Friday 28 February 2014

முதலில் கடத்தல்... அப்புறம் காதல்! - விருதுகள் காத்திருக்கின்றன!

ஆறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாய் திரையில் விரிகிறது 'ஹைவே’ பாலிவுட் படம். 'ஜப் வி மெட்’, 'ராக் ஸ்டார்’ படங்களால் கலக்கிய இம்தியாஸ் அலிதான் டைரக்டர். இந்திய சினிமாவின் மிக முக்கியமான 'ரோடு மூவி’ என தாராளமாகச் சொல்லலாம். கடத்தியவன் மீதே காதல்கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் டைப் கதை.


டெல்லியைச் சேர்ந்த பணக்காரரின் மகள், ஹீரோயின் அலியா பட். விடிந்தால் திருமணம் நடக்கும் சூழலில், தன் வருங்காலக் கணவனோடு காரில் ஹைவேஸில் செல்லும் ஆசையைச் சொல்லி இருவரும் கிளம்புகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வைத்து அவளைக் கடத்திச் செல்கிறது ஒரு கும்பல். கடத்தல் கும்பலில் இருக்கும் ரன்தீப் ஹூடா, அவளை வெவ்வேறு இடங்களுக்குத் தன்னுடைய டிரக்கில் வைத்து போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து அழைத்துச் செல்கிறார்.


 ஒரு கட்டத்தில் முதல்முறையாகத் தன் வாழ்க்கையில் முழு சுதந்திரத்தை உணர்கிறார் அலியா. பயணத்தின் நடுவே போலீஸ் செக்போஸ்ட்டில்கூட டிரக்குக்குள் ஒளிந்துகொண்டு ரன்தீப்பையும் அவர் சகாவையும் காப்பாற்றுகிறார் ஆலியா. சிடுமூஞ்சியான ரன்தீப்பிற்கு மோசமான இளம்பிராயம் இருப்பதை உணர்ந்து அன்பு காட்டுகிறார். ராஜஸ்தானின் பாலைவன மணல் வழி நெடுஞ்சாலையில் விரைந்த டிரக், உலகின் கூரையாய் இருக்கும் இமயமலைக்குச் செல்கிறது.


அங்கே அலியாவை இறக்கிவிட்டு ஓடிப்போகிறார் ரன்தீப். அவரை விடாமல் துரத்தி முதன்முறையாக ரன்தீப்பை சிரிக்கவைக்கிறார் அலியா. முடிவில் பனி படர்ந்த மலை உச்சியில் ஓர் அழகான வீட்டில் இருவரும் தங்குகிறார்கள். தாயன்பை அவள் மூலம் முதல்முறையாக உணர்கிறார் ரன்தீப். அழகான காதல் உருவாகிறது. மறுநாள் நாம் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.


'ஹைவே’ படம் இதுவரை காட்டாத அற்புதமான கேமரா கோணங்களைக்கொண்ட படம். 'லகான்’ கேமராமேன் அனில் மேத்தாதான் படத்தின் ப்ளஸ். அலியா பட், ரன்தீப் ஹூடாவின் நடிப்பு அபாரம். அழுக்கு உடையோடு படம் நெடுகிலும் குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷனோடு வளையவரும் அலியா நம் எல்லோருக்கும் நெருக்கமானவராக மாறிவிடுகிறார். இந்த அலியா பட், பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் கடைசி மகள். படத்தில் கரை புரண்டு ஓடும் இமயமலை நதி நீரலைகளுக்கு நடுவே பாறையில் அமர்ந்துகொண்டு சந்தோஷத்தில் வெடித்து அழுவார் பாருங்கள். செம செம எக்ஸ்பிரஷன்.


இசை நம்ம ரஹ்மான். ஏற்கெனவே பாடல்கள் ஹிட். படத்தில் அவரின் பின்னணி இசை பிரமிக்கவைக்கிறது. ஆங்காங்கே 'இம்ப்ளோசிவ் சைலன்ஸ்’-ஆக வரும் அந்த சாலைப் பயணப் பின்னணி இசை வேறு உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்கிறது. அலியா பட்டையும் ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடவைத்து அப்ளாஸ் அள்ளுகிறார் ரஹ்மான்.


கேமராவுக்கு முன் துருப்பிடித்த கம்பி போல நீண்டுகிடக்கும் சாலை. திரும்பத் திரும்ப சாலைப் பயணம் என அலுப்புத் தட்டாமல் இருக்க, ஆங்காங்கே 'ஹால்ட்’ அடித்துச் செல்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதியில் அந்தப் பயணம் இலக்கில்லாமல் போனாலும் இமயமலையில் முடிவடையும்போது இன்னும் கொஞ்ச நேரம் டிரக்கில் பயணித்திருக்கலாமோ என நம்மை நினைக்கவைக்கிறது. வழக்கமான கதைதான். அதைச் சொன்னவிதத்திலும் காட்சிப்படுத்திய விதத்திலும் 'ஹைவே’ நம்மை ஒரு ஜாலி ட்ரிப் போய் வந்த உணர்வைத் தருகிறது.


''மும்பையில் ஒரு ரூமுக்குள் நான் எழுதிய ஸ்கிரிப்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு இந்த ஆறு மாநில சாலைப் பயணத்தைத் தொடங்கவில்லை. நிஜத்திலும் அழுக்கு உடையோடு ஆலியாவும் ரன்தீப்பும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் என்னுடன் பயணித்தார்கள். இமயமலையில் அவர்களிடம் நான் சூழலை மட்டும் சொல்லி விட்டு அவர்கள் அதற்கு ரியாக்ட் செய்வதைப் படம் பிடித்தேன். கிட்டத்தட்ட கேண்டிட் படம் செய்த உணர்வைத் தந்தார்கள் இருவரும்'' என்று நெகிழ்கிறார் இம்தியாஸ்.

விருதுகள் காத்திருக்கின்றன

0 comments:

Post a Comment