Saturday, 8 March 2014

டைட்டானிக்கில் அலைகள் ஓய்வதில்லை! பாரதிராஜா ஹாலிவுட் படம்!

பாரதிராஜா ஹாலிவுட் படம் எடுக்கப்போறார்னு செய்தி வந்ததுக்கு அப்புறம் எனக்கு ரெண்டு பிறந்தநாள் வந்துட்டுப் போயிடுச்சு. அதுதான் 'டைட்டானிக்’ படத்தை பாரதிராஜா ரீமேக் பண்ணினா எப்படி இருக்கும்னு நானே ஒரு கற்பனைப் படம் ஓட்டிப் பார்த்தேன். ஃபாலோ மீ.

அந்தக் கரகர குரலின் அறிமுகத்துடன் ஆரம்பிப்போமா?

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா மீண்டும் ஒரு காதல் காவியத்தோடு வருகிறேன். இந்த முறை உங்களுக்குக் கடல் வாசனையை அறிமுகம் செய்யப்போகிறது இந்த கிராமத்துக் குயில். வாருங்கள் இந்தக் கடல் கரைத்த கண்ணீர்க் கவிதையைக் காதலால்  வாசிப்போம்.

மாயனுக்கும் (மனோஜ்), ரோசாவுக்கும் நிச்சயம் முடிஞ்சுது. அவங்க கல்யாணத்துக்காக ரோசாவோட அப்பனும் சின்னாத்தாளும் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு குலதெய்வக் கோயிலுக்கு கப்பல்ல (அட குலதெய்வக் கோயிலு மலேசியா முருகன் கோயிலுப்பு!) போறாக. மாட்டுவண்டியில் வந்து இறங்கி கப்பல்ல ஏறுது ரோசாவோட  குடும்பம். அப்படியே பிளாட்ஃபாரத்துல இருக்கிற முறுக்கு, அதிரசக் கடை, சாராயக் கடை, பீடிக் கடை எல்லாத்தையும் காட்டிட்டு ஹீரோ இருக்கிற இடத்தை நோக்கி கேமரா போகுது. அங்கே ஆடு, மாட்டைப் பேரம் பேசிட்டிருக்காரே... அதான் நம்ப ஹீரோ விருமண்.


ஆட்டை வித்தக் காசுல அமெரிக்காவுக்கு டிக்கெட் வாங்கிட்டு கப்பல் நோக்கிப் போறான். கப்பல்ல அவனுடைய பக்கத்து ரூம்ல இருக்கிற ரோசாவைப் பாத்ததும் தந்தனன தந்தனானானு வெள்ளை டிரெஸ் போட்டுட்டு அவளைச் சுத்தி நாலைஞ்சு பொண்ணுக பாடுற மாதிரி தெரியுது. அட புரியலையா... தட் இஸ் லவ்!


அடுத்த நாள் காலையில் அவங்க அப்பா காபித்தண்ணி குடிக்க, சின்னாத்தா வெத்தலை போட, மாமன் மாயன் சீட்டாடப் போனதுக்கப்புறம் அவளைப் பார்த்துக் காதலைச் சொல்றான் விருமண். ஆனா, அவளுக்கு நிச்சயமாயிடுச்சுனு சொன்னதும் பயலுக்கு மனசொடிஞ்சு போய்டுது. மறுநா காலையில அவ மாமன் அவளுக்குத் தங்கத்துல தந்தட்டி வாங்கித் தர்றான். அதைப் பல்ல இளிச்சிக்கிட்டே வாங்குறா. அதை அப்பா கருத்தமாயிகிட்ட காட்டப் போகும் வழியில் மாமா வேற ஒருத்தியைக் கொஞ்சுறதைப் பார்க்கிறா. அவுக சின்னாத்தாகிட்ட சொல்லி அழுவுறா. ஆனா, அவுக அடியேய் சிறுக்கி அவன் நெறையா சீர் தாறேன்னு சொல்லிருக்கான். கல்யாணத்தை நிறுத்த முடியாதுனு சொல்லிட்டு  சீரியல் பார்க்கப் போயிருது.


சின்னாத்தாளை எதிர்த்து எதுவும் பண்ண முடியாதுனு அவ தற்கொலை பண்ணிக்க கப்பலோட முன் பக்கத்துக்குப் போறா. அங்கே இருந்த ஹீரோ விருமண், ''இந்தா புள்ள நான் உன் மாமன்கிட்டேயிருந்து காப்பாத்துறேன்''னு சொல்லிட்டிருக்கும்போது கால் நழுவி கம்பியில் எலுமிச்சம்பழம் கட்டியிருந்த கயித்தைப் புடிச்சித் தொங்கிட்டிருக்கா. அப்போ விருமண்தான் அவளைக் காப்பாத்துறான். உடனே, ரோசாவும் விருமணைக் காதலிக்க ஆரம்பிச்சிடுறா. ரெண்டு பேரும் கப்பலைச் சுத்திச் சுத்தி டூயட் பாடி லவ் பண்றாங்க. பாட்டுல ஒரு சீன்ல விருமண்ணுக்கு கால்ல கம்பி குத்தி ரத்தம் வடியுது. ரோசாதான் எச்சியைத் துப்பி சரிபண்றா (டைரக்டர் டச்).


அப்போ சாராயம் குடிச்சிட்டு வர்ற மாயன் இவுக லவ்வுறதைப் பார்த்துடறான். கப்பலுக்குள்ளே பஞ்சாயத்து நடக்குது. அந்த நேரத்துல கப்பலோட கேப்டன் பிரபுவுக்கு ஹார்ட் அட்டாக் வருது. தனக்குப் பிறகு யாரும் இந்தக் கப்பலை ஓட்டக் கூடாதுனு முடிவு பண்ற பிரபு கப்பலை ஒரு பாறையை நோக்கித் திருப்புறாரு. தடுக்க வர்றவன்கிட்ட 'என் கப்பல்! என் உரிமை! புரட்சிப் போராட்டம்’ னு டயலாக் விட்டுட்டு டாப் கியர்ல கப்பலை ஓட்டுறாரு. பஞ்சாயத்துல இருக்கிறவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுறாய்ங்க.


மாயன் டவுசர்லயே உச்சா போறான். விருமண், ரோசாவைக் கூட்டிக்கிட்டு தப்பிக்க முயற்சி பண்றான். கடைசியில பாறையில மோதி கப்பல் முங்குது. ஆனா, விருமண் ரோசாவைக் காப்பாத்திடுறான். அவ மயங்கிக்கிடக்கிறப்போ அவளோட தண்டட்டியைச் சுட்டுட்டு ஓடிடறான். இப்போ கிளைமாக்ஸ், திருடிட்டுப் போன தன்னோட தண்டட்டியையும், மனசையும் என்னைக்காவது ஒருநாள் கொண்டுவந்து குடுப்பான்னு உசிலம்பட்டி சந்தையில் வயசாகிப்போன ரோசா உக்காந்திருக்கா.

'எ ஃபிலிம்  பை பாரதிராஜா’ னு போட்டு முடிக்கிறோம்!

0 comments:

Post a Comment