Tuesday, 18 March 2014

அமர்க்களமாக நடந்த மான் கராத்தே ஆடியோ விழா (படங்கள்)

சும்மா சொல்லவில்லை. படுஅமர்க்களமாகதான் நடந்தது மான் கராத்தே பாடல்கள் வெளியீட்டுவிழா. அரங்கு கொள்ளாத அழைப்பாளர்களுடன் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் முட்டி மோதியதில் சில விரும்பத்தகாத சம்பவங்கள். தடித்தடியாக இருந்த பவுன்சர்கள் அழைக்கப்பட்டவர்களையும் அலைக்கழித்தவிதம் பலரை முகம் சுழிக்க வைத்தது.


சிறப்பு அழைப்பாளர் ஷங்கர். நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன் என்றவர் அவரின் ஒவ்வொரு படத்தை குறிப்பிட்டு பேசியது, மேடை நாகரிகம் கருதி சொல்லப்பட்ட வெறும் வார்த்தையல்ல என்பதை உணர்த்தியது. நான் காரில் ஏறினால் வணக்கம் சென்னை பாடல்கள்தான் ஒலிக்கும் என்றது அனிருத்தை கள்வெறி கொள்ள வைத்திருக்கும்.



சரியான பாதையில் போய்கிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயன் பற்றி சொன்னவர், இப்படியோ போனால் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இணைந்து கொள்ளலாம் என்றார்.


இது மட்டும் சிவ கார்த்திகேயனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. விழா நெடுக கும்மியடித்த ரசிகர்களும், சிவ கார்த்திகேயனின் பேச்சும், அவர் ஏற்கனவே முன்னணி லிஸ்டில் இருப்பதை போலதான் இருந்தது.


என்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் இந்த நிலைக்கு வர ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் என்னை விழாமல் தாங்கிப் பிடிப்பார்கள் என்றார் சிவ கார்த்திகேயன்.


அண்ணாத்தே விரைவில் கட்சி ஆரம்பித்து சிஎம் போஸ்டுக்கு கர்ச்சீஃப் போடுவார் போலத் தோன்றியது. விழா நெடுக வருங்கால சூப்பர்ஸ்டார் என்று மேடையில் இருந்தவர்களும், ரசிகர்களும் கூச்சலிட்டதே அதற்கு சான்று.

நான் வளர்கிறேனே முருகா...


நடிகைகள் கோயிலுக்குச் செல்வதும், பூஜை செய்து யாகம் வளர்ப்பதும் அதிசயமில்லை. அதுபோலதான் லட்சுமி மேனன் பழனிக்கு வந்ததும், தங்கத்தேர் இழுத்ததும்.


மலையாளிகள் என்னதான் தமிழர்களை மட்டம் தட்டினாலும் ஆன்மீக விஷயத்தில் மலையாளி இந்துக்களுக்கு பழனியும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணியும் தவிர்க்க முடியாத வழிபாட்டுத்தலங்கள். குழந்தைகளின் முதல்முடியை காணிக்கை செலுத்த மலையாளிகள் அதிகம் படையெடுப்பது பழனிக்குதான்.


லட்சுமிமேனன் முதல்முறை பழனி வந்தபோது கும்கியில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது முருகனிடம் தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் செய்ய வேண்டும், செய்கிற படங்கள் வெற்றிபெற வேண்டும், சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும், எல்லாம் நடந்தால் தங்கத்தேர் இழுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம்.


முருகன் அருளால் நான் இப்போது வளர்ந்து வருகிறேன். அதனால்தான் தங்கத்தேர் இழுக்க வந்தேன் என்றார் லட்சுமிமேனன்.


தமிழ்க் கடவுளான முருகா... மலையாள நடிகையை வளர வைத்த நீ தமிழ் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பே வழங்குவதில்லையே. முருகா... இதென்ன ஓரவஞ்சனை.

ஷகிலா வேடத்தில் நடிப்பதாக வதந்தி : அஞ்சலி!!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதற்கான திரைக்கதையை ஷகிலாவே எழுதி உள்ளார். சினிமா அனுபவங்கள், கதாநாயகியாக ஆசைப்பட்டு கவர்ச்சி நடிகை ஆக்கப்பட்டது, திரைக்குப் பின்னால் தனக்கு நேர்ந்த தொல்லைகள், மலையாள பட உலகினர் பின்னிய சதி வலைகள் அனைத்தையும் ஷகிலா இந்த படம் மூலம் காட்சிப்படுத்த உள்ளார்.


இந்தியில் டேர்டி பிக்சர் பெயரில் படமான சில்க் சுமிதா வாழ்க்கை கதை வெற்றிகரமாக ஓடியதால் இதுவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அஞ்சலி தற்போது மீண்டும் மாயமாகி விட்டதாகவும், அமெரிக்காவில் குடியேறி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.


இந்த நிலையில் அவர் திடீரென ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது..


நான் ஷகிலா வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. அந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை அதற்கு பதில் வேறொரு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. இதுபோன்ற கதையைதான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.


இயக்குனர் சொன்னதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனை படமாக இருக்கும். எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று அஞ்சலி கூறினார்.

மதுவுக்கு நோ! சொல்லும் குடிமகன்!

சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சரக்கடிப்பார் உதயநிதி.. ஆனால் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் காதல் தோல்வியால் புலம்பினாலும்கூட சந்தானம் மட்டுமே ட்ரிங்ஸ் அருந்துவார். உதயநிதி அதை தொடாமல் பேசிக்கொண்டு மட்டும் இருப்பார்.


இதற்கு உதயநிதி சொல்லும் காரணம் நம்மை வியக்க வைக்கிறது..”என்னுடைய படங்களில் நான் மது அருந்துவது மாதிரியான காட்சிகளில் மது அருந்துவது போல நடிப்பதை தவிர்த்துவிடுகிறேன்.. இயக்குனரின் கதைப்படி காட்சிகளில் நான் தலையிட மாட்டேன்..


ஆனால் இனிவரும் என்னுடைய படங்களில் இது சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்கவேண்டி இருந்தாலும் கூட, நான் மது அருந்துவதில்லை என முடிவே செய்திருக்கிறேன்..” என்கிறார் உதயநிதி.


மேலும் “நான் வந்திருப்பது பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து. நான் நடிக்கும் கேரக்டர்கள் மூலமாக சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை. அதுவும் தவிர நமக்கும் சமூக பொறுப்பு என்பது இருக்கிறதே” என்றும் காரணம் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த முடிவு நிச்சயம் பாராட்டத்தக்கது.

அஜித்தா வேணாம் சாமி ! தீபிகா படுகோனே!

கெளதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


பின்னர் அவர் இரண்டு மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவரால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவெ அவர் படத்தில் இருந்து விலகினார். இதனால் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க பலர் பரிசீலிக்கப்பட்டனர்.


தற்போது தீபிகா படுகோனேவிடம் இயக்குனர் கெளதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் அஜீத் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை.


தீபிகா படுகோனே அஜித்துடன் நடிக்க ரூ.7கோடி சம்பளம் கேட்கிறார். ரூ.7 கோடிக்கு குறைவாக கொடுத்தால் அஜீத் படத்தில் நடிக்க முடியாது என கறாராக் கூறிவிட்டார்.


இவ்வளவு பெரிய தொகையை ஹிரோயினுக்கு கொடுக்க தயாரிப்பாளர் மறுத்துவிட்டதால், கெளதம் மேனன் வேறு நடிகையை பரிசீலனை செய்து வருகிறார். தற்போது நயன் தாரா மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சிம்புவுக்கு தருமடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்ததற்கு படத்துறையில் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவற்றில் ஒன்று…சிவகார்த்திகேயன் ஹன்சிகா இடையிலான நட்பு.

மான் கராத்தே படத்தில் இணைந்து நடிக்கும்போது ஹன்சிகா உடன் சிவகார்த்திகேயன் நட்பாகப்பழகியதுதான் சிம்புவை சினம் கொள்ள வைத்தது என்றும், அதன் காரணமாகத்தான் ஹன்சிகா உடனான காதலுக்கு குட்பை சொன்னார் என்றும் ஒரு கதை உலவிவரும்நிலையில்….

மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு, அவரது பேச்சில் உள்குத்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.

அப்படி என்ன பேசினார் சிவகார்த்திகேயன்?

‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையறது ரொம்ப லக்குதான்.

இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.

எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்தப் பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.”

என்று வழக்கமான வாசிப்புகளுக்குப் பிறகு ஹன்சிகா மேட்டரை டச் பண்ணினார் சிவகார்த்திகேயன். “ இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன்? அது ஒரு பெரிய தப்பா?”

என்று அவர் கேட்டது வெளிப்பார்வைக்கு காமெடியாகத் தோன்றினாலும், அது காமெடி இல்லை, சீரியஸ்.

“இது சிம்புவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி” என்றே சொல்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

தேசிய விருதுப் போட்டிக்கு 40 தமிழ் படங்கள்!!



2013ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன.



61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது.



கடந்த பெப்ரவரி 14ம் திகதி வரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது.



40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது.




தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள் மற்றும் விடியும் முன் உள்ளிட்ட பல படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.



பொக்ஸ் ஒபீஸ் பட பிரிவில் கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி, சூதுகவ்வும் படங்களும் மற்றும் திரைக்கு வரவுள்ள இனம், நெடுஞ்சாலை, ராமானுஜம் ஆகிய படங்களும் நுழைந்துள்ளன.