Saturday, 15 March 2014

மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! - ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி!

என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன், என்று ரஜினியுடனான தன் சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.


தன் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியுடன் இன்று காலை போயஸ் கார்டன் சென்ற தயாநிதி அழகிரி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.


மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! - ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி


முக அழகிரியுடன் நீண்ட நேரம் ரஜினி பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முக அழகிரி, ரஜினியுடன் பேசியது மனதுக்கு நிம்மதியாக இருந்தது என்றார். மேலும் தன் மகனுக்கு ரஜினியின் ஆசியைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த தயாநிதி அழகிரி, "என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன். இவரைப் போன்ற ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்க," என்று கூறியுள்ளார்.


மேலும், தான் சிறுவனாக இருந்தபோது, இதே போல தந்தை அழகிரியுடன் போய் ரஜினியைச் சந்தித்த படத்தை வெளியிட்டு, "அன்று.. இன்று.. என்றும் அதே இனிமையான சூப்பர் ஸ்டார்," என்று கூறியுள்ளார்.

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்...!

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்...

தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்தும் தொப்பை குறையவில்லையா? ஒரு வேளை நீங்கள் எந்த பயிற்சியையாவது செய்ய மறந்துவிட்டீர்களா? அப்படியெனில் மேற்கொண்டு படித்தால் நிச்சயம் தெரிந்துவிடும்...

அடி வயிற்று கொழுப்பை கரைக்க எந்த விதமான தனிப்பட்ட பயிற்சியும் இல்லாத பட்சத்தில், இந்த கட்டுரை எப்படி இத்தகைய கொழுப்பு உருவாகிறது என்பதையும், அதை எப்படி கரைக்கலாம் என்றும் உங்களுக்கு தெளிவாக விளக்கும்.

முக்கியமாக கீழ்வரும் சில குறிப்புகள் நீங்கள் செய்யும் பயிற்சியை நன்கு செய்ய உதவும். சரி, அது என்னவென்று பார்ப்போமா...

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்...

எளிமையானதாகவும் சுலபமானதாகவும் உங்கள் பயிற்சியை துவங்குங்கள். உதாரணத்திற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாமல் உங்களால் வெகு தூரம் சைக்கிள் பந்தயத்தில் செல்ல முடியாது. அது போல துவக்கத்தில் எளிதான பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள் - ஒரு பலகையை 20 நொடிகள் பிடித்துக் கொண்டோ அல்லது 10 முறை க்ரன்ச் (Crunch) பயிற்சியையோ செய்து வாருங்கள்.

பயிற்சி செய்வதற்கு முன் தயார் செய்வது பலர் பயிற்சி செய்வதற்கு முன் முறையாக தங்களை தயார் செய்து கொள்ள தேவையில்லை என்று நினைத்துக் கொண்டு, தங்களை சரியான முறையில் தயார் செய்து கொள்வதில்லை. கடினமான பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைகளில் வலியும், காயங்களும் வீக்கங்களும் ஏற்படலாம். ஆகையால் பயிற்சிக்கு முன் 'வார்ம் அப்' செய்வது, உடலின் தசைகளில் காயங்கள் ஏற்படுவதை தடுக்கும். உதாரணமாக, சிறிது தூரம் விரைவாக நடப்பது, குனிந்து உங்கள் பாதங்களை மெதுவாக தொடுவது, மூச்சை இழுத்து விடுவது, இடுப்பை வளைத்து சில பயிற்சிகள் மெதுவாக செய்வது சிறந்ததாகும். இச்செயல்கள் உங்களை வயிற்று பயிற்சிக்கு தயார்படுத்தும்.

சுவாசம் வயிற்று பயிற்சியின் போது முக்கிய தசைகள் நன்றாக செயல்பட ஆக்ஸிஜன் இன்றியமையாததாகும். எனவே மூச்சை அடக்கக் கூடாது. பயிற்சியின் போது எளிமையான நேரங்களில் மூச்சை இழுக்கவும், அதுவே கடினமாக இருக்கும் நேரங்களில் மூச்சை வெளியே விடவும் வேண்டும். உதாரணமாக, க்ரன்ச் பயிற்சியில் மேல் எழும் போது மூச்சை வெளியே விட வேண்டும்.

கவனம் தேவை இக்கனம் 'பயிற்சியின் போது தசைகள் மட்டும் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. உங்கள் மனமும் பயிற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் பயிற்சியின் போது டி.வி பார்ப்பதை தவிர்த்து தசைகள் மீது கவனம் செலுத்துங்கள். தசைகள் நகர்ந்து, விரிவடைவதையும் சுருங்குவதையும் உணருங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

சகலகலா வல்லவராகுங்கள் தட்டையான வயிற்றைப் பெற எல்லா பக்கங்களிலும் தசைகளை நகர்த்தி பயிற்சி செய்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம். க்ரன்ச் பயிற்சியில் மட்டும் கவனம் செய்யாதீர்கள். வக்ராசனா போன்று உடம்பை வளைக்கும் மற்றும் திரும்பும் விதமான பயிற்சிகளையும் செய்யலாம்.

சமநிலை வலிமையான வயிற்றைப் பெற உங்கள் வழக்கான பயிற்சியில் சில பாலன்ஸ் செய்யும் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒற்றை காலில் நின்று மற்றொரு காலை தொடையின் மீது வைத்துக் கொள்வது, கைகளை தலைக்கு மேல் வைத்து உள்ளங்கைகளை தொடும் வண்ணம் வைத்துக் கொள்வது என 'விரிக்காசனா' போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.

ஓய்வு எடுத்தல் உங்களின் பயிற்சி முழுமையடைய போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வயிற்று பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்வதால் பலன் பெற முடியாது. ஓய்வு எடுப்பதால் தசைகள் மீண்டு மேலும் உறுதியடையும்.

மெதுவாக.. நிதானமாக.. அவசர அவசரமாக பயிற்சி செய்தால் பலன் பெற முடியாது. மெதுவாகவும், நிதானத்துடனும் பயிற்சி செய்தால் சிறந்த முறையில் கொழுப்பை குறைக்கலாம்.

யோகா ஜிம்மிற்கு சென்று களைத்து விட்டதா? பெரும்பாலான யோகாசனங்கள் முக்கிய தசைகளை உறுதிப்படுத்தும். யோகாசனங்கள் உங்கள் உடலோடு, உள்ளத்தை மட்டுமே உறுதிப்படுத்துவதில்லை. மாறாக உங்களுக்கு நல்ல வளைவையும், உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

உங்களின் வயிற்று தசைகள் அதிக எடைகளை தூக்குவதால் சிறந்த பலனைப் பெறும். ஒவ்வொரு முறை பயிற்சி செய்யும் போதும், எடைகளை ஒரு சில கிலோ ஏற்றி பயிற்சி செய்வதால், இன்னும் நல்ல பலனை அடையலாம்.

சாப்பிடுவதில் கவனம் நல்ல அழகான வயிற்றினை பெற சரியாக சாப்பிட வேண்டும். ஜிம்மிற்கு தினம் சென்று கடினமான பயிற்சி செய்வதால் மட்டுமே போதாது. 'உங்கள் உணவில் புரதம், கொழுப்பு குறைவான கொழுப்புடைய பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், பழங்கள் மற்றும் நல்ல காய்கள் ஆகியவை இருக்க வேண்டும்' என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எப்படி சீக்கிரம் படம் எடுக்கிறோம்? நீங்களும் கத்துக்குங்க பாஸ்......!

மலையாள சினிமாவின் குவான்டின் டொரான்டினோ என அழைக்கிறார்கள் இளம் இயக்குநர் ஆஷிக் அபுவை. '22 ஃபீமேல் கோட்டயம்’ படத்தின் மூலம் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகை ரீமா கல்லிங்கலைத் திருமணம் செய்து, இன்னும் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

''வாழ்த்துக்கள் ப்ரோ... ஒரு தேவதையை மணமுடித்திருக்கிறீர்கள். எப்படிப் போகிறது திருமண வாழ்க்கை?''

''நன்றி. சிலரைப் பார்க்கும்போதே காதலிக்கத் தோன்றும் இல்லையா? அப்படிப்பட்ட பெண் ரீமா. '22 ஃபீமேல் கோட்டயம்’ படத்தை நான் இயக்கும்போது எங்களுக்குள் ஒரே அலைவரிசையை உணர்ந்தோம். அந்தப் படம் இன்று எல்லா மொழிகளிலும் ரீமேக் பண்ணப்படுவதற்கு முழுக் காரணமே ரீமாதான். நான் திரையில் காட்ட நினைத்த பெண்ணை என் கண் முன் கொண்டுவந்து நிறுத்தினார்''

''மலையாளத்தில் எப்படி இத்தனை வேகமாகப் படங்களை எடுக்கிறீர்கள்?''

''தமிழிலும் இப்போது வேகமாகப் படம் எடுக்கிறார்களே... தமிழ் சினிமா போல் மிகப் பெரிய ஸ்டார் வேல்யூ எல்லாம் எதுவும் இங்கு இல்லை. அது நல்ல விஷயம். கதைக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வதற்கு மட்டுமே இங்கு தாமதம் ஆகும். லேண்ட் ஸ்கேப் சிறிய பகுதிதான். கிட்டத்தட்ட வீட்டுக்குப் பக்கத்திலேயே படம் எடுக்கிறோம். காலை டிபன் சாப்பிட்டுவிட்டு படப்பிடிப்புக்கு வந்து சாயங்காலம் வீட்டுக்குப் போய்விடலாம். இது எங்கள் கேரளாவுக்கே உரிய வசதி. பெரிதாய் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை.''

''தமிழ்ப் படங்கள் பார்ப்பது உண்டா?''

''ஹலோ... நான் டை ஹார்டு ரஜினி ஃபேன். தலைவரை வைத்து படம் இயக்கும் ஆர்வம்கூட இருக்கிறது. மலையாளப் படங்களை இவ்வளவு உன்னிப்பாக நீங்கள் கவனிக்கும்போது தமிழ் படங்களை நாங்கள் கவனிக்காமல் விடுவோமா? சமீபத்தில் தமிழில் குறும்பட இயக்குநர்கள் கலக்குகிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பு உயிர்ப்போடு இருக்கிறது. மற்றபடி அஜித், விஜய், விக்ரம், சூர்யா படங்கள் ஒன்றையும் விடுவது இல்லை. சென்னை எனது இன்னொரு தாய்வீடு. லாலை ஹீரோவாக வைத்து நான் இயக்கிய 'சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை பிரகாஷ் ராஜ் சார் ரைட்ஸ் வாங்கித் தமிழில் தயாரித்து இயக்குகிறார். என் இயக்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை, பெருமையாகக் கருதுகிறேன்.''

''இப்போது என்ன படம் இயக்கிக்கொண்டிருக்கிறீர்கள்?''

''ஹனிமூன் முடித்து இப்போதுதான் வந்திருக்கிறேன். 'கேங்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரிக்கிறேன். மம்முட்டி என்ற பெரிய நடிப்பு தாதா நடிக்கிறார். மிரட்டலான கேங்ஸ்டர் படத்தை எடுக்க மெனக்கெட்டு வருகிறோம். விரைவில் பெரிய அளவில் அறிவிப்பு வரும்.  ரீமாவை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறேன். ஸ்கிரிப்ட் என்ன என்பது சஸ்பென்ஸ்!''

உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்.,!

உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்


உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.


மேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே முழங்கால் மூட்டு ஆகும். தொடை முழங்காலுக்கான முக்கிய ‘ஜங்ஷன் இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான்.


தொப்பிபோல் தட்டுப்படுகிறதே அதுதான், knee cap (Patella) எனப்படும் மூட்டுச்சில்லு. முழங்கால் மூட்டின் முக்கிய பகுதிகள் இந்த மூட்டுச்சில்லுக்கு பின்னால்தான் இருக்கின்றன. தொடை எலும்பு கீழே செல்லச்செல்ல அகன்று தடித்து, கொண்டைபோல் இருக்கும். அதன் கீழ்ப்பகுதி முழுவதையும் குருத்தெலும்பு போர்த்தியுள்ளது. இந்த கொண்டைப் பகுதி இரண்டாகப் பிரிகிறது. அவற்றின் நடுவே உள்ள சற்று பள்ளமான பகுதியில்தான் மூட்டுச்சில்லு அமைந்து மேலும் கீழுமாய் அசைகிறது.


முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு வித்தியாசமானது. பிணைப்பு நாண்களும் (cruciatel Ligament) மெனிஸ்கஸ் எனப்படும் குஷன்களும் இந்த மூட்டில் உள்ளன. மூட்டை சுற்றி மிக மிருதுவான எலும்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த மூட்டில் சைனோவியம் என்கிற மூட்டுச் சுரப்பிப் படலம் அதிகம் உள்ளது. அதனால் அதை சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்புண்டு. சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம் ஏற்படலாம். அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல், ‘காக்கும் எதிர்வினைப்பொருட்களை‘ (Antibodies) தோற்றுவிக்கும். அவை இந்த மூட்டில் வந்து தங்கி வலியை (reactive arthritis) ஏற்படுத்தும்.


நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.


முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.


முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.


தடுக்கும் முறைகள்...


1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.


2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.


3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.


4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.


5. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.


6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.


உணவுப் பழக்கம்


1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.

2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டியவை காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

கமலின் ரகசியக் காதலி ஆண்ட்ரியாவாம்... உண்மைதான் நண்பரே!

 உத்தமன் மற்றும் மனோரஞ்சன் என்ற இருவேடத்தில் 'உத்தம வில்லன்' படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

'விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்க திட்டமிட்ட படம் 'உத்தம வில்லன்'. இப்படத்தின் கதை, திரைக்கதை கமல்ஹாசன் எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்க திட்டமிட்டார்கள். 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில், 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது.

கமலுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் 'உத்தம வில்லன்' படக்குழு, யாரெல்லாம் என்ன பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக இன்று (சனிக்கிழமை) அறிவித்து இருக்கிறது.

அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,"உத்தமன் என்ற 8ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல் நடித்து வருகிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் விஸ்வநாத்தும் நடிக்கின்றனர்.

8ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசன் எழுத, இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த். ஒளிப்பதிவு ஷாம்தத், படத்தொகுப்பு விஜய் சங்கர், பாடல்கள் கமல்ஹாசன் மற்றும் விவேகா, இசை ஜிப்ரான் உள்ளிட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தினை தயாரித்து வருகிறார் சுபாஷ் சந்திரபோஸ்" என்று கூறியுள்ளார்கள். 

அதிகப்படியான உடல் பருமனால் சந்திக்கக்கூடிய விநோதமான பிரச்சனைகள் !

அதிகப்படியான உடல் பருமனால் சந்திக்கக்கூடிய விநோதமான பிரச்சனைகள் !


குண்டாக இருப்பது என்பது வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டு செல்ல மிகவும் தடையாக இருக்கும். ஏனெனில் ஒருமுறை குண்டாகிவிட்டால், அதனால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகள் விரைவில் வந்துவிடுகின்றன.


மேலும் அனைவருக்கும் உடல் பருமனடைந்தால், இந்த பிரச்சனைகள் மட்டும் தான் வரும் என்று தெரியும். ஆனால் உடல் பருமனடைந்தால், இதுப்போன்று இன்னும் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், உதாரணமாக உடல் பருமனடைந்தால் நிம்மதியான தூக்கத்தை இழக்க நேரிடும். இதுப்போன்று நிறைய பிரச்சனைகள் உடல் பருமனடைந்தவர்கள் சந்திப்பார்கள்.


தூக்கமின்மை

உடல் பருமனடைந்தவர்களால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் தூங்கும் போது, காற்று செல்லும் வழியானது அடைத்து, தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இதனால் தூங்கும் போது மிகுந்த கஷ்டத்தை உடல் பருமன் அடைந்தவர்கள் சந்திப்பார்கள்.



குறட்டை

ஒருவேளை அசதியில் தூங்கிவிட்டால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தினால், மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் குறட்டையின் சப்தமானது எழுகிறது.




விரைவில் முதுமை தோற்றம்

ஆய்வு ஒன்றில், உடல் பருமன் அடைந்தவர்கள் புகைப்பிடிப்பவர்களை விட சீக்கிரம் முதுமை தோற்றத்தை பெறுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




கண்புரை நோய்

பொதுவாக கண்புரை நோயானது உடல் பருமனடைந்தவர்களுக்கு ஏற்படும். ஏனெனில் உடல் பருமன் அதிகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு குறைந்துவிடுகிறது.




செரிமான பிரச்சனை

உடல் பருமன் அடையும் போது, வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களானது வயிற்றில் பிரச்சனையை ஏற்படுத்தி, அசிடிட்டி, செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.



குடலிறக்கம்

உடல் பருமன் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர், அவர்களுக்கு குடலிறக்கத்திற்கான பாதிப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் வயிறு பெரிதாக இருப்பதால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், அப்போது வெட்டுப்பட்ட இடத்தில் தசைகளானது வளர்ந்துவிடுகிறது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான வலியை உணரக்கூடும்.




புரோஸ்டேட் அளவு அதிகரிக்கும்

உடலின் பருமன் அதிகரிக்கும் போது, ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியும் பெரிதாக ஆரம்பிக்கும். இதனால் புரோஸ்டேட் பெரியதாகி, நாளடைவில் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.




கற்பதில் சிரமம்

சிறுவயதிலேயே குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டால், ஹார்மோன் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்களின் கற்கும் திறனானது குறைந்துவிடும்.



நோயெதிர்ப்பு சக்தி குறைவு

உடல் பருமன் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இதனால் தான் அவர்களுக்கு நோய்களானது எளிதில் தொற்றுகிறது.


ஆஸ்துமா

அதிகப்படியான உடல் பருமன் இருந்தால், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதோடு, அந்த ஆஸ்துமாவும் மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.




கீல்வாதம்

அதிகப்படியான யூரிக் அமிலத்தின் வெளிப்பாட்டினால், மூட்டுகளில் உள்ள திசுக்களாது உடைக்கப்பட்டு கீல்வாதம் ஏற்படுகிறது. பொதுவாக இத்தகைய பிரச்சனை எந்த வயதில் உடல் பருமனுடன் இருந்தாலும் ஏற்படும்.


விறைப்புத்தன்மை குறைபாடு

ஆண்கள் உடல் பருமனாக இருக்கும் போது, நீரிழிவு, உயர் இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் பெரிதான புரோஸ்டேட் ஆகியவற்றினால், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டு, குழந்தை பிறப்பதில் பிறப்பதில் கஷ்டமாகிவிடும்

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

பின்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நமது மரணத்தை தோராயமாக முன்கூட்டியே கணிக்கக் கூடிய ரத்த பரிசோதனையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ரத்த பரிசோதனையை மேற்கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணமடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து விட முடியுமாம்.

இதைக் கேட்பதற்கு சற்று பீதியாக இருந்தாலும் கூட, இந்த பரிசோதனை மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு உயிராபத்து இருக்கிறதா என்பதை ஓரளவு கணித்து விட முடியும் என்று இந்த ஆய்வுக் குழு அடித்துக் கூறுகிறது.


என்.எம்.ஆர் டெஸ்ட்...

நியூக்ளியார் மேக்னெட்டிக் ரிசொனன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்று இந்த சோதனைக்கு பெயர் வைத்துள்ளனர். சுருக்கமாக என்.எம்.ஆர்.
பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....


பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....

இந்த சோதனையை பின்லாந்தின் ஊலு என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிகா அலா கொர்பெலா என்பவர் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.


மார்க்கர்கள் மூலம்...

இதுகுறித்து இந்த ஆய்வாளர் கூறுகையில், " எங்களது இந்த என்.எம்.ஆர். சோதனையில் பல பயோ மார்க்கர்களைப் பயன்படுத்துகிறோம். அது உங்களது உடலின் உண்மை நிலையை சொல்லி வடும். அதை வைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணத்திற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்றார்.


ரத்த மாதிரி சோதனை....

கிட்டத்தட்ட 17,000 பின்லாந்து மற்றும் எஸ்டோனியர்களின் ரத்த மாதிரியை வைத்து இந்த பரிசோதனை ஆய்வை நடத்தியுள்ளனராம்.


மரணத்தைக் கணிக்கும் காரணிகள்...

இந்த ஆய்வில், நான்கு முக்கியமான பயோ மார்க்கர்கள்தான் நமது மரணத்தை கணித்துச் சொல்லுகிறதாம். அதாவது அல்புமின் மற்றும் ஆல்பா 1 அசிடிக் கிளைக்கோ புரோட்டீன் என்ற இரண்டு புரத அளவுகள், லிபிட் மெட்டபாலிசம் வேரியபிள்கள் மற்றும் சிட்ரிக் அமில அடர்த்தி ஆகியவைதான் இவை.


ஆய்வில் தகவல்....

இந்த நான்கு பயோ மார்க்கர்களும் அனைத்து மனிதர்களின் ரத்தத்திலும் கலந்துள்ளன. இவற்றின் அளவும், தன்மையும்தான் ஒருவருடைய மரணத்தை நிர்ணயிக்கிறதாம். இதைத்தான் இந்த ஆய்வும் கூறுகிறதாம்.


ஆரோக்கிய வாழ்வுக்கு...

வயது, புகை பிடித்தல் பழக்கம், மது அருந்தும் அளவு, கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவையும் கூட ஒரு மனிதனின் உயிர் ஸ்திரத்திற்கு முக்கியமானவைதான். இவற்றின் பாதிப்பாலும் மரணம் ஏற்படுகிறது.

முதல் ஆய்வு....

இதுகுறித்து பின்லாந்து பல்கலைக்கழக என்.எம்.ஆர். ஆய்வக தலைவர் பாசி சொய்னென் கூறுகையில், " உலகிலேயே இப்படிப்பட்ட ஆய்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இதில் மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றார்.

ரத்தப்பரிசோதனை...

இப்போது இந்த ஆய்வு தொடக்கக் கட்டத்தில் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் ஒருவரது மரணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கணித்துக் கூறி விடும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வாழ்நாளை நீடிக்கலாம்...

மேலும் அவ்வப்போது இந்த ரத்த பரிசோதனையை செய்து நமது உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்நாட்களை நீ்ட்டிக்கவும் வழி பிறக்கும். PLoS Medicine என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.