Wednesday 29 January 2014

விஜயசேதுபதியின் இலட்சியம் - சிறப்புப் பேட்டி!

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ச்சியாக 4 பம்பர் ஹிட் கொடுத்து டோட்ல் கோடம்பாக்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பவர் விஜய்சேதுபதி. வில்லன்களுடன் மோதல் இல்லை, நடிகைகளுடன் கட்டிப்புடி சண்டையில்லை, தேவையில்லாத பில்டப் இல்லை.ஆனால் நானும் ஹீரோதான் என்று சொல்லும் விஜயசேதுபதி, ஒரு வித்தியாசமான சேதுபதிதான்.

* தொடர் வெற்றிக்கு பின்னால் விஜயசேதுபதியின் நிலை என்ன?

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தபோது, ஒரு சிறிய கேரக்டர் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நான் ஹீரோ ஆவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் என்னையும் ஹீரோவாக்கினார் சீனுராமசாமி சார். தேசிய விருது பெற்ற ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமானது பெருமையாக இருந்தது. அதன்பிறகு நான் கமிட்டான படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அதன்பிறகு பீட்சா. இந்த படங்களில் நடித்தபோது பெரிய எதிர்பார்ப்பில்லை. ஆனால் வித்தியாசமான கதைக்களம். அதனால் நமக்கு நல்லதொரு அடையாளம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. ஆனால், படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றபோது இது நிஜமா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அதன்பிறகு நடித்த படங்களெல்லாமே அடுத்தடுத்து பெற்ற வெற்றி என்னை சொல்லமுடியாத சந்தோசத்தில் தள்ளி விட்டது. அதையடுத்து, இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பயம்தான் எனது இப்போதைய நிலை. அதனால் ஒவ்வொரு படியிலும் கவனமாக பார்த்து ஏறத் தொடங்கியிருக்கிறேன்.

* கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பதேன்?

என்னைப்பொறுத்தவரை இப்போது மட்டுமல்ல எப்போதுமே கதைதான் நாயகன். அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள்தான் நடிகர்-நடிகைகள். மேலும், கப்பல் போன்ற கதையில் ஒரு பயணி போன்று நடிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் நாயகன் என்று சொல்லிக்கொண்டு கப்பல் மாலுமியாக நான் ஆசைப்படவில்லை. இது என் பாணி. அதற்காக மற்றவர்களை நான் குறை சொல்லவில்லை. அது அவர்கள் பாணி. ஆக, மொத்தம் எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். அதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

* பெரும்பாலும் உங்கள் படங்களில முன்னணி கதாநாயகிகள் இடம்பெறுவதில்லையே ஏன்?

நான் செலக்ட் பண்ணும் கதைகள் அந்த மாதிரி. அந்த கதைகளின் கதாபாத்திரமும் பெரிய அளவிலான பிரமாண்ட நடிகைகளை கேட்பதில்லை. எப்படி நான் கதையின் நாயகனாக நடிக்கிறேனோ அதே மாதிரி கதையின் நாயகிகளைத்தான் கேட்கிறது. அதனால் பெரிய நடிகை வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. இது என் முடிவல்ல. என்னை இயக்கிய இயக்குனர்களின் முடிவு. மற்றபடி கதாநாயகி விசயத்திளெல்லாம் நான் தலையிடுவதில்லை. காரணம் அது என் வேலையில்லை. டைரக்டர்கள் சொல்வதைக்கேட்டு நடிப்பதோடு என்னை எல்லையை வைத்திருக்கிறேன்.

* காதல் கதைகளில்கூட நீங்கள் கதாநாயகிகளுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடுவது இல்லையே?

பீட்சா படத்தில் ரம்யா நம்பீசனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்தேன். அதன்பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்தான் முதன்முதலாக ஒரு பாடலில் நடனமாடினேன். அதில் காதலும் உண்டு. என்றாலும், எங்களுக்குள் எதிரும் புதிருமான காட்சிகளாகத்தான் இருந்தது. அதனால்தான் ரொமான்ஸ் பண்ணக்கூடிய காட்சிகள் அதில் இடம்பெறவில்லை. மற்றபடி அந்த மாதிரியான கதைகள் கிடைக்கும்போது கண்டிப்பாக நானும் கட்டிப்பிடித்து டூயட் பாடுவேன்.

* புறம்போக்கு படத்தில் ஆக்சன் ரோலில நடிப்பதாக கூறப்படுகிறதே?

எஸ்.பி.ஜனநாதன் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்து சந்தோசமாக உள்ளது. அதோடு ஆர்யாவுடன் அந்த படத்தில் நடிக்கிறேன். அவரை விட நான் ஜூனியராக இருந்தபோதும் எனக்கும், ஆர்யாவுக்கு இணையான வேடத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், இதில் எனக்கு ஆக்சன் வேடம் என்று சொல்ல முடியாது. ஒரு மாறுபட்ட கேரக்டர். நான் நடித்து வெளியான படங்களில் எப்படி யதார்த்தமாக நடித்திருந்தேனோ அதேபோல் இந்த படத்திலும் ஒரு யதார்த்தமான வேடத்தில் நடிக்கிறேன். ஆர்யா எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

* ஷோலோ ஹீரோவாக நடித்து விட்டு, திடீரென்று மல்டி ஹீரோ கதைகளில் அதிகமாக நடிப்பதேன்?

புறம்போக்கு படத்தில் ஆர்யா, இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு மற்றும் கிருஷ்ணாவுடன் ஒரு படம் என 3 படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இதற்கு முன்பு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி படங்களிலும் இரண்டு ஹீரோ கதைகளில்தான் நடித்திருக்கிறேன். அந்த படங்களில் என்னுடன் நடித்திருப்பவர்கள் பிரபலமில்லாத ஹீரோக்கள் என்பதால் அவர்கள் வெளியில் தெரியவில்லை.
மேலும், நான் திட்டமிட்டு என் ரூட்டை மாற்றவில்லை. எல்லாமே எதிர்பாராதவிதமாக அமைந்ததுதான். என்னிடம் வரும் கதைகளில் நல்லதாக ஓ.கே செய்கிறபோது அதில் எந்த நடிகர்கள் இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எனது கேரக்டர் பிடிக்கிறபட்சத்தில் ஓ.கே செய்து விடுகிறேன்.

* இப்போதுதானே வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.இந்த நேரத்தில் தயாரிப்பில் இறங்கியதேன்?

சினிமாவில் நாமாக திட்டமிட்டால் நடக்காது. நேரம் வரும்போது எப்படி யார் ரூபத்தில் வருமென்று தெரியாது. நமக்கு கிடைப்பது கிடைத்தே தீரும். இது என் அனுபவம். அந்தவகையில் நான் தயாரிப்பாளராக வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒருவர் வெளியில் இருந்து பணம் தருவதாக சொல்லி என்னை முதல்காப்பி அடிப்படையில் சங்குதேவன் படத்தை தயாரிக்க சொன்னார். அதனால் தயாரிப்பும் சினிமாவில் ஒரு முக்கிய அங்கம்தானே என்று இறங்கினேன். ஆனால் பணம் தந்து கொண்டிருந்தவர் திடீரென்று நிறுத்தி விடவே அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. இதைகூட ஒரு அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.

* முன்னணி டைரக்டர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றாலும் அவருக்காக நடிப்பீர்களா?

கதை விசயத்தில் நான் யாரையும் முகத்தைப்பார்த்து கேட்பதில்லை. காதுகளை தீட்டிக்கொண்டு கதைகளை கேட்கிறேன். அது பிடித்திருந்தால் ஓ.கே சொல்வேன். இல்லையேல் அப்புறம் பார்க்கலாம் என்று டீசன்டாக சொல்லி அனுப்பி விடுவேன். இப்படி நான் சொல்வதால் சிலருக்கு என் மீது கோபம் கூட இருக்கலாம். ஆனால் கதை எனக்கு பிடிக்காதபோது நான் என்ன செய்ய முடியும்.

* யாரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறீர்கள்?

நடிப்பு விசயத்தில் நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு என்ன தோணுகிறதோ அதை செய்கிறேன். அதை எப்படி வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர்களுடன் ஆலோசிக்கிறேன். முக்கியமாக யதார்த்தம் மீறாமல் நடிக்க விரும்புகிறேன். மேலும், விஜயசேதுபதி எதையாவது புதிதாக செய்திருப்பார் என்று தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், விஜயசேதுபதி படம் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு படத்துக்குப்படம் மாறுபட்டு நிற்க ஆசைப்படுகிறேன். அதனால் இமேஜ் என்கிற வட்டத்திற்குள் சிக்காமல், சினிமாவில் இருக்கிற காலம் வரை ஒரு மாறுபட்ட கதையின் நாயகனாக வலம்வரவேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment