸ் செய்வது இப்போதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் எனக்கு விஸ்வரூபம் படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோதே தெரியும். தான் கம்போஸ் செய்ததை செல்போனில் கேட்டுக்கொண்டிருப்பார்.அதை நானும் பலமுறை கேட்டு இசை மழையில் நனைந்திருக்கிறேன். அப்படி நான் கேட்ட பாடல்களில் ஒன்றுதான் இன்று ஆண்ட்ரியாவின் இசையில் வெளியாகியிருக்கும் இந்த பாடல். அவரிடம் இதுபோன்ற இன்னும் ஏராளமான திறமை உள்ளது என்று ஆணட்ரியா பற்றி பேசினார் கமல்.

பாலாவின் புரியாத புதிர்!

டைரக்டர் பாலாவின் படங்களில் நடித்தால் நம்மை பட்டை தீட்டி விடுவார் என்று ஹீரோக்கள் நினைக்கிறார்கள். அதற்கு அடையாளமாக விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நடிகர்களை சொல்லலாம். அவர் படத்தில் நடித்த பிறகுதான் இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நடிகர்கள் ஆனார்கள் என்பதே உண்மை.

அதேசமயம் பாலாவின் படங்களில் நடித்த ஒரு கதாநாயகிகூட சினிமாவில் ஜொலிக்கவில்லை. சேது படத்தில் அறிமுகமான அபிதா அதன்பிறகு இரண்டொரு படங்களில நடித்தவர் பின்னர் சின்னத்திரைக்கு சென்று விட்டார். அதேபோல், பிதாமகனில் நடித்த சங்கீதா-லைலா ஆகிய இருவருக்கும் அதன்பிறகு படம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.

அதேபோல், நான் கடவுளில் நடித்த பூஜாவுக்கும் மார்க்கெட் சரிந்தது. அதையடுத்து, அவன் இவனில் ஜனனி அய்யர், மது ஷாலினி ஆகிய இருவரும் நடித்தனர். இவர்களில் மது ஷாலினியை அதன்பிறகு காணவில்லை. ஜனனி அய்யர் மட்டும் கஷ்டப்பட்டு தாக்குப்பிடித்து வருகிறார். அதேபோல், பரதேசியில் நடித்த வேதிகாவுக்கும் பெரிய அளவில் எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை.

இதனால் தற்போது பாலா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க, மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளை தொடர்பு கொண்டபோது யாருமே சிக்கவில்லையாம். ஹீரோக்களுக்கு செண்டிமென்டாக ஒர்க்அவுட்டாகும் பாலா, எங்களுக்கு ஒர்க்அவுட ஆவதில்லையே என்று எஸ்கேப்பாகி விட்டார்களாம். அதனால்தான், படமே இல்லாமல் வீட்டு மோட்டு வளையத்தைப்பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரேயாவை தூசி தட்டி கொண்டு வந்துள்ளார்களாம். பாலாவின் மீது விழுந்துள்ள இந்த செண்டிமென்டை ஸ்ரேயா மாற்றியமைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...

கமல் சொல்வது சரியா...?

தமிழ் படத்தில் ஆங்கிலம் கலப்பதா? என்று ஒரு கேள்வி நீண்ட காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. தமிழில் படத்துக்கு பெயர் வைத்தால்தான் வரி விலக்கு தருவோம் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது. இதனால் இயக்குனர்கள் இப்போது சங்கத் தமிழ் சொற்களாக தேடிப்பிடித்து படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

ஒன்று கற்றது தமிழ் என்ற படத்தை இயக்கிய ராம், ஆங்கிலவழி கல்வியை அதே படத்தில் சாடிய ராம். தனது அடுத்த படத்துக்கு தங்க மீன்கள் என்று அழகான தமிழ் பெயர் வைத்த ராம். தனது அடுத்த படமான தரமணி விளம்பரத்துக்காக ஆங்கில பாடலை வெளியிட்டுள்ளார். அதன் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் "தமிழ் படத்தில் ஆங்கிலம் கலந்தால் என்ன தப்பு?" என்று கேட்டு அதிர வைத்தார்.

அவர் பேசியதாவது: இங்கு ஆண்ட்ரியாவின் ஆங்கில பாடலை வெளியிட்டிருக்கிறேன். இதை படத்தில் பயன்படுத்தலாம் தவறில்லை. ஆங்கிலம் கிராமத்து வரைக்கும் பரவி இருக்கிறது. எங்க ஊர் பரமக்குடிக்கு போனால் டீக்கடையில் நின்று கொண்டு டேய் அவன் அந்த பொண்ண கிஸ் அடிச்சிட்டாண்டா என்கிறார்கள். கிஸ் என்கிற வார்த்தையை தப்பான செயலுக்காக பயன்படுத்துகிறார்கள். அதற்கு என்னை குறை சொல்லாதீர்கள் (கமல்தான் தமிழ் சினிமாவில் முத்தக் காட்சியை கொண்டு வந்தவர்). ஜாக்கிரதையா இரு என்று சர்வசாதாரணமா சொல்வோம், ஜாக்கிரதை என்பது தமிழ் வார்த்தை இல்லை.

மற்ற மொழி மாதிரி கிடையாது தமிழ். எல்லா மொழியையும் உள்வாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும். ஆங்கிலமும் அப்படித்தான் எல்லா மொழிகளையும் ஏற்றுக் கொள்ளும். தமிழ் சினிமாவில ஆங்கிலம் கலப்பது புதுசும் இல்லை. அது தப்பும் இல்லை. அதனால் தமிழுக்கோ, தமிழ் சினிமாவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றார்.