Friday, 31 January 2014

'சதுரங்க வேட்டை' சிறப்பு!

 ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில், வினோத் இயக்கி வரும் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் மனோபாலா.

'நாளை', 'சக்கர வியூகம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ். தற்போது 'சதுரங்க வேட்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கிவரும் இப்படத்தை தயாரிக்கிறார் நடிகர் மனோபாலா.

இயற்கையோட சமநிலை தவறும் போது நடக்கிற அழிவு மாதிரி, மனுஷனோட சமநிலை தவறும் போதும் அழிவு நடக்கும், இதுதான் இப்படத்தோட மையக் கரு.

இப்படம் குறித்து இயக்குநர் வினோத், "இங்க பணம் இருந்தால் ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம். எவனையாவது பிடிக்கலைன்னா அடிக்கலாம். பணம் இருந்தால் என்ன வேணா பண்ணலாம்னா, பணம் சம்பாதிக்க என்ன பண்ணால் என்னன்னு நினைக்கிற ஒருத்தனோட கதைதான் இந்த ‘சதுரங்க வேட்டை’.

நல்லவனா வாழ்ந்தால் செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போகலாம். கெட்டவனா வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கத்துல வாழலாம்னு சொல்ற ஹீரோவோட கதையை முழுக்க முழுக்க காமெடியா சொல்றோம்.

புதுமையான வசனங்கள் கலந்து , ஆறு எபிசோடுகளாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும்.

மொத்தத்துல நம்ம சமூகத்து முன்னாடி வைக்கப்படற கண்ணாடி இந்த படம். சிரிக்கவும் வைப்போம், அதே சமயம் சிந்திக்கவும் வைப்போம். உங்களை நீங்களே ‘சதுரங்க வேட்டை’ல பார்க்கலாம்,” என்று கூறியிருக்கிறார். 

நாகேஷ் – நினைவுக் குறிப்புகள்!

தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.

நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.

இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

 “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.

“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.

ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.

இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.

‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.

நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.

டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து

ராமனின் விளைவு கைகொடுத்தது! மருத்துவத்தில் அரிய சாதனை!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

 இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

சும்மா டிப்ஸ்....?


மக்களே.... நிலாவை தொட்டது யாருன்னு கேட்டா டக்குன்னு பதில் சொல்லுவது போல, கிருமிகள் எங்க அதிகமாக இருக்கும்? அப்படின்னு கேட்டா சும்மா யோசிக்காம டக்குன்னு பதில் சொல்லிடுவிங்க...டாய்லெட்டில் தான் இருக்குமுன்னு.  ஒரு விளம்பரத்தில் நம்ம விஜய் ஆதிராஜ் ஒரு பிகர் கூட வந்து ஒரு அக்கா வீட்டுல உள்ள பாத்ருமை கிளின் பண்ணிட்டு போவாங்க...ஆனால் அந்த டாய்லெட்டை விட மோசமான அதிக கிருமிகள் இருக்கும், நாம அதிகமா பயன்படுத்தும் இடங்கள் எது எதுன்னு பாக்கலாமா?.

1. ஹோட்டல்களின் மெத்தை விரிப்புகள்: சில ஹோட்டல்களில் மெத்தை விரிப்புகளை தினமும் மாத்த மாட்டாங்க. இதுக்கு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள் கூட விதிவிலக்கு இல்லை. லேட்டஸ்டா இது போல ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் ரொம்ப நாளைக்கு பின்ன பாக்ஸர் மைக் டைசனின் டி என் ஏ வை ஒரு மெத்தை விரிப்புலருந்து எடுத்தாங்க. அந்தளவுக்கு துவைக்காத மெத்தை விரிப்புகளில் மோசமான கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லத்தான் இந்த உதாரணம். அதனால ஹோட்டலுக்கு போனா துவைக்காத மெத்தை விரிப்புகள் இருந்தா உடனே மாத்த சொல்லுங்க.

 2. டாய்லெட் இருக்கும் அறையின் தரை: நாம வெளி இடங்களுக்கு போகும் போது..நம்ம பையை பக்கத்துலையே வச்சுப்போம்..சில சமயம் டாய்லெட் போனா கூட அங்கயும் எடுத்துட்டு போயி டாய்லெட் பக்கத்துல தரையில் வச்சுப்போம். அதுமாதிரி செய்யாதிங்க...ஏன்னா? டாய்லெட்டை விட டாய்லெட் தரையில்தான் அதிக கிருமிகள் இருக்காம்.

3. ஏ டி எம் மெசின்: கிருமிகள் அதிகமா இருக்கதுல மூனாவது இடம் ஏ டி எம் மெசினின் தொடு திரையும் key போர்டுதான். இந்த  key போர்டுல பூசப் பட்டிருக்கும் வேதிப் பொருள் ஒரு ஸ்லொவ் பாய்சனாம். மெசினை பயன்படுத்திய உடன் விரலை கண்ணு காது வாயில வச்சுடாம உடனே கழுவும் வேலைய பாருங்க.

4. ஆபீஸ் டெலிபோன்: பல பேர் பயன்படுத்தும் ஆபீஸ் டெலிபோனில் 25000 வரையான எண்ணிக்கையில் கிருமிகள் இருக்கிறதா அமெரிக்கா பல்கலை கழகம் நடத்திய ஆய்வு சொல்லுது.

5. ஹோட்டல் மெனு கார்ட்ஸ்: இந்த மெனு கார்ட்சை அப்போபோ ஆன்டி பாக்டீரியா திரவம் வச்சு தொடைக்கணும்...ஆனால் யாரும் செய்யவதில்லை. அதை தொட்டுட்டு சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டா கிருமிகள் நேரா வயித்துக்குத்தான்.

6. ஹோட்டல் டேபிள் வேர்ஸ்: சாப்பாட்டு மேசையில்  உப்பு, சக்கரை,ஊறுகா வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் ஏகப்பட்ட கிருமிகள் இருக்காம்.

7. ட்ராலிகள்: பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் அல்லது ஏர்போர்டில் ட்ராலிகள் வச்சுருப்பாங்க...அந்த ட்ராளிகலிலும் கிருமிகள் அதிகம்.சில பேர் குழந்தைகளை அதுல உக்கார வச்சு தள்ளிகிட்டு போவாங்க அதுமாதிரி செய்யாதிங்க.

8. கார்: காரில் உள்ள ஸ்டியரிங் வீலில் கிருமிகள் அதிகம். சில பேர் சாப்பிட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவாங்க. பின்ன ஸ்டியரிங் வீலில் இருக்கும் கிருமிகள் அப்படியே வயித்துக்குத்தான் ஸ்ட்ரெயிட்டா...

9. சமையல் அறை: சமைக்கற இடம், பாத்திரம் கழுவும் பேசணில் அதிகமா கிருமிகள் இருக்குமுன்னு எல்லாருக்கும் தெரியும். சுத்தமா வச்சுக்கணும் என்பதும் தெரியும்தானே..

10.ஜிம்: பல பேர் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்களில் கிருமிகள் இருப்பது இயற்கைதானே.

11. பூங்கா: பறவைகள் எச்சம் இருக்கும்... பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும்...ஊஞ்சல், சறுக்கு மரம், சாய்ந்தாடும் பலகைகளில் கிருமிகள் எப்போதும் இருக்கும்.

இதுல சொன்ன நிறைய இடங்களுக்கு நாம போயித்தான் ஆகணும். நாம போகும் அந்த இடங்களையும் அந்த இடத்தில் உள்ள பொருள்களையும் நாம கழுவிக்கிட்டே இருக்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன் படுத்திய பின்னரும் நம்ம கைய கழுவிக்கலாம்தானே....        

விஜய் இரட்டை வேடம் பலனளிக்குமா...?

‘துப்பாக்கி’ ஹிட்டுக்குப் பிறகு விஜய் – முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்.

சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில்’எதிர்நீச்சல்’ சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘வாள்’ என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது இல்லையாம்.

‘அதிரடி’, ‘வாள்’ என்று படத்துக்கு டைட்டில் வைக்கவில்லை. கூடிய விரைவில் அறிவிக்கிறோம் என்று படக்குகுழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில்  விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

ஆக்ஷன் ஹீரோ, காமெடி ஹீரோ என இரு வேடங்களிலும் பட்டையக் கிளப்பப் போகிறாராம்.

‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக பன்ச் வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறதாம்.

தல கொடுத்த ஷாக்...!

தல போல வருமா! தல போல வருமா! என்ற வரும் பாடலை போலவே கோடம்பாக்கத்தில் தலயை பத்தி தான் இன்று பேச்சு.
தலயை வைத்து பில்லா, ஆரம்பம் படத்தை எடுத்த விஷ்ணுவர்தன் இப்போது தலயின் மிக நெருங்கிய நண்பர்.

ஆரம்பம் படம் மிக பெரிய வெற்றி விஸ்வரூபத்தை எடுத்தாலும் விஷ்ணுவர்தனுக்கு சொல்லும் படியாக வாய்ப்புக்கள் வரவில்லை என்பது உண்மை.

சரி நமக்கு தான் ஆர்யா இருக்கானே என்று அவருக்கு கதை பண்ணி கொண்டு இருக்க, சமிபத்தில் தல விஷ்ணுவர்தன்யை கூப்பிட்டு மறுபடியும் நம்ம ஒன்னு சேரலாம் விஷ்ணு  என்று சொல்லி ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்டை கொடுத்தார்.

என்ன தல சொல்றிங்க என்று அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையாம் விஷ்ணுவர்தன்

ரஜினி ரகசிய பயணம் சென்றுள்ளார்!

 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்த் தனது அண்ணன், நெருங்கிய நண்பர்களை சந்தித்தார். தான் படித்த பள்ளிக்கூடம் உள்பட பிடித்த இடங்களுக்கு ரகசியமாக சென்று வந்தார்.

நேற்று காலை அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். இந்த‌ தகவலறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடீரென வீட்டின் முன்பு குவிந்து, ஆரவாரம் செய்தனர். ரஜினி வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

பிறந்து வளர்ந்த பெங்களூருக்கு ரஜினி காந்த் அடிக்கடி ரகசியமாக வந்துபோவது வழக்கம். கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெங்களூர் வருவதை குறைத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவர‌து அண்ணன் சத்தியநாராயணா பெங்களூரில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது நெருங்கிய நண்பர்களை கூட சந்திக்காமல், உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் கடந்த 27-தேதி ரஜினி தனது நண்பர்கள் 3 பேருடன் ரகசியமாக பெங்களூர் வந்தார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தன‌து இல்லத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இருப்பினும் முதல் வேலையாக, 28-ம் தேதி காலை சத்திய நாராயணா வீட்டிற்கு சென்றார்.

ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். அனைவரோடு பேசி மகிழ்ந்த அவர், தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.

படித்த பள்ளியை வலம் வந்தார்

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் கவிப்புரம் குட்டஹள்ளி மண்ணை மிதிக்காமல், திரும்ப மாட்டார். ஏனென்றால் அவர் படித்த மாதிரி கன்னட தொடக்கப்பள்ளி, அவரின் இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோயில், உயிர் நண்பன் ராஜ் பகதூர் வீடு என அனைத்தும் அங்குதான் உள்ளது. மாறுவேடத்தில் வலம்வந்ததால் நெருக்கமானவர்களால்கூட ரஜினியை அங்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, கவிப்புரம் மாதிரி கன்னட தொடக்கப்பள்ளியை ரஜினி பார்த்தார். இந்த‌ பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு ரூ.1.53 கோடி செலவில் நவீன வசதிகளோடு புதுப்பித்து வருகிறது.

வறுமையில் வாடிய தனது ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிற்கு சமீபத்தில் பெரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, அவரது கண்ணீரை ரஜினி காந்தி துடைத்தார். அப்போது ஆசிரியையிடம் தொலைப்பேசியில் பேசிய ரஜினி,' பெங்களூர் வரும்போது நிச்சயம் வீட்டிற்கு வருகிறேன்'என உறுதியளித்தார்.

இப்போது பெங்களூர் வந்த ரஜினி உங்களை சந்தித்தாரா என்று ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிடம் கேட்டோம். 'இல்லை. சிவாஜிக்கு(ரஜினியின் இயற்பெயர்) நிறைய வேலைகள் இருக்கும். அதனால்தான் வரவில்லை.அடுத்தமுறை நிச்சயம் வருவார். இல்லாவிட்டால் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு வருவார்''என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் அவருடைய நிழலாக இருப்பவர், உயிர் நண்பர் ராஜ் பகதூர் தான். ரஜினியோடு பள்ளியில் ஒன்றாக படித்தது, பேருந்தில் அவர் நடத்துநராக இருந்த போது ஓட்டுநராக இருந்தது ராஜ் பகதூர் தான்.

இந்த முறை கன்னட படமான 'ஒன்வே' வெளியூர் படப்பிடிப்பில் ராஜ்பகதூர் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் ரஜினியோடு நேரத்தை செலவிட முடிய‌வில்லை.

அதிகாலையிலேயே ரசிகர்கள்!

வழக்கமாக ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் வீட்டில் தங்காமல், வெளியே சுற்றுவார்.ஆனால் இந்த முறை அதிகமாக வீட்டிலே இருந்தார். நேற்று அதிகாலை 6 மணிக்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு முன்பு கூடி 'தலைவா..தலைவா..'' என உற்சாகமாக ஆரவாரமிட்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பல ரசிகர்கள் ரஜினி வீட்டின் மதில் சுவருக்குள் ஏறிக் குதித்தனர்.

மந்த்ராலயத்திற்கு கிளம்பிய ரஜினி

ஒரு கட்டத்தில் ரசிகர்க‌ளின் குரல் அக்கம் பக்கத்து வீட்டாரையும் விழித்தெழ செய்தது. இதனால் ரஜினி தனது வீட்டின் பால்கனிக்கு வந்தார். குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து வணங்கினார். அனைவரையும் பத்திரமாக வீட்டுக்கு போகுமாறு சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார். ரசிகர்கள் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் ரஜினி வீட்டை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரை மறித்து பேட்டி கேட்டார். 'பேட்டியெல்லாம் வேண்டாம்.வழக்கம்போல சும்மாதான் பெங்களூர் வந்தேன்'' என கூறிவிட்டு தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

ரஜினி மந்த்ராலயத்திற்கு சென்று இருப்ப‌தாக அவருடைய வீட்டில் இருந்தவர்கள் கூறினர்.