Saturday, 8 March 2014

‘வீரன் முத்துராக்கு’ வாகை சூடும். - திரைவிமர்சனம்!


நரேனும், சண்முக சுந்தரமும் பக்கத்து பக்கத்து கிராமத்தின் தலைவர்கள். 30 வருஷத்துக்கு முன்னால் நடந்த சண்டையில் சண்முக சுந்தரத்தின் ஒரு காலை நரேன் உடைத்துவிடுகிறார். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் பகை உண்டாகிறது.

இவர்களது மகன்கள் வளர்ந்து பெரியவர்களானதும், இவர்களுக்குள் நடக்கும் சிலம்பு சண்டையில் நரேனின் மகனான நாயகன் கதிர் வெற்றி பெறுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த சண்முக சுந்தரம் நரேனை பழிதீர்க்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

நரேனின் ஊரில் ஏதாவது கலவரத்தை தூண்டி நரேனை பழிதீர்க்க பார்க்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. ஒருநாள் நரேன் இவர்கள் ஊர் வழியாக செல்லும் பேருந்தை வழிமறிக்கும் நாயகன், அந்த பேருந்தில் பயணம் செய்யும் நாயகி லியா ஸ்ரீயை பார்த்ததும் காதல்வயப்பட்டு விடுகிறார். நாளடைவில் நாயகியும் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார். லியாஸ்ரீ சண்முக சுந்தரத்தின் தங்கையின் மகள்.

இந்நிலையில், நரேன் கொலை செய்யப்படுகிறார். மாடு முட்டிதான் அவர் இறந்தார் என போலீஸ் அந்த கொலையை மூடி மறைக்கிறது. தனது தந்தை இறந்த சோகத்தில் ஊரில் வாழப் பிடிக்காத நாயகன் காட்டுக்குள் சென்று வாழ்ந்து வருகிறார்.

நாயகிக்கும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர். இதுபிடிக்காத நாயகி, நாயகனைத் தேடி காட்டுக்குள் செல்கிறாள். இதை அறிந்த சண்முகசுந்தரம் அவளை பின்தொடர்ந்து சென்று நாயகியை கொன்று விடுகிறார்.

சித்தப்பா நமோ நாராயணனும், சண்முக சுந்தரமும் சேர்ந்துதான் தனது தந்தையை கொன்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. தன் தந்தை மற்றும் காதலி சாவுக்கு காரணமானவர்களை நாயகன் பழிதீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கதிர் சண்டைக் காட்சிகளிலும், தந்தையையும், காதலியையும் பறிகொடுத்து சோகத்தை காட்டும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். எதார்த்தமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகி லியாஸ்ரீக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும், குறைவான காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார்.

நரேனும், சண்முக சுந்தரமும் ஊர் தலைவர்களாக பளிச்சிடுகிறார்கள். நரேன் நடிப்பில் சிகரம் தொடுகிறார். சண்முக சுந்தரம் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நரேனின் தம்பியாக வரும் நமோ நாராயணனும் நடிப்பில் மிளிர்கிறார்.

இரண்டு தலைமுறை கதைகளை படத்தில் காட்டியிருக்கும் இயக்குனர், வன்முறையை ரொம்பவும் கொடுமையாக காட்டாமல் திரைக்கதையில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றைய தலைமுறைகளை இந்த படம் திருப்திபடுத்துமா? என்பது சந்தேகமே.

கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஜி.எஸ்.பாஸ்கர் ஒளிப்பதிவில் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அருமை.

காதலை உணர்ந்தேன் - திரைவிமர்சனம்!

வறுமையில் இருக்கும் நாயகிக்கு படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடிகார அப்பாவால் தனக்கு எதுவும் வாங்கித்தர முடியவில்லை என நினைத்து வருந்துகிறாள்.

அப்போது, அவளது தோழி நாயகிக்கு பெரிய பணக்கார பையனாக பார்த்து காதலித்தால், அவன் உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கித் தருவான் என்று அறிவுரை கூறுகிறாள்.

முதலில் இதற்கு மறுக்கும் நாயகியை, தான் காதலிப்பதால் தனக்கு என்னென்ன நன்மை உண்டாகிறது என்பதை எடுத்துக்கூறி அவளை காதல் செய்ய வைக்க ஒப்புக்க வைக்கிறாள் தோழி.

அதன்படி, அதே ஊரில் இருக்கும் நாயகனை காதலிக்குமாறும் தோழி யோசனை கூறுகிறாள். நாயகியும் அவனிடம் வலியபோய் தன் காதலை சொல்கிறாள். ஆனால், அவனோ இவளை வெறுத்து ஒதுக்குகிறான். இறுதியில், அவனை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறாள்.

காதலிக்க ஆரம்பித்தால் தனக்கு தேவையானதை அவனிடமிருந்து எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நாயகியின் ஆசை நிறைவேறாமல் போகிறது. தான் கேட்ட எதையும் தனது காதலனால் வாங்கித்தர முடிவதில்லை.

இந்நிலையில், ஒருநாள் நாயகன் அவனது தாத்தாவை பார்க்க 3 நாள் பயணமாக வெளியூர் செல்கிறான். அந்த நேரத்தில் நாயகியின் தோழி வீட்டுக்கு வரும் அவளது முறைமாமன் நாயகியை பார்க்கிறான். பார்த்ததும் அவள்மீது காதலில் விழுகிறான். அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். அவளும் எதையும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாள். ஒருநாள் தோழியின் முறைமாமன் நாயகியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளிடம் கூறுகிறான்.

இறுதியில் நாயகி தனக்கு காதல்தான் முக்கியம் என்பதை உணர்ந்து தோழியின் முறைமாமனை உதறித் தள்ளினாளா? அல்லது தான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தருபவன்தான் முக்கியம் என்று தோழியின் முறைமாமனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே மீதிக்கதை.

கொஞ்சம் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிவிடலாம் என்பதற்கு இதுமாதிரியான படங்கள் ஒரு சிறு உதாரணம். சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் தயாரிப்பு சங்கங்கள் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வந்தால் கண்டிப்பாக இப்போது தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்கூட இனிமேல் தியேட்டருக்கு வர தயங்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இப்படத்தின் லொக்கேஷன்களுக்கு இயக்குனர் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. வீட்டு மொட்டை மாடி, முற்றம், ஒற்றையடி பாதை என மாறி மாறி மூன்று லொக்கேஷன்களிலேயே படம் முழுவதையும் எடுத்திருக்கிறார்.

அதேபோல், நாயகன், நாயகியைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் ஒரே உடையிலேயே வந்து போகிறார்கள். காதலிக்காக நாயகன் திருடும் காட்சியில், அவர் திருடவேண்டும் என்பதற்காகவே அனைவரும் பணத்தை அவருக்கு முன்னால் வைத்துவிட்டுப் போவதுபோல் காட்சிப்படுத்திய விதம் கொடுமையிலும் கொடுமை.

நாயகன், நாயகி முகங்களை பார்த்து இவர்களுக்கு எதற்கு டூயட் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. பாடல் வைத்தால் இசைமைப்பாளருக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘சித்தாட கட்டிக்கிட்டு’ ‘வெண்ணிலா ஓ வெண்ணிலா’ போன்ற அழகான பழைய பாடல்களுக்கு இந்த கேவலமான மூஞ்சிகளை ஆடவிட்டு அந்த பாடல்களை கெடுத்ததோடு, நமக்கும் வெறுப்பை வரவழைத்திருக்கிறார்கள். அதற்கு பாடல்களே வைக்காமல்கூட இருந்திருக்கலாம்.

கதாபாத்திரங்கள் தேர்வு தொடங்கி, ஒவ்வொரு காட்சி எடுத்தவரைக்கும் படம் முழுக்க சொதப்பல்தான். கிரேன் மனோகர் 4 பேருடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கோபத்தை வரவழைத்திருக்கிறார். தஷியின் பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. 

எதிர்வீச்சு - திரைவிமர்சனம்!

மலேசியாவில் பிரபலமாக இருக்கும் புட்சால் எனப்படும் இன்டோர் புட்பால் விளையாட்டை பற்றிய படம். மலேசியாவில் நடக்கும் இந்த விளையாட்டில் பிளாக் ஹார்ஸ் சாதாரண அணியாக இருந்து முன்னேறி வருகிறது.


அந்த அணியின் முக்கிய வீரர் ஹீரோ இர்பான். இந்த அணி ஸ்பான்ஸர்ஸ் கிடைக்காமல் தள்ளாடுகிறது. சின்னி ஜெயந்த், சிங்க முத்து அந்த அணிக்காக ஸ்பான்ஸர் பிடிக்க அலைகிறார்கள். அங்கு நடக்கும் போட்டி ஒன்றில் மலேசியாவின் நம்பர் ஒன் அணியோடு இவர்கள் மோதுகிறார்கள்.


அந்த அணியை நடத்தும் மலேசியாவின் பெரிய பணக்காரர் இறுதிப் போட்டிக்கு முன் இர்பானை கடத்தி ப்ளாக் ஹோர்ஸ் அணியை பலவீனமாக்குகிறார். இறுதிப் போட்டியில் பிளாக் ஹோர்ஸ் அணி வென்று மலேசியாவின் சாம்பியனாக ஆனதா? என்பதே முடிவு.

ஹீரோ இர்பான் துடிப்பாக இருக்கிறார். விளையாடும் காட்சிகளில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரைப் போல் உற்சாகமாக இருக்கிறார். மற்றபடி பலவீனமான காட்சிகளில் எல்லோரும் ஏதோ நேரத்தை கடத்த வந்து போவதுபோல் இருக்கிறார்கள்.


நாயகி சாய்னா அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதிலும் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், அதுவரைக்கும் தியேட்டரில் யாரும் இருப்பார்களா? என்பது சந்தேகமே.


சின்னி ஜெயந்த், வையாபுரி, சிங்கமுத்து என காமெடி பட்டாளம் இருந்தும் சிரிப்பு வரவில்லை. அவர்களே விழுந்து விழுந்து சிரித்துக் கொள்கிறார்கள். நளினியும் அவ்வப்போது வந்து போகிற மாதிரி கதாபாத்திரம்தான். இவரை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம்.


மிக மோசமான திரைக்கதை, பலவீனமான காட்சிகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மோசமான இயக்கத்தில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். பிர்லா போஸ் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் மலேசியாவையும், புட்சால் விளையாட்டையும் காட்டியிருக்கிறார்கள். விளையாட்டு காட்சிகளில் மட்டும் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. 

இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் - ஹன்சிகா!!

எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது, கலகலப்பாக குஷி மூடில் வளைய வருகிறார்.


மேலும், தமிழில் நம்பர்-ஒன் குதிரையாக இருந்தவரின் மார்க்கெட் படிப்படியாக இறங்கி வந்த நிலையில், தற்போது விக்ரமின் ராஸ்கல், ஆர்யாவின் மீகாமன் படங்கள் புக்காகியிருப்பதோடு, அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் ஹன்சிகா.


இப்படி சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்ட மறுகனமே, ஹன்சிகாவின் கால்சீட் டைரி நிரம்பத் தொடங்கியிருப்பதற்கு முக்கிய காரணமே அவரது தாய்குலம் மோனா மோத்வானிதானாம். சிம்பு-ஹன்சிகாவின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த அவர், இப்போது காதல் டிராப்பாகிப்போனதும், சில முக்கிய டைரக்டர் மற்றும் ஹீரோக்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரியப்படுத்தியிருக்கிறார்.


அதோடு, வீழ்ந்து கிடக்கும் ஹன்சிகாவின் மார்க்கெட்டை நீங்கள்தான் சீர்படுத்த வேண்டும் என்றும் கனிவான வேண்டுகோளை வைத்தாராம். அதையடுத்துதான், ஹன்சிகா தாய்குலத்தின் வேண்டுகோளை தாழ்பணிந்து நிறைவேற்றும் பணிகளில் மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் சீரியசாக இறங்கியுள்ளார்களாம்.


அதனால்தான், தனது மார்க்கெட் கூடிய சீககிரமே கிடுகிடுவென்று உயர்ந்து தான் விட்ட இடத்தை எட்டிப்படித்து விடுலாம் என்ற நம்பிக்கை ஹன்சிகாவுக்கு இப்போது வந்துள்ளதாம். அதையடுத்துதான் அவர் முகத்தில் இத்தனை சந்தோசமாம். அதனால் காதல் முறிவைப்பற்றி யாராவது துக்கம் விசாரிப்பது போன்று விசாரித்தால், முன்பை விட இப்போதுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லி அவர்களின் வாயடைத்து விடுகிறார் ஹன்சிகா.

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி!

தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும்.                                                                                                  

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது.


திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது.


அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.


இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......


இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.


இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.

பெண்களே உங்கள் அக்குள் கருமையாக இருக்கின்றதா? கவலை வேண்டாம்!

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.

05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

08. உருளைக்கிழங்கு

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம். 

சிவப்பு விளக்கு நல்லதாம் !

இரவுப் பணிகளின்போது அலுவலகத்தில் சிவப்பு விளக்கு எரிவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


வெள்ளை எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீல வெளிச்சம் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்றும், அதற்கு அடுத்தபடியாக தீங்கு விளைவிக்கக் கூடியது வெள்ளை நிற வெளிச்சம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


 அதே நேரம், சிவப்பு விளக்கு வெளிச்சத்திலிருந்த வெள்ளை எலிகளுக்கு, மிகக் குறைந்த அளவே மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் தோன்றின.


அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ராண்டி நெல்சன் கூறும்போது, “”இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கு மனச் சோர்வு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


வெள்ளை நிற வெளிச்சத்தைப் போல் சிவப்பு நிற வெளிச்சம் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில்லை என்ற எங்கள் ஆய்வு முடிவுகள் அவர்களுக்கு நல்ல தீர்வைத் தரும்” என்று தெரிவித்தார்.