Thursday, 30 January 2014

‘கோலி சோடா’ - 2–ம் பாகம் தயார்!

‘கோலி சோடா’ சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

கோலி சோடா படத்தில் நடித்த நடிகர் குழுவினர் நேற்று இரவு ஸ்ரீனிவாசா, ஆனூர் அபிராமி திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

நடிகர்கள் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோருடன் நடிகைகள் சாந்தினி, சீதா மற்றும் பட டைரக்டர் விஜய்மில்டன், சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஆகியோரும் ரசிகர்களை சந்தித்தனர்.

நடிகர்களை பார்த்ததும் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு நடிகர்கள் நன்றி தெரிவித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.

டைரக்டர் விஜய்மில்டன் பேசும் போது, ‘‘இதே நடிகர் குழுவினரை வைத்து கோலி சோடா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த நடிகர்களை எனது கதைக்கு தேர்வு செய்த இயக்குனர் பாண்டிராஜ்–க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

முன்னதாக அபிராமி தியேட்டருக்கு வந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை தியேட்டர் மேலாளர் பாலு தலைமையில் இதயம் நற்பணி இயக்கம் அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.மகாதேவன் மற்றும் திரையரங்க ஊழியர்கள் வரவேற்றனர்.

இதேபோல் ஸ்ரீனிவாசா தியேட்டர் சிவக்குமார், விஜயன், மற்றும் ஆனூர் தியேட்டர் ராமசாமி ஆகியோரும் வரவேற்றனர். 

பார்வதி ஓமனக்குட்டன்! இந்தி பீட்சா நாயகி!

உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார். தமிழில் பெரும் எதிர்பார்ப்போடு பில்லா-2வில் நடித்தார். பில்லா-2 பிளாப் ஆகவே பார்வதியின் கனவு கலைந்தது. இப்போது பேஷன் ஷோக்கள், நடன நிகழ்ச்சிகள் என்று உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஹிட்டடித்த பீட்சாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எதையும் தேடிப்போவதில்லை. கிடைக்கிற வாய்ப்புகளை முழு மனநிறைவோடு செய்கிறேன். இப்போது உலகம் முழுவதும் பேஷன் ஷோக்களுக்கு போய் வருகிறேன். ரசிகர்களை நேரடியாக சந்தோஷப்படுத்தி பார்க்கிற அனுபவம் அது. உலக நாடுகளையும் சுற்றிப் பார்க்கலாம்.

தமிழ் படங்களில் வாய்ப்புகள் அமையாதது வருத்தம்தான். ஆனாலும் பில்லா-2 எனக்கு ரொம்ப பிடித்த படம். ஸ்ரீகாந்த் நடிக்கும் நம்பியார் படத்தில் நானும் ஆர்யாவும் இணைந்து கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறோம். அடுத்து பீட்சா இந்தி ரீமேக்கில் நடிக்கிறேன். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன் என்கிறார் பார்வதி.

இது நம்ம ஆளு - சிம்பு - நயன்தாராவின் புதிய படம்!

சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவின் குடும்ப படத்தில் நயன்தாரா நடிப்பது பற்றி பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் இப்போது படத்துக்கு இது நம்ம ஆளு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி படத்தின் டைரக்டர் பாண்டிராஜ் கூறியிருப்பதாவது: இந்தப் படத்திற்கு முதலில் கதவை திற காதல் வரட்டும், லவ்வுன்னா லவ்வு அப்படியொரு லவ்வு இந்த இரண்டு தலைப்பில் ஒன்றைத்தான் வைக்க முடிவு பண்ணியிருந்தேன். ஆனால் படத்துல நயன்தாரா நடிக்கிறதுன்னு முடிவானதும் இதைவிட பெட்டரா ஒரு தலைப்பு வைக்கணும்னு தீவிரமா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதான் அதுக்கான ஐடியா கிளிக் ஆச்சுது. சிம்பு ஒவ்வொருமுறையும் நயன்தராவை பார்க்குறப்போ "இது நம்ம ஆளு சார்"னு ஃபீல் பண்ணுற மாதிரி படத்துல நிறைய காட்சிகள் இருக்கு. அதையே படத்துக்கு டைட்டிலா வச்சிட்டா என்ன என்று யோசித்தேன். அதுதான் டைட்டில் இது நம்ம ஆளு.

சிம்புவுக்கு ஒரு லவ் பெயிலியராயிடும். கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. அவருக்கு நயன்தாராவை நிச்சயம் பண்ணிடுறாங்க. கல்யாணத்துக்கு 6 மாசம் இருக்கிற நிலையில இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிஞ்சுக்கிட்டு லவ் பண்றாங்க கல்யாணத்துக்கு பிறகு என்னென்ன பிரச்னைகள் வருதுங்கறதுதான் படத்தோட கதை.

சிம்புவும் சரி, நயன்தாராவும் சரி எந்த பிளாஷ்பேக்குக்கும் போகாமல் அவுங்கவுங்க கேரக்டரை அழகா நடிச்சிடுறாங்க. சூட்டிங் ஸ்பாட்டுல நல்ல பிரண்ட்லியா பழகிக்கிறாங்க. சில காட்சிகள் அவுங்களோட பழைய நினைவுகளை கிளர்ற மாதிரி இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே சின்சியராக நடிச்சுடுறாங்க. சில காட்சிகள்ல எப்படி நடிக்கிறதுன்னு கேட்பாங்க. அதான் நிறைய பண்ணியிருக்கீங்களே அதையே பண்ணிடுங்கன்னு சொல்வேன். சிரிச்சிக்கிட்ட நடிச்சு கொடுத்துடுவாங்க என்கிறார் பாண்டிராஜ்.

ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு! டி.டே இந்திப் படம் தமிழில் வெளியாகாது..?

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

இதற்கு ஸ்ருதி ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியில் நான் நடித்த டி.டே படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியிடப்பட இருப்பதாக அறிகிறேன். இதற்கு என் அனுமதியை பெறவில்லை. என்னிடம் தகவலும் சொல்லவில்லை. இது ஒப்பந்தததை மீறுவதாகும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை இப்போது செய்து வருகிறேன். அதுபற்றி விரிவாக பின்னர் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் கமலஹாசன் மகள், குடும்பபாங்கான நடிகை என்ற நல்ல பெயர் ஸ்ருதிக்கு இருக்கிறது. இந்தப் படம் வந்தால் அந்த இமேஜ் மாறும் என்பதால் படம் தமிழில் வெளிவருவதை ஸ்ருதி விரும்பவில்லை என்கிறார்கள்.

Wednesday, 29 January 2014

ஹீரோக்களிடையே போட்டி - 'ஜில்லா உனக்கா? எனக்கா?

 'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படம் 'ஜில்லா'. விஜய்யின் போலீஸ் வேடம், மோகன்லாலின் தாதா நடிப்பு என மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான உடன், ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது.

ஆனால், படத்தினைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தெலுங்கிலும் படங்களைத் தயாரிப்பதால் ரீமேக்கையும் நாங்களே தயாரிக்க இருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

சூப்பர் குட் நிறுவனமே தயாரிக்கவிருப்பதால் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நாயகர்கள் தான் நடிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து விசாரித்த போது, "படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறார்கள். ஆனால் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவாகிவிடும்.

ராம்சரண், சீரஞ்சிவி இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மையில்லை. விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டியிடும் நிலையில், மோகன்லால் வேடத்தில் நடிப்பதற்கும் சரியான நடிகர் ஒருவர் வேண்டும்." என்று கூறினார்கள். 

'ஐ' இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள் - ஷங்கர்!

 'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். 

’சிந்துபாத்’ - சிம்புவுக்கா? விக்ரமுக்கா? குழப்பத்தில் செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இரண்டாம் உலகம்’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார்.

இவர் அடுத்து இயக்கும் படத்தை ’ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

செல்வராகவன்– சிம்பு முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

விக்ரமை வைத்து இயக்குவதற்காக செல்வராகவன் ’சிந்துபாத்’ என்ற கதையை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்தார்.

அந்த கதையை தான் இப்போது சிம்புவை வைத்து இயக்க இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.