நடிகர் : அமரன்
நடிகை : சோனு
இயக்குனர் : ஜீவன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : ராஜா முகமது
கிராமத்தில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களோடு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார் நாயகன் அமரன். இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதை தாயார் கண்டித்தும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் தன் நண்பர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்காக ஊருக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகிறார் அமரன். ஆனால், அவரது நண்பரோ, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிவரும் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் என்று கூறி அவரை விட்டுச் செல்கிறார்.
இதனால் மனமுடைந்து போன அமரன், வேலைக்குச் செல்ல முடிவெடுத்து மதுரையில் காய்கறி கடை நடத்திவரும் தன் அத்தையிடம் வேலைக்குச் செல்கிறார். ஒருநாள் இவர் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் செல்கிறார். பணத்தை தராமல் சென்றது போலீஸ்காரர் என்று தெரியாமல் அவரிடம் சண்டை போடுகிறார். அதை தடுக்க வந்த போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார் அமரன்.
போலீஸூடன் சண்டை போட்டதால் அமரனின் அத்தை, அவரை ரெயிலில் சென்னைக்கு அனுப்பி விடுகிறார். ரெயிலில் அமரனை சந்தித்த நாயகி சோனு, அவருடனே ஒட்டிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ரெயிலை தவற விடுகின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து பத்திரிக்கை ஒன்றில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்றதாக செய்தி வருகிறது. இதை அறியும் சோனுவின் தந்தையான ஆஷிஷ் வித்யார்த்தி, இவர்களை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.
மறுநாள் விடிந்த பிறகு சோனு, அமரனிடம் நீ யார்? என்னை எதற்கு கடத்தினாய்? என்று சத்தம் போடுகிறார். அமரன் நடந்ததையெல்லாம் சோனுவிடம் விவரிக்கிறார். இதற்கு சோனு, நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன். இதற்கு சம்மதித்த என் தந்தையை சந்திக்க காதலனை அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு ரெயில் சென்று கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து விட்டார்கள் என்று கூறுகிறார். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் காதலனையும் காணவில்லை என்று கூறி புலம்புகிறாள். காதலனை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறு அமரனை கேட்கிறாள்.
அமரனும், சோனுவும் காதலனை தேடி அவரது வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு தன் அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி காதலனை கொன்றுவிட்டதாகவும், தன்னையும் கொல்ல தேடி வருகிறார் என்பதையும் அறிகிறார் சோனு.
இறுதியில் அமரனும், சோனுவும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது போலீஸ் அதிகாரியான சம்பத்திடம் சிக்கினார்களா? காதலிக்காத இவர்கள் இரண்டுபேரும் காதலித்தார்களா? என்பதே மீதிக்கதை.
அமராவாக நடித்திருக்கும் அமரன், நடனம், சண்டை, காதல் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகி சோனுவுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். வில்லனாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சம்பத் ஆகியோர் அவர்களுக்கே உள்ள பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையில் பாடல்களை ரசிக்கலாம். ராஜா முகமது ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. இயக்குனர் ஜீவன் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘அமரா’ சுமார்
0 comments:
Post a Comment