Wednesday, 29 January 2014

ஹீரோக்களிடையே போட்டி - 'ஜில்லா உனக்கா? எனக்கா?

 'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படம் 'ஜில்லா'. விஜய்யின் போலீஸ் வேடம், மோகன்லாலின் தாதா நடிப்பு என மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான உடன், ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது.

ஆனால், படத்தினைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தெலுங்கிலும் படங்களைத் தயாரிப்பதால் ரீமேக்கையும் நாங்களே தயாரிக்க இருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

சூப்பர் குட் நிறுவனமே தயாரிக்கவிருப்பதால் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நாயகர்கள் தான் நடிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து விசாரித்த போது, "படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறார்கள். ஆனால் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவாகிவிடும்.

ராம்சரண், சீரஞ்சிவி இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மையில்லை. விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டியிடும் நிலையில், மோகன்லால் வேடத்தில் நடிப்பதற்கும் சரியான நடிகர் ஒருவர் வேண்டும்." என்று கூறினார்கள். 

'ஐ' இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள் - ஷங்கர்!

 'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். 

’சிந்துபாத்’ - சிம்புவுக்கா? விக்ரமுக்கா? குழப்பத்தில் செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இரண்டாம் உலகம்’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார்.

இவர் அடுத்து இயக்கும் படத்தை ’ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

செல்வராகவன்– சிம்பு முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

விக்ரமை வைத்து இயக்குவதற்காக செல்வராகவன் ’சிந்துபாத்’ என்ற கதையை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்தார்.

அந்த கதையை தான் இப்போது சிம்புவை வைத்து இயக்க இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

இது என் கதை இது என் அடையாளம் - விஜய்மில்டன்!

ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தான் வரங்களோ தெரியவில்லை. இது என் கதை என் கதை என்று சொல்லி சில குரூப் கோடம்பாக்கத்தில் கும்மி அடிக்க தொடங்கியுள்ளனர்

இந்த காலத்தில் சினிமாவை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் மட்டுமே என்ற நோக்கில் பெரிய பெரிய ஹீரோக்கள் பின்னாடி அலையும் சில பல தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜய்மில்டன் தனக்கும் தன் உயிராய் நேசிக்கும் சினிமாக்கும் இந்திய அளவில் ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகலாக பாடுபட்டு எடுத்த கோலி சோடா படத்தை இது என்னுடைய கதை என்று சொல்லி சில விஷமிகள் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து உள்ளனர் .அது மட்டும் இல்லாமல் கடந்து சில நாட்களாக பேஸ்புக்கில் இதை பற்றி ஒரு பட்டிமன்றமே நடந்து உள்ளது .

இதை கேள்விப்பட்ட விஜய் மில்டன் தன்னுடைய மறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து விஜய் மில்டன் கூறுகையில், எதிர்தரப்பு சொல்வது உண்மை என்றால் என்னை பற்றி கோர்ட்டிலோ அல்லது இயக்குனர் சங்கத்திலோ புகார் கூறி இருக்கலாம். அதை விட்டு பொய்யான செய்தியை இணையதளம் முலம் பரப்பி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறாகள். ஏதுவாக இருந்தாலும் சரி நான் சந்திக்க தயார்,

படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தன வரங்களோ தெரியவில்லை.

இந்த கதையோடு நான் கடந்த இரண்டு வருடகாலம் பயணித்து உள்ளேன். பல துயரங்களுக்கு இடையே இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறேன். நான் ஒன்றை மட்டுமே கூறி கொள்கிறேன் தயவு செய்து விஷமிகள் சொல்லும் விஷயத்தை நம்பாதிர்கள்.

மாதக்கணக்கில் தாடி வளர்க்கிறார் கே.பாலசந்தர்! - உத்தமவில்லனுக்கு!

விஸ்வரூபம்-2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கும் கமல், அடுத்தபடியாக, ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனது நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதாவது நிஜத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருப்பது போன்று, இந்த படத்தில் அவருக்கு நான்கு டீன்ஏஜ் மகள்களாம். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போகிறாராம் கமல்.

அதோடு, இதேபடத்தில் தனது குருவான கே.பாலசந்தரும் நடிப்பதால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் கமல். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று சுற்றிக்கொண்டிருந்த கமலை, ஹீரோவாகும்படி அறிவுறுத்தியவரே பாலசந்தர்தான். சினிமாவில் இயக்குனராக நினைத்தால் ஆட்டோவில்தான் செல்ல முடியும். ஹீரோவானால் காரில் செல்ல முடியும். காரா? ஆட்டோவா? ரெண்டில் எது வேண்டுமென்று நீயே முடிவெடுத்துக்கொள் என்று கமலிடம், அவர் சொன்ன பிறகுதான், தீர யோசித்த கமல், தனது இயக்குனர் கனவை ஓரங்கட்டி வைத்து விட்டு, கதாநாயகனாக ஒரே மனநிலையுடன் களமிறங்கியிருக்கிறார்.

ஆனால், அப்போது தன்னை வைத்து பாலசந்தர் இயக்கும் படங்களில் அவரை நடிக்குமாறு கேட்டுக்கொள்வாராம் கமல். ஆனால், திரைக்குப்பின்னால் இருந்து உங்களையெல்லாம் இயக்கும் வேலையே எனக்கு போதும் என்று மறுத்து விடுவாராம் கே.பாலசந்தர்.

அப்படிப்பட்டவரை இப்போது தான் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க வைக்கிறார் கமல். அதோடு, இந்த படத்திற்காக இப்போதைய நடிகர்கள் முன்கூட்டியே தங்களது கெட்டப்பை சேஞ்ச் பண்ணுவது போல், பாலசந்தரும் மாதக்கணக்கில் தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் வளர்த்திருக்கும் தாடியைப்பார்த்தால், பெரியார், திருவள்ளுவர் போன்றிருப்பதாக சொல்கிறார்கள். ஆக, ஏதோ ஒரு பெருமை வாய்ந்த கதாபாத்திரத்தில் கே.பி நடிக்கப்போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

மலையாளம் செல்ல தயாராகும் ஸ்ருதி ஹாசன்!

 நடிகர் பஹத் பாஸிலுடன் ஜோடி சேரவிருக்கிறாராம் ஸ்ருதி ஹாசன்.

‘அன்னயும் ரசூலும்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் ராஜீவ் ரவியும், ஹீரோ பஹத் பாஸிலும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். ஆனால் இந்த முறை ராஜீவ் ரவி படத்தின் கதையை மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்கிறார். படத்தை நவின் வாசுதேவ் இயக்குகிறார். ஒளிப்பதிவாளரான இவர் ‘டாட்டூ’ என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அழுத்தமாக காலூன்றியுள்ள ஸ்ருதிக்கு, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் மலையாள சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருக்கிறதாம்.

அதனால் இந்தப்படத்திற்கு ஸ்ருதியிடம் இருந்து கிரீன் சிக்னல் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம் இயக்குனர்.

விஜயசேதுபதியின் இலட்சியம் - சிறப்புப் பேட்டி!

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ச்சியாக 4 பம்பர் ஹிட் கொடுத்து டோட்ல் கோடம்பாக்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பவர் விஜய்சேதுபதி. வில்லன்களுடன் மோதல் இல்லை, நடிகைகளுடன் கட்டிப்புடி சண்டையில்லை, தேவையில்லாத பில்டப் இல்லை.ஆனால் நானும் ஹீரோதான் என்று சொல்லும் விஜயசேதுபதி, ஒரு வித்தியாசமான சேதுபதிதான்.

* தொடர் வெற்றிக்கு பின்னால் விஜயசேதுபதியின் நிலை என்ன?

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தபோது, ஒரு சிறிய கேரக்டர் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நான் ஹீரோ ஆவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் என்னையும் ஹீரோவாக்கினார் சீனுராமசாமி சார். தேசிய விருது பெற்ற ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமானது பெருமையாக இருந்தது. அதன்பிறகு நான் கமிட்டான படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அதன்பிறகு பீட்சா. இந்த படங்களில் நடித்தபோது பெரிய எதிர்பார்ப்பில்லை. ஆனால் வித்தியாசமான கதைக்களம். அதனால் நமக்கு நல்லதொரு அடையாளம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. ஆனால், படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றபோது இது நிஜமா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அதன்பிறகு நடித்த படங்களெல்லாமே அடுத்தடுத்து பெற்ற வெற்றி என்னை சொல்லமுடியாத சந்தோசத்தில் தள்ளி விட்டது. அதையடுத்து, இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பயம்தான் எனது இப்போதைய நிலை. அதனால் ஒவ்வொரு படியிலும் கவனமாக பார்த்து ஏறத் தொடங்கியிருக்கிறேன்.

* கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பதேன்?

என்னைப்பொறுத்தவரை இப்போது மட்டுமல்ல எப்போதுமே கதைதான் நாயகன். அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள்தான் நடிகர்-நடிகைகள். மேலும், கப்பல் போன்ற கதையில் ஒரு பயணி போன்று நடிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் நாயகன் என்று சொல்லிக்கொண்டு கப்பல் மாலுமியாக நான் ஆசைப்படவில்லை. இது என் பாணி. அதற்காக மற்றவர்களை நான் குறை சொல்லவில்லை. அது அவர்கள் பாணி. ஆக, மொத்தம் எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். அதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

* பெரும்பாலும் உங்கள் படங்களில முன்னணி கதாநாயகிகள் இடம்பெறுவதில்லையே ஏன்?

நான் செலக்ட் பண்ணும் கதைகள் அந்த மாதிரி. அந்த கதைகளின் கதாபாத்திரமும் பெரிய அளவிலான பிரமாண்ட நடிகைகளை கேட்பதில்லை. எப்படி நான் கதையின் நாயகனாக நடிக்கிறேனோ அதே மாதிரி கதையின் நாயகிகளைத்தான் கேட்கிறது. அதனால் பெரிய நடிகை வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. இது என் முடிவல்ல. என்னை இயக்கிய இயக்குனர்களின் முடிவு. மற்றபடி கதாநாயகி விசயத்திளெல்லாம் நான் தலையிடுவதில்லை. காரணம் அது என் வேலையில்லை. டைரக்டர்கள் சொல்வதைக்கேட்டு நடிப்பதோடு என்னை எல்லையை வைத்திருக்கிறேன்.

* காதல் கதைகளில்கூட நீங்கள் கதாநாயகிகளுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடுவது இல்லையே?

பீட்சா படத்தில் ரம்யா நம்பீசனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்தேன். அதன்பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்தான் முதன்முதலாக ஒரு பாடலில் நடனமாடினேன். அதில் காதலும் உண்டு. என்றாலும், எங்களுக்குள் எதிரும் புதிருமான காட்சிகளாகத்தான் இருந்தது. அதனால்தான் ரொமான்ஸ் பண்ணக்கூடிய காட்சிகள் அதில் இடம்பெறவில்லை. மற்றபடி அந்த மாதிரியான கதைகள் கிடைக்கும்போது கண்டிப்பாக நானும் கட்டிப்பிடித்து டூயட் பாடுவேன்.

* புறம்போக்கு படத்தில் ஆக்சன் ரோலில நடிப்பதாக கூறப்படுகிறதே?

எஸ்.பி.ஜனநாதன் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்து சந்தோசமாக உள்ளது. அதோடு ஆர்யாவுடன் அந்த படத்தில் நடிக்கிறேன். அவரை விட நான் ஜூனியராக இருந்தபோதும் எனக்கும், ஆர்யாவுக்கு இணையான வேடத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், இதில் எனக்கு ஆக்சன் வேடம் என்று சொல்ல முடியாது. ஒரு மாறுபட்ட கேரக்டர். நான் நடித்து வெளியான படங்களில் எப்படி யதார்த்தமாக நடித்திருந்தேனோ அதேபோல் இந்த படத்திலும் ஒரு யதார்த்தமான வேடத்தில் நடிக்கிறேன். ஆர்யா எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

* ஷோலோ ஹீரோவாக நடித்து விட்டு, திடீரென்று மல்டி ஹீரோ கதைகளில் அதிகமாக நடிப்பதேன்?

புறம்போக்கு படத்தில் ஆர்யா, இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு மற்றும் கிருஷ்ணாவுடன் ஒரு படம் என 3 படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இதற்கு முன்பு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி படங்களிலும் இரண்டு ஹீரோ கதைகளில்தான் நடித்திருக்கிறேன். அந்த படங்களில் என்னுடன் நடித்திருப்பவர்கள் பிரபலமில்லாத ஹீரோக்கள் என்பதால் அவர்கள் வெளியில் தெரியவில்லை.
மேலும், நான் திட்டமிட்டு என் ரூட்டை மாற்றவில்லை. எல்லாமே எதிர்பாராதவிதமாக அமைந்ததுதான். என்னிடம் வரும் கதைகளில் நல்லதாக ஓ.கே செய்கிறபோது அதில் எந்த நடிகர்கள் இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எனது கேரக்டர் பிடிக்கிறபட்சத்தில் ஓ.கே செய்து விடுகிறேன்.

* இப்போதுதானே வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.இந்த நேரத்தில் தயாரிப்பில் இறங்கியதேன்?

சினிமாவில் நாமாக திட்டமிட்டால் நடக்காது. நேரம் வரும்போது எப்படி யார் ரூபத்தில் வருமென்று தெரியாது. நமக்கு கிடைப்பது கிடைத்தே தீரும். இது என் அனுபவம். அந்தவகையில் நான் தயாரிப்பாளராக வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒருவர் வெளியில் இருந்து பணம் தருவதாக சொல்லி என்னை முதல்காப்பி அடிப்படையில் சங்குதேவன் படத்தை தயாரிக்க சொன்னார். அதனால் தயாரிப்பும் சினிமாவில் ஒரு முக்கிய அங்கம்தானே என்று இறங்கினேன். ஆனால் பணம் தந்து கொண்டிருந்தவர் திடீரென்று நிறுத்தி விடவே அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. இதைகூட ஒரு அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.

* முன்னணி டைரக்டர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றாலும் அவருக்காக நடிப்பீர்களா?

கதை விசயத்தில் நான் யாரையும் முகத்தைப்பார்த்து கேட்பதில்லை. காதுகளை தீட்டிக்கொண்டு கதைகளை கேட்கிறேன். அது பிடித்திருந்தால் ஓ.கே சொல்வேன். இல்லையேல் அப்புறம் பார்க்கலாம் என்று டீசன்டாக சொல்லி அனுப்பி விடுவேன். இப்படி நான் சொல்வதால் சிலருக்கு என் மீது கோபம் கூட இருக்கலாம். ஆனால் கதை எனக்கு பிடிக்காதபோது நான் என்ன செய்ய முடியும்.

* யாரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறீர்கள்?

நடிப்பு விசயத்தில் நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு என்ன தோணுகிறதோ அதை செய்கிறேன். அதை எப்படி வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர்களுடன் ஆலோசிக்கிறேன். முக்கியமாக யதார்த்தம் மீறாமல் நடிக்க விரும்புகிறேன். மேலும், விஜயசேதுபதி எதையாவது புதிதாக செய்திருப்பார் என்று தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், விஜயசேதுபதி படம் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு படத்துக்குப்படம் மாறுபட்டு நிற்க ஆசைப்படுகிறேன். அதனால் இமேஜ் என்கிற வட்டத்திற்குள் சிக்காமல், சினிமாவில் இருக்கிற காலம் வரை ஒரு மாறுபட்ட கதையின் நாயகனாக வலம்வரவேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொன்விழா காணும் காவியங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!

1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.

எம்.ஜி.ஆர்

1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் வெளிவந்தது. தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். இதில் 5 படங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வந்த ஆண்டாக அமைந்தது. ஒரு படத்தில் சாவித்திரியும் ஒரு படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தாயின் மடியில் தவிர மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.

சிவாஜி

சிவாஜி, கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை ஆகிய 5 படங்களில் நடித்திருந்தார். சாவித்ரி 3 படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துவந்த சரோஜாதேவி புதிய பறவையிலும், தேவிகா ஒரு படத்திலும் ஜோடியாக நடித்தனர். புதிய பறவை சஸ்பென்ஸ் த்ரில்லர் வரிசையிலும், நவராத்திரி 9 வேடங்களில் நடித்த முதல் படம் என்ற வகையிலும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாகின.

ஜெமினி-எஸ்.எஸ்.ஆர்

இவர்கள் இருவரையும் தவிர ஜெமினி கணேசன் வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, பாசமும் நேசமும், ஆயிரம் ரூபாய் என 4 படங்களிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அல்லி, பூம்புகார், உல்லாச பயணம், வழி பிறந்தது என 4 படங்களில் நடித்தார். பூம்புகர் காலத்தை வென்ற காவியமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதுதவிர டி.எம்.சவுந்தர்ராஜன் நடித்த அருணகிரி நாதர், வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திகில் படமான பொம்மை, ஸ்ரீதரின் காதல் காவியமான காதலிக்க நேரமில்லை, நாகேஷ் நடித்த வெள்ளிவிழா படமான சர்வர் சுந்தரம், ஆகிய முக்கியமான படங்களும் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

1964ம் ஆண்டும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசை ராஜாங்கம்தான் இருந்தது. வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தரம், புதிய பறவை, பணக்கார குடும்பம், பாசமும் நேசமும், ஆண்டவன் கட்டளை, தெய்வத்தாய், கை கொடுத்த தெய்வம், காதலிக்க நேரமில்லை, கருப்பு பணம், கலைகோவில், பச்சை விளக்கு, படகோட்டி, படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். கே.வி.மகாதேவன் 9 படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.

பொன்விழாவை கொண்டாடும் அனைத்து படங்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

விஜய் ஜோடியாக தீபிகாபடுகோனே..!





விஜய் ஜில்லா படத்துக்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இருவரும் துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.


 இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்துக்கு பின் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது.


சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற ஹிட் படத்தை டைரக்டு செய்தவர். கதை விஜய்க்கு பிடித்ததால் அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.


ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்ததும் இதன் படப்பிடிப்பை துவக்குகின்றனர். இந்த படத்துக்கு கதாநாயகியாக தீபிகா படுகோனேயை தேர்வு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


தீபிகா படுகோனே கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் இந்தியில் தயாரான சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்து இருக்கிறார்.


 அடுத்து விஜய் ஜோடியாகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சன் + காமடி கலந்த விஜயின் புதுபடம்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாள் படத்தில் இரண்டு வேடங்களில விஜய் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. துப்பாக்கியை மிஞ்சும் ஆக்ஷன் கதை என்றாலும், விஜய்யின் வழக்கமான காமெடி காட்சிகளும் இப்படத்தில் குறைவில்லாத வகையில் ஸ்கிரிப்ட் உருவாகியிருக்கி இருக்கிறாராம் முருகதாஸ்.

அதனால் ஒருவர் ஆக்சன், இன்னொருவர் காமெடி என இரண்டுவிதமான கெட்டப்புகளில் விஜய் நடிப்பார் என்கிறார்கள். அதோடு, இப்படத்தில் இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, ஆக்சன் ரோலில் நடிக்கும் விஜய் தனது உடம்பை கட்டுமஸ்தாக மாற்றப்போகிறாராம்.

மேலும், தலைவா, ஜில்லா படங்களில் எதிர்பார்த்தபடி பஞ்ச் டயலாக்குகள் கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்த முடியவில்லை என்றொரு மனக்குறையில் இருக்கும் விஜய், வாள் படத்தை ரசிகர்களுக்கு நூறு சதவிகிதம் திருப்தியாக கொடுக்க திட்டமிட்டுள்ளதால், ஆக்சன், ஜனரஞ்சகம் என அமர்க்களப்படுத்த தயாராகிவிட்டார்.