Friday, 28 February 2014

விஷ‌த்தை மு‌றி‌க்கு‌ம் ‌பிரம‌த்த‌ண்டு!

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட, பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.


பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.


பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.


பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.


‌பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும். 

உங்களுக்கு அதிகமா வியர்க்குதா?

பொதுவாக கோடையில் அதிக அளவில் வியர்வையானது வெளிப்படும். அதிகமாக வியர்ப்பது சங்கடம் கொடுக்க கூடியது. அதுவும், பயணத்தின் போதும், வெளியிடங்களில் தங்கும் போதும், ஒரு நாளுக்கு ஐந்து முறை உடை மாற்ற முடியாத போதும், அல்லது வியர்க்கும் பொழுது அடர்த்தியான மேலுறையை அணியும் போதும் தாங்க முடியாத வேதனை ஏற்படுகின்றது.

இத்தகைய வேதனையை தவிர்ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுங்கள்...

வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...

01. கையில்லா சட்டைகளை வாங்க வேண்டும். அதுவும் சட்டைகளின் ஓரப் பகுதிகள் அக்குளுக்கு மேலே போகாமல் கீழே இருத்தல் அவசியம். இதனால் வியர்வையின் ஈரம் துணிகளின் மேல் தங்கி நமக்கு அசெளகரியம் ஏற்படுத்தாமல் ஆவியாகி வெளியேறி விடும். இவ்வகைச் சட்டைகள் அளவில் சிரியதாய் இருப்பதால், பெட்டிகளிலும் நிறைய அடுக்கலாம். எனவே தேவையானவற்றை வாங்கி புத்துணர்வைப் பெறுங்கள். (ஆடைகளைத் தேர்வு செய்யும் போது காற்றோட்டமான பருத்தி ஆடைகள் போன்ற ஆடைகளை வாங்கவும்.)

02. தோல்பட்டையை மூடிக்கொள்வதற்கென சால்வை அல்லது தளர்வான ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வித ஆடைகளை குளிர் பருவத்தில் கழுத்தை சுற்றி கட்டி கொள்ளவும் பயன்படுத்தலாம். இது போன்று செய்வதால், உடலை மிகுதியான வெப்பமோ, குளிரோ தாக்காமலும் அதிகமாக வியர்க்காமலும் காத்துக் கொள்ளலாம்.

 அதிகமாக வியர்க்கும் இடங்களுக்கு செல்லும் பொழுது மாற்றுத் துணிகளை எடுத்து செல்லவும். அவை ஒரு சட்டை, ஒரு ஜோடி அரைக்கால் சட்டை, அல்லது தளர்வான காலணிகளாகவும் இருக்கலாம். இதில் அவசரத் தேவைக்கான பொருட்கள் அடங்கிய கைப்பை (emergency kit) ஒன்றையும் சேர்த்து கொள்ளலாம். அவற்றில், - டியோடரண்ட் (அலுமினியம் சேர்க்காதது) - முகம் துடைப்பதற்கு டிஸ்யூ பேப்பர் - ஒரு ஜோடி மாற்றுச் சட்டைகள் - வியர்வைப் பட்டைகள் - சிறிது சமையல் சோடா

03. துவைத்துப் பயன்படுத்தக் கூடிய அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வியர்வை அட்டைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக விற்கப்படுகின்றது. அதை இணையம் மூலமாக வாங்கலாம். வை விடுமுறை நாட்களுக்கு மிகவும் ஏற்ற பொருட்கள் என்பதோடு அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமானது. மேலும் இருக்கும் இடத்தில் நீச்சல் குளம் இருந்தால் தயங்காமல் நீந்தலாம். அது புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்க வல்லது.

04. என்ன சாப்பிடுகிறோம்? எப்போது வெளியே செல்கிறோம்? என்பதை கவனிக்கவும். பூண்டு மற்றும் காரமான மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக வியர்க்க செய்யும் மது மற்றும் காபி போன்றவற்றை பருகுவதைத் தவிர்க்கவும். நட்பான மற்றும் மனதிற்கு அமைதி நிறைந்த சூழல்களை உருவாக்க வேண்டும். இவை மன அழுத்தம் அடைவதை தவிர்ப்பதோடு, உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் உதவும்.

ஜில்லுனு சில டிப்ஸ்..!

*வெயில் காலத்தில் பல நோய்களுக்குக் காரணம் தண்ணீர்தான். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிப்பதே பெஸ்ட்.

*இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

*வெண்பூசணியும் பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இதம் அளிக்கும்.

*டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.

*உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

*இட்லி, அவியல், கூட்டு, ரெய்த்தா போன்று விரைவில் தயாரிக்கக்கூடிய உணவுகளை சமையுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்து, சூரியன் ‘ஹாய்’ சொல்வதற்குள் சமையலறை வெப்பத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

*உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

*இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்க்கலாம்.

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அது உங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கு போவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான். இது எல்லாமே எனக்கு நான் செஞ்சி பார்த்து முழு பலனையும் அனுபவிச்சது எ‌ன்‌கிறா‌ர் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர்.

ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்ற சந்தோஷத்திற்கு பின் உள்ள பயங்கள்!

ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்றால் அதை விட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தையை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத்தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக ஆண்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

தந்தையாக போகிற ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு தகப்பன் என்று புதிதாக வர போகிற ஸ்தானம் மற்றும் அதிலுள்ள பொறுப்புகளை எண்ணும் போது, ஒரு பயம் இருக்கத் தான் செய்யும். இந்த புதிய மாற்றத்துடன் அவர்கள் ஒன்றி விட முதலில் கஷ்டப்படுவது இயல்பாக ஏற்படுவது தான். உண்மையை சொல்ல வேண்டுமானால், கருவை சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தான் இந்த கதாநாயகனாக விளங்குகிறாள். இருப்பினும் தந்தையாக போகிறவர்கள் தகப்பன் என்ற ஸ்தானத்தில் பயணிக்கும் போது, வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு பல பொறுப்புகள் காத்துக் கொண்டு இருக்கிறது.

பயத்தை எல்லாம் கடந்து வருவது தான் தந்தையாக போகிறவர்களின் கடமையாகும். இருப்பினும் தான் அப்பா ஆக போகிறோம் என்ற நினைப்பை ஏற்றுக் கொள்ளவே பலருக்கு பயம் வந்துவிடும். அவர்களின் மனதில் குழப்பும், துயரமும் உலா வந்தாலும் கூட, அவர்கள் அதனை வெளியில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.

புதிதாக தந்தையாக போகிறவர்களுக்கு, தங்கள் குழந்தையை சரியான முறையில் கையில் தூக்குவோமா என்ற பயம் அவர்களை சூழும். அதனுடன் சேர்த்து குழந்தைக்கு சரியாக டையப்பர் மாற்றுவது, அதனை பாதுகாப்பது, வீட்டை குழந்தைக்காக பாதுகாப்பாக மாற்றுவது போன்றவைகளும் பயத்திற்கான சில உதாரணங்கள். இவ்வகை பயன்கள் எல்லாம் இயல்பாக வருவது தான். ஆனால் அவைகளையெல்லாம் மிகைப்படுத்த தேவையில்லை.

அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒரு தந்தையும் சந்திக்கும் முக்கிய சவாலாகும். உங்கள் குடும்பத்திற்கென நீங்கள் ஒதுக்கும் பொன்னான நேரத்திற்கு ஈடு இணை வேறு கிடையாது. தந்தையாக போகும் ஆண்களுக்கு, தங்கள் வீட்டில் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைக்குமா என்பதில் பயம் ஏற்படும். மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கவன சிதறலால் தங்களால் வேலையில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியுமா என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும். மேலும் வேலைப்பளு காரணமாக தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் விசேஷமான தருணங்களில் கலந்து கொள்ள முடியாது போன்ற எண்ணங்களால் இவ்வகை கவன சிதறல் உண்டாகும்.

குழந்தை வந்தாலே தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனை உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் காலம் முதலே நீங்கள் கவனிக்க தொடங்கலாம். குழந்தை பிறந்த நேரத்தில், அதற்கென அதிக நேரம் மற்றும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் உங்கள் மனைவி உங்களிடம் அன்யோநியமாக இல்லாமல் போகலாம். அதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் களைப்பும் உளைச்சலும். ஆனால் இது நிரந்தரம் அல்ல. குழந்தை வளர வளர இது மெதுவாக மாறும். அதற்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.

பெற்றோராக மாறிய பின் பொறுப்புகள் கூடுவதால், அதற்கென செலவிடும் நேரமும் அதிகமாகும். அதனால் தங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயமும் ஆண்களிடம் இருக்கும். தன் நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது பார்ட்டிக்கு செல்வது போன்றவைகள் எல்லாம் தடைபட்டு விடுமோ என்ற பயமும் இருக்கும். இதனால் தங்களின் அனைத்து நண்பர்களையும், அந்த வாழ்க்கையையும் தொலைத்து விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ளும்.

தங்கள் குடும்பத்தில் பார்த்த நிகழ்வுகள் சில ஆண்களுக்கு பயத்தை உருவாக்கும். அதாவது காதல் மழையில் நனைந்து, தன்னுடனேயே இருக்கும் தன் ஆசை மனைவி அடியோடு மாறிவிட்டால்? ஆம், தந்தையாக போகிறவர்களுக்கு வரும் மற்றொரு பயம் - தன் மனைவி தன்னை விட தன் குழந்தையின் மீது தான் அன்பை செலுத்துவாளா? என்ற எண்ணத்தால், அவர்கள் அனுபவித்து வந்த அன்யோநியமான உறவு பாதிக்கப்படும். இப்படி அன்பு இடம் மாறும் போது, இது நியாயமான பயமாகத் தான் விளங்கும்.

தன் மனைவியின் பிரசவத்தின் போது தன்னால் அவளுக்கு துணையாக இருக்க முடியாது என்ற பயம் பல ஆண்களிடம் இருக்கும். பிரசவ வலியில் அவர்கள் துடிப்பது, கை கால்களை முறுக்குவது, ஆங்காங்கே காணப்படும் இரத்தங்களும் நீர்களும் ஆண்களுக்கும் குமட்டலை ஏற்படுத்தி தலை சுற்றச் செய்யும். அதனால் தான் பல ஆண்கள் பிரசவ நேரத்தில் கண்டிப்பாக மனைவிகளுக்கு துணையாக இருப்பதில்லை.

புது வாழ்க்கை தொடங்கும் போது, முடியும் ஒன்றை எண்ணி நாம் ஒன்றுமே செய்ய முடியாது. தந்தையாக போகிறவர்களுக்கு புதிதாக இன்னொரு உயிர் வரப்போவதால், தங்கள் இளமை பறி போய்விட்டது என்ற பயம் உண்டாகும். தந்தை என்றால் தன் குழந்தை மற்றும் குடும்ப தேவைக்காக பாடுபட்டு தன்னுடைய சுகங்கள் மற்றும் தேவைகளை எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும் என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும்.

பிரசவத்தின் போது தங்கள் மனைவி அல்லது குழந்தையை இழந்து விடுவோமா என்ற பயம் பொதுவாக ஆண்களுக்கு வருவது தான். ஒரு வேலை மனைவி இறந்துவிட்டால், குழந்தையை தனியாக வளர்க்க வேண்டும் என்ற பயம் சூழும். குழந்தையை பெற்றெடுக்க தாய் வலியால் துடிப்பதை பார்க்கும் போது, குழந்தை பிறப்பு என்பது நம்மை உறைய வைக்கும் ஒரு அனுபவமாக விளங்கும். ஆனால் இவ்வகை பயங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களாகும். அவைகளை முதலில் அகற்றுங்கள்.
தன் குழந்தைக்கு தான் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியுமா என்பது ஒவ்வொரு ஆணின் ஆழ்மனதில் நீடிக்கும் பயமாகும். தன் குழந்தையை பண ரீதியாக எந்த பிரச்சனையுமின்றி வளர்க்க முடியுமா என்ற பயமும் இருக்கும்.

தன் குடும்பத்தையும், குழந்தையின் கல்வியையும் பண ரீதியாக சமாளிக்க வேண்டுமே என்ற பயமும் பல ஆண்களிடம் இருக்கும். குழந்தை பெற்ற பின், தன் மனைவி வேலையை விட்டு நின்று விட்டதால், தன் ஒருவனின் சம்பளத்தை வைத்து குடும்ப தேவைகளை சமாளிக்க முடியுமா என்ற பயமும் உண்டாகும். இது நியாயமான பயமே. பல பேர் குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் இரண்டு பேருக்கு பயன்படுத்தப்பட்ட இருவரின் சம்பளம், இப்போது மூன்று பேருக்கு ஒரு ஆள் சம்பளமாக மாறி விடுவது வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வெற்றிக்கு காரணம் யார்?: மனம் திறந்து கூறுகிறார், பாலசந்தர்!

'என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.

அவர் ஒரு கட்டுரையில் மனைவி ராஜம் பற்றி கூறியிருப்பதாவது:-

'ஆரம்பத்தில் இருந்தே என் மனைவியின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் சிறப்பு அடைந்திருக்க முடியாது. அப்போது இவள் செய்ததை `தியாகம்' என்றே சொல்லவேண்டும்.

எங்களுக்குத் திருமணம் நடந்த நாள் 31-5-1956. தஞ்சை மாவட்டத்தின் நன்னிலத்தில் இருந்த என்னையும், பல மைல்களுக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் இருந்த ராஜத்தையும் திருமணம் ஒன்று சேர்த்தது.

பெண் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன், 'பார்ப்பதற்கு குமாரி கமலா மாதிரி இருக்கிறாள்' என்றார். 18 வயது பாவையான ராஜம் என்னை கைப்பிடித்தபோது, நான் ஏ.ஜி.எஸ். ஆபீஸ் குமாஸ்தா. என்னுடைய இப்போதைய வளர்ச்சியை இவள் அப்போது கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாது.

எனக்கு முதல் காதல் நாடகத்தின் மீதுதான். மனைவி, குடும்பம் எல்லாம் அப்புறம்தான். என் பெரும்பாலான இரவுகளை ஏ.ஜி.எஸ். ஆபீஸ் விழுங்கி விடும். புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியாகிய நாங்கள் உல்லாசமாகப் பயணம் போவதோ, சினிமா பார்ப்பதோ, வெளியில் எங்காவது சென்று வருவது அவசியம் என்பது கூட என் மனதில் தோன்றாத அளவுக்கு அசுர உழைப்பு உழைத்து விட்டு வந்து படுக்கையில் விழுவேன்.

இப்படியிருக்க, நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்ல நேரம் ஏது? ஆனால் இவள் கொஞ்சமாவது முகம் சுளித்தது இல்லை. குடும்பப் பொறுப்புகளையும் என் கண்ணில் காட்டியதில்லை. அதனால்தான் என் முழு கவனத்தையும், கலைத்துறைக்குத் திருப்ப முடிந்தது.

அன்று முதல் இன்று வரை, குடும்பப் பிரச்சினைகள் எதுவும் என் காதுக்கோ, கவனத்துக்கோ வராதபடி பார்த்துக் கொள்வதில் இவள் மிகவும் சாமர்த்தியசாலி. அந்த மாதிரி தொல்லைகளை எல்லாம் தன் தோளிலேயே தூக்கிப்போட்டுக்கொள்வாள்.

குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழன்றால் போதும் என்ற மனோபாவம் கொண்டவள். அநாவசியமான நண்பர் குழாம், வம்பு பேச்சுக்கள், ஆடம்பரம், போலி கவுரவம், நகை ஆசைகள் இவை அனைத்துமே அவள் அகராதியில் இடம் பெறுவதில்லை.

கணவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக, `ஓகோ' என்றெல்லாம் புகழ்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால், 'பிடிக்கவில்லை'தான். வழவழ கொழகொழ வெல்லாம் கிடையாது.

அலங்காரம், அலங்கார வார்த்தைகள், அகங்காரமான எண்ணங்கள் - இவை என்னவென்றே தெரியாதவள், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலக குமாஸ்தாவின் மனைவியாக இருந்தபோதும் சரி, பிரபலமான திரைப்பட இயக்குனரின் மனைவியாக இருக்கும்போதும் சரி, அவள் 'அவளாகவே இருக்கிறாள்.'

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாலசந்தரின் மனைவி ராஜம், தன் கணவர் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

'எங்கள் கல்யாணம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெரியவர்கள் செய்து வைத்ததுதான். எனக்குப் பாலக்காடு சொந்த ஊர். அப்பா ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பல ஊர்களில் வேலை பார்த்தவர்.

என் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. திருமணமானவுடனேயே சென்னையில் கோபாலபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அங்கு பல ஆண்டுகள் வசித்தோம்.

அந்த நாளிலும் சரி, இப்போதும் சரி அவர் வீட்டில் பகல் நேரத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. பட விஷயமான வேலைகளைக் கவனிக்க வெளியே சென்று விடுவார். இரவில் படுக்க எவ்வளவு நேரமானாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டார். எழுந்ததும் உடனே பல் தேய்த்துவிட்டு, ஒரு கப் காபி குடித்தவுடன் தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.

முன்பெல்லாம் தினமும் விடியற்காலையில் கடற்கரைக்குச் சென்று குறைந்தது இரண்டு மைல்களாவது வாக்கிங் போவார். இப்போது போவதில்லை. ஏனென்றால் இப்போது அவருக்கு ஏது ஓய்வு நேரம்?

முன்பு இவருக்கு அதிகமாக கோபம் வரும். அப்படி கோபம் வரும்போது இவர் எதிரில் யாரும் போகமாட்டோம். ஆனால் வந்த வேகத்திலேயே அது மறைந்து போய் விடும். இப்போதெல்லாம் இவருக்கு வீட்டில் கோபம் வந்து பார்ப்பது ரொம்ப அபூர்வம்.

வீட்டில் அவருடைய புத்தகங்களோ மற்றும் பேனா பேப்பர் போன்ற பொருள்களோ அவர் வைத்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். அவை அவர் தேடும்போது இடம் மாறிவிட்டால் அவருக்குப் பிடிக்காது.

பலருடைய பாடல்களை டேப்புகளில் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறார். எப்பொழுதாவது அபூர்வமாகப் பொழுது போகாமல் வீட்டில் இருக்கும்போது தமக்குப் பிடித்த பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். பாட்டுக் கச்சேரிக்கோ, கதா காலட்சேபங்களுக்கோ போக அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. போக வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. `டேப்பின்' மூலம் அந்த ஆசையை நேரம் கிடைக்கும்போது நிறைவேற்றிக் கொள்கிறார்.

அவர் சினிமாவுக்காக, தான் எழுதிய கதையைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் எதுவும் கேட்க மாட்டார். பொதுவாக யாரிடமுமே அவர் கேட்பதில்லை. முன்பெல்லாம் படம் மூவாயிரம் அல்லது நாலாயிரம் அடி வளர்ந்த பிறகு என்னை அழைத்துக்கொண்டு போய் படத்தைப் போட்டுக் காண்பிப்பார். அப்போதும்கூட என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்கமாட்டார். இப்போது படம் முடிந்து வெளியிடப்பட இருக்கும் சமயத்தில்தான் வீட்டில் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய் படத்தைக் காண்பிக்கிறார்.

புதுப்படம் ஆரம்பிக்கும் நாளில் கூட இவர் எவ்வித டென்ஷனும் இல்லாமல் என்றும் போலவே இருப்பார். அதேபோல இவர் டைரக்ட் செய்த புதுப்படம் ரிலீஸ் ஆகும் அன்றும் இவர் சாதாரணமாகவே இருப்பார். அதற்காக ஸ்பெஷலாகக் கோவிலுக்குப் போவதோ, பூஜை செய்வதோ அதெல்லாம் இவரிடம் கிடையாது. மனதிற்குள்ளே கடவுளை வேண்டிக்கொள்வார் என்று நினைக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று சுறுசுறுப்பாய்ப் பணியாற்றும் இவர், வெளிப்படையாக கடவுளிடம் எதையும் வேண்டிக்கொண்டதை நான் பார்த்ததில்லை.

ரசிகர்களிடமிருந்து இவருக்கு நிறையக் கடிதங்கள் வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதில் எழுத நேரம் கிடையாது. ஆனால் இனிமேலும் சேர்ந்தால் சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு கடிதங்கள் குவிந்து விடும் பொழுது ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்த்து முக்கியமான கடிதங்களுக்குப் பதில் எழுதி விடுவார்.

எதையும் செய்யாமல் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார இவரால் முடியாது. இதனால் இவர் காரில் ஏறிக்கொண்டால் கார் வேகமாகப் போகவேண்டும். டிரைவரிடம் சீக்கிரமாகப் போகும்படி சொல்வார். முன்பு இவரே டிரைவிங் செய்து கொண்டிருந்தார். இவர் ஓட்டும்பொழுது வேகமாக ஓட்டுவார். இவர் இப்போது காரை ஓட்டுவதில்லை.

இவ்வாறு ராஜம் பாலசந்தர் கூறியுள்ளார். 

2-வது கதாநாயகியாக நடிக்க ஒத்துக்கொண்ட நடிகை!

சமீபத்தில் வெளியான வேற மாதிரியான பட நாயகி, தன் படம் நன்றாக ஓடியதால் உடனே சம்பளத்தை அதிகமாக்கி விட்டாராம்.


முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லையாம்.


வெற்றிப்பட இயக்குனர் ஒருவர் சமீபத்தில் 2-வது நாயகி கதாபாத்திரத்திற்கு அவரை அணுகினாராம்.


அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் வந்த வாய்ப்பை விட கூடாது என நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.


2-வது நாயகியாக நடித்தால் தொடர்ந்து இந்த மாதிரி வாய்ப்புகள்தான் வரும் என நடிகைக்கு தெரியாது போல!