Tuesday, 28 January 2014

மந்திரமொழி

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

உடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மோனத்தன் நிறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான்.

மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் த்த் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கைகூடுகிறது. அவன் மனம் நிறைகிறது.

மௌன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும். இரண்டாவது ஆன்ம தூய்மைக்காக குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும் குண்டலினி யோகம், துரியாதீத தவம் போன்றவை மௌன தவமாகாது. அவை குறுகிய கால உளப்பயிற்சியாகும்.

ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

“மௌனம்”

0 comments:

Post a Comment