Saturday 8 March 2014

ஆட்டத்திலும் குறியீடு பாஸ்! இங்கே பாருங்க பாஸ்!

நம்ம சினிமாவில் ஹீரோக்கள் தொடங்கி இயக்குநர்கள் வரைக்கும் யார் யாரோ என்னென்னமோ குறியீடெல்லாம் காட்டிட்டுப் போறாங்க. ஆனா, நம்ம டான்ஸ் மாஸ்டர்ஸ் பல படங்கள்ல மிக முக்கியமான விஷயங்களை எல்லாம் குறியீடாக் காட்டிட்டுப் போறாங்க. அதையெல்லாம் நாம என்னைக்குத்தான் கவனிச்சிருக்கோம். சரி அப்படி என்னதான் காட்டுறாங்கனு சில சாம்பிள்ஸ் பார்ப்போம் வாங்க...


'சரோஜா’ படத்துல 'கோடானகோடி’ னு ஒரு பாட்டு. அதில் பார்த்தீங்கனா, டான்ஸ் ஆடற எல்லோரும் ரெண்டு கையையும் எடுத்து முன்னாலேயும் பின்னாலேயும் துடைச்சிக்கிற மாதிரியான ஒரு ஸ்டெப். சாதாரணமாப் பாத்தா அது நமக்குப் புரியாது. ஆனா அதில் சொல்ல வருகிற மேட்டரே வேற... நாட்டில்  குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. வருங்காலத்தில் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவக்கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படலாம். எனவே அதற்கான முன் நடவடிக்கைகளை எல்லாம் நாம் எடுத்தாக வேண்டும் என்பதைத்தான் சிம்பாலிக்காகச் சொல்லியிருக்கிறார்கள்.




'சூது கவ்வும்' படத்தில் 'காசு பணம் துட்டு மணி’ பாடலின் ஒட்டுமொத்த நடன அமைப்பும் தவறான வழியில் பணம் சேர்த்துவைத்திருக்கும் இன்றைய பணக்கார வர்க்கத்தின் ஆணவத்தையும், தகிடுதத்தங்களையும், திடீர் ஆடம்பரங்களையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள் நம்ம நடன இயக்குநர்கள்.


கடைசியாக 'மங்காத்தா’ படத்தில் வரும் 'விளையாடு மங்காத்தா’ பாடலில் டான்ஸ் மாஸ்டர் பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவதைப் போல் அஜித்துக்கு ஒரு ஸ்டெப் கொடுத்திருப்பார். இது எதைக் காட்டுகிறது என்றால், ஆணும் பெண்ணும் சரிசமமாக வேலைக்குச் செல்லும் வளர்ந்துவிட்ட சமூகத்தில் வாழும் நாம் ஆண் குழந்தைகளுக்கும் சமையலைக் கற்றுக்கொடுக்க வேண்டும், அப்போதுதான் குடும்ப சுமையைப் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற மிக மிக முக்கியமான விஷயத்தை மேம்போக்காகக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.




இதையெல்லாம் படிச்சிட்டு ஏன்யா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குனு உங்க மைண்ட் வாய்ஸ்ல ஓடுறது கேட்குது. அடுத்த தடவை இந்தப் பாட்டையெல்லாம் பாக்கும்போது அட, ஒருவேளை உண்மையாதான் இருக்குமோனு உங்களுக்கே மண்டையில் பல்பு எரியும் பாருங்களேன்!

0 comments:

Post a Comment