Monday, 24 February 2014

உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!

வேலைக்கு ஆட்கள் தேவை. அற்புத சுகமளிக்கும் கூட்டம். ஆறே வாரத்தில் சிகப்பழகு. டிசைனர் சாரீஸ். மூலம் பவுத்திரம் நிரந்தரத் தீர்வு’ இப்படி திரும்பிய திசையெங்கும் விளம்பரங்கள்.

ரேடியோ கேட்டால் விளம்பரம். டிவியை பார்த்தால் விளம்பரம். பத்திரிகையை திறந்தால் விளம்பரம், ஏன் தெருவில் நடந்தால்கூட சுவரெங்கும் விளம்பரங்கள். =சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்.’

குழந்தைகள்கூட ரைம்ஸ் போல விளம்பரப் பாடல்களைத்தான் பாடுகிறார்கள். ”அதான்! அதான்! அதேதான்… ஆடைகள்னா…”

இவையெல்லாம் போதாது என்று எஸ்.எம்.எஸ் மூலம் வேறு விளம்பரங்கள் வருகின்றன.

டிவியில் நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்கள் தான் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதனால் விளம்பரம் முடிந்து நிகழ்ச்சி ஆரம்பமானதும் சேனல் மாற்றி அடுத்த சேனலில் விளம்பரம் பார்க்கலாம் போலிருக்கிறது.

டிவியில் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் விளம்பரம் வந்த காலம் போய், இப்போது நிகழ்ச்சியே விளம்பரமாக மாறிவிட்டது. அந்த சாமியார் அற்புத குணமளித்ததாக, யாரோ நீட்டி முழக்கி கடைசியில் சாமியாரின் முகவரியை போடுகிறார்கள். பிறகுதான் தெரிகிறது, அது நிகழ்ச்சி அல்ல, விளம்பரம் என்று.

கவரேஜ் ஜர்னலிசம் என்ற பெயரில் பத்திரிகைகளில்கூட கட்டுரைகள் போலவே விளம்பரம் வருகிறது. இதெல்லாம் விளம்பரம் என்பதே தெரியக்கூடாது என்ற நோக்கில் செய்யப் படும் விளம்பரங்கள்.

டாக்டர்கள் விளம்பரம் செய்யக்கூடாது என்பது விதி. ஆனாலும் அவர்களும் விளம்பரம் என்பதை, கண்டுபிடிக்க முடியாதபடி செய்கிறார்கள். சிலர் நேரடியாகவே செய்கிறார்கள். கிட்னி பழுது நீக்கித்தரப்படும் என்கிற அளவிற்கு இன்னும் காலம் கலியாகி விடவில்லை. ஆனால் ஒரு கண் ஆப்ரேஷன் செய்து கொண்டால் இன்னொரு கண் ப்ரீ என்கிற அளவில் முதலில் வரலாம்.

பிரபலங்கள் பலர் தங்களுக்கு விளம்பரம் கிடைக்காதா? என்று ஆளாய்ப் பறக்கிறார்கள். கூட்டங்களில் ஆடை அவிழ்ந்தால் ஒரே நாளில் உலகம் முழுவதும் விளம்பரமாகிவிடலாம் என்று அதைக்கூட முயற்சிக்கிறார்கள் வெளிநாட்டு நடிகைகள்.
சென்னையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில், பேருந்துநிலையத்திற்கு பக்கத்தில் என்று செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள இடத்தை விளம்பரம் செய்கிறார்கள்.
விளம்பரங்கள் மூலம் ஏமாற்றுவது அதிகரித்து விட்டதால் மக்கள் விளம்பரங்களை சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். அதனால் இன்னும் அதிக விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறது.

டிவிக்கள், பத்திரிகைகளில் தங்கள் நிகழ்ச்சியை பற்றி, சீரியல் பற்றி… காணத் தவறாதீர்கள் என விளம்பரங்கள் வெளியிடு கின்றன. பத்திரிகைகள், தங்களின் மேன்மையை, =தமிழின் நம்பர் 1 நாங்கள்தான்’ என டிவியில் விளம்பரம் செய்கின்றன.
பத்திரிகை விளம்பரங்களைவிட, கண்களையும் காதுகளையும் ஒரே நேரத்தில் கவர்வதால், தொலைக்காட்சி விளம்பரங்களுக்குத் தான் அதிக நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் திறன் உண்டு என்கிறது ஒரு விளம்பரம்.

ஆக, விளம்பரம் செய்பவர்களுக்கே விளம்பரம் தேவையாக இருக்கிறது.
இதையெல்லாம்கூட விட்டுத்தள்ளுங்கள். இன்று கடவுளுக்குக்கூட விளம்பரம் தேவைப் படுகிறது. அதிகம் விளம்பரப்படுத்தப்படும் கடவுள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்.
ஆக, இது விளம்பர உலகம். விளம்பரங்களில் வரும் தயாரிப்புகளை மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள். விளம்பரம் இல்லையென்றால் எதுவும் இனி விலை போகாது.

பூக்கடைக்கு மட்டுமல்ல, இந்தச் சாக்கடைக்கும் விளம்பரம் தேவையில்லை என்று எப்போதோ படித்த பைனான்ஸ் கம்பெனி பற்றிய கவிதை வரி ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் அதற்கும் இப்போது ஒரு நடிகர், தங்கத்தை எங்கள் பைனான்ஸில் அடமானம் வை என்று டான்ஸ் ஆடி சொல்லித் தருகிறார்.

நன்றாக விளம்பரமாகிவிட்ட பொருள்களுக்குக்கூட, அந்த நிலையை தக்க வைக்க, திரும்பத்திரும்ப புதிய விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துவிட்டன விளம்பரங்கள். விளம்பரங்கள் செய்வதற்கு இப்போ தெல்லாம் இடம் கிடைப்பதில்லை. சுவர்கள் நிரம்பி விட்டதால் போஸ்டர் ஒட்ட முடிவதில்லை. பத்திரிகைகளில் ப்ரண்ட் பேஜ் போனமாசமே புக் ஆயிடுச்சு என்கிறார்கள்.

குறைந்த செலவில் விளம்பரம் செய்யுங்கள் என்றுகூட விளம்பரம் வருகிறது. விளம்பரத்திற்கே விளம்பரம் செய்யும் இப்படிப் பட்ட விளம்பர உலகில் உங்களுக்கும் விளம்பரங்கள் தேவை.

புகழ் பெற்றவர்கள் செய்கிற தவறுகள்கூட புகழ் பெற்று விடுகின்றன என்பார்கள். நல்லவை புகழ் பெறவேண்டுமென்றால் அதைச் செய்யும் நாம் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என் வாதம்.

உங்களை விளம்பரம் செய்யுங்கள். அப்போதுதான், இந்த உலகத்திற்கு. நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே தெரியும்.

0 comments:

Post a Comment