Sunday 23 February 2014

சத்துப்பட்டியல்: சோம்பு…!

சோம்பு விதைகளில் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன. பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை காயம்பெரோல் மற்றும் குவார்சிட்டின்.


புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கவல்லவை இவை. சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்ப் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. 100 கிராம் விதையில் 39.8 கிராம் அளவிற்கு நார்ச்சத்து காணப்படுகிறது.


இவை உட்கொள்ளும் உணவை எளிதில் செரிக்க வைக்கின்றன. மேலும் மலச்சிக்கலை சீராக்குகிறது. உடலுக்கு வலிவூட்டும் தாதுப் பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன.


தாமிரம் தாது, ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. சோம்பு விதைகளில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் இது அவசியம். இதிலுள்ள பொட்டாசியம் தாது, உடற் செல்களை வளவளப்பாக வைத்திருப்பதுடன், இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன.


வைட்டமின்- ஏ, இ, சி போன்றவையும், பீ-குழும வைட்டமின்களான தயாமின், பைரோடாக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.


சோம்பு விதைகள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு செரிமான சக்தியை அதிகரிக்கவும், வயிற்று வலியை நீக்கவும் சோம்பு கலந்த தண்ணீரை கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.


சோம்பு விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கை, கால் மூட்டு வலிகளை போக்குவதுடன் மட்டுமில்லாமல் இருமலையும் போக்க வல்லது. மீன், காய்கறி உணவுகள் போன்றவற்றில் செரிமானம் மற்றும் நறுமணத்திற்காக அதிக அளவில் சோம்பு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கேக், பிஸ்கட், வெண்ணை, ரொட்டி தயாரிப்பிலும் சோம்பு சேர்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment