Sunday, 9 March 2014

கோச்சடையான் விழாவில் - கவிஞர் வைரமுத்து பேசியதாவது!


ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். அப்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விழாவில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே, டைரக்டர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், முரளி மனோகர், ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–

‘கோச்சடையான்’ தலைப்பு ஈர்ப்பானது. அதில் அழுத்தம் இருக்கும், பழமையும் இருக்கும். கோச்சடையான் சிவனின் இன்னொரு பெயர். பாண்டியர்களுக்கும் இந்த பெயர் உண்டு. பல புதுமைகள் இதில் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்திருக்கிறார். 40 வருடம் சிம்மாசனத்தில் நகர்த்த முடியாமல் அமர்ந்திருக்கிறார். அது மிகப்பெரிய சாதனை.

அவரது முதல் ரசிகனுக்கு இப்போது 65 வயது. 25 வயது உடையவரும் அவரது ரசிகனாக இருக்கிறார். 65 வயது ரசிகரும், 25 வயது ரசிகரையும் பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிதான். இதற்கு உழைப்பு மட்டும் காரணம் அல்ல. நல்ல எண்ணமும் இருக்கிறது.

‘படையப்பா’ படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தங்க சங்கிலி கொடுத்தார். அதில் மனிதாபிமானம் தெரிந்தது. ‘பாபா’ படம் நஷ்டமானபோது வினியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை நான் தருகிறேன் என்றார். அதில் கொடை உள்ளது தெரிந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் ரஜினி சொன்ன பதிலில் அவரது அறிவு முதிர்ச்சி வெளிப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக தமிழன் வரவேண்டும் என்கிறார்களே என்று அவரிடம் கேட்டனர். இது சிரமமான கேள்வி. நெஞ்சில் வேல் பாய்ச்சும் கேள்வி. சரியான கருத்துதானே, நாடாரோ, முதலியாரோ, பிள்ளைமாரோ வரவேண்டும் என்று சொல்லவில்லையே, தமிழன்தான் வரவேண்டும் என்று சொல்கிறார்கள் என்றார். அவர் தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறார். அவரது ‘கோச்சடையான்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

படத்தின் டைரக்டர் சவுந்தர்யா விழாவில் பேசியதாவது:–

‘கோச்சடையான்’ கார்ட்டூன் படம் அல்ல. அனிமேஷன் படம் ஆகும். நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பாடல்கள் உள்ளது. அப்பாவை (ரஜினிகாந்த்) வைத்து இயக்கியது பெருமை அளிக்கிறது. அவரது ருத்ரதாண்டவ நடன காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

‘கோச்சடையான்’ தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகளில் வெளியாகிறது. தமிழ், இந்தி படடிரெய்லர்களும் இன்று வெளியிடப்பட்டன. கோச்சடையான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழாவையொட்டி சத்யம் தியேட்டர் எதிரில் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘கோச்சடையான்’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றன. 3டி மோஷன் பிக்சர் தொழில்நுட்பத்தில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment