Friday, 14 February 2014

ஸ்ட்ராபெர்ரி பழமும் முக அழகும்!

சருமத்துக்கு இளமையைக் கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதிலும் பழ வகைகளில் அதிக அளவு முகத்தைப் பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி.

தன் சுவையால் நாக்கைச் சுண்டி இழுப்பதுபோல், அழகையும் இது அள்ளித்தருவது உண்மை என்கிறது அழகியல் ஆராய்ச்சி.

ஸ்ட்ராபெர்ரியைப் பயன்படுத்தி, முகத்தைப் பளிச்செனக் காட்டும் டிப்ஸ்கள் என்னவெனில்,


சிவப்பு நிறத்தில் ஜொலிக்க

நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும்.

இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

பருக்கள் நீங்க

ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.

இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். சருமத்தில் உள்ள பெரிய துளைகளைச் சிறியதாக்கி, தொங்கிய சருமத்தை இறுக்கும்.

ச‌ருமத்தைப் பொலிவாக்க‌

ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து, நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். இந்த ஜூஸை இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் 100 மில்லி குளிர்ந்த பன்னீர் கலந்து முகத்தைக் கழுவவும்.

இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, ஒரு மெல்லிய துணியை உருண்டையாகச் சுற்றி, அதை ஜூஸில் தோய்த்து முகம் எங்கும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யவும்.

நன்றாக உலர்ந்ததும், கழுவவும். தினமும் இரவில் இதுபோல் செய்துவர, சருமம் பிரகாசமாக மிளிரும். இதைச் செய்யும்போது, க்ரீம் எதுவும் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஜூஸை ஃப்ரிட்ஜில் 15 நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இளமையைக் கூட்ட

ஆறு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து நன்றாக மசிக்கவும். இதனுடன் மிதமான சுடுதண்ணீரை விட்டுக் கலந்து முகத்தில் பூசி, விரலால் வட்டமாக மசாஜ் செய்யவும்.

10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இப்படிச் செய்து வந்தால், என்றும் சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

சோர்வை நீக்கிப் பளிச்சென மாற்ற

மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் 'மாஸ்க்’ போல போடவும்.

நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.

அழுக்கை நீக்கிச் சுத்தமாக்க

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூஸுடன் அதே அளவு கரட் ஜூஸ் கலந்து முகத்தில் நன்றாகப் பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

சரும அழுக்கை நீக்கி, முக‌த்தில் துளியும் அழுக்கு சேராமல் பாதுகாக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய அருமையான 'க்ளென்சிங்’ முறை இது. 

LG அறிமுகப்படுத்தும் 105 அங்குல அளவுடைய தொலைக்காட்சி!

தொழில்நுட்ப உலகில் புரட்சியினை ஏற்படுத்திவரும் LG நிறுவனம் 105 அங்குல அளவுடைய Ultra HD தொலைக்காட்சியினை அறிமுகம் செய்கின்றது.


21:9 என்ற அளவுப் பரிமாணத்தைக் கொண்டதும், 5120 x 2160 Pixel Resolution உடையதுமான இத்தொலைக்காட்சி HDMI 2.0, USB மற்றும் LAN ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.


இறுதியாக 84 அங்குல அளவுடைய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய LG நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தும் LED LCD தொழில்நுட்பத்தினைக் கொண்ட மிகப்பெரிய தொலைக்காட்சி இதுவாகும்.

பாலுமகேந்திராவை நினைவுக்கூர்ந்த திரைபிரபலங்கள்...!!

தனது அழகிய ஒளிப்பதிவாளும், நிகரற்ற படைப்பாலும் தமிழ் சினிமாவை புதிய உலகத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா எனும் சகாப்தம் மறைந்துவிட்டது. அவர் மறைந்துவிட்டாலும் அவரது படைப்புகள் என்றும் நீங்காமல், தலைமுறை தலைமுறையாய் தொடரும் என்றால் நிகரல்ல. இந்த தருணத்தில் பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்ற திரையுலக பிரபலங்கள், அவரின் நினைவுகளை பங்கிடுகின்றனர்.

பெற்றதற்கு நன்றி சொல்லணும் - கமல்

பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பாலுமகேந்திரா இழந்ததற்கு இறப்பை சொல்வதை விட, பெற்றதற்கு நன்றி சொல்வது முக்கியம். பாலுமகேந்திரா அளித்த கொடை மிகப்பெரியது. இங்கே நன்றி சொல்லுதல் என்று கூட சொல்லலாம். பாலு ரொம்ப திறமையானவர், அறிய மனிதர், உலக சினிமா கொண்டாடியவர், ஏற்கனவே வேறொரு பேட்டியில் சொல்லியிருந்தேன், இன்னும் நிறைய படங்கள் செய்யாமல் போனது, எனக்கு திகைப்பு அல்ல, வருத்தமே. தமிழ் சினிமா நன்றியுடன் பார்க்கிறது. சீடர்களை தந்திருக்கிறார். அவரை வழியனுப்பும் நேரத்தில் அவருடைய சீடர்களையும் வரவேற்க வேண்டும்.

ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா - வைரமுத்து

பாலுமகேந்திரா என்ற பெருங்கலைஞர் பெளதிக ரீதியாக இன்றில்லை. ஆனால் அவர் படைப்புகளில் அவர் மரிப்பதில்லை. இந்த உலகத்தை அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் பாலு மகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள். தன்னை அழகாகக் காட்டியவர் இன்றில்லையே என்று கண்கள் இருந்தால் நிலா அழும் ; வாய் இருந்தால் பூ புலம்பும். சூரியனைப் பனித்துளியாகவும் பனித்துளியைச் சூரியனாகவும் நிறப்பிரிகை செய்த ஒளிப்பதிவு மேதை அவர். பாலு மகேந்திரா ஒரு படைப்பாளி மட்டுமல்லர் ; இலக்கியவாதி. உலகத்தின் தலைசிறந்த படைப்புகளையெல்லாம் காதலோடு கற்றவர். அந்த இலக்கியச் சாரங்களை வெள்ளித்திரையில் பிம்பப்படுத்தியவர்.

மூன்றாம் பிறை - உன் கண்ணில் நீர் வழிந்தால் - நீங்கள் கேட்டவை ஆகிய படங்களில் அவருக்கு நான் பாடல் எழுதிய நாட்கள் சுகமானவை. மனித மனங்களின் இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். தம் ஒளிப்பதிவின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை இந்திய உயரத்திற்கு ஏற்றியவர். அவரது கடைசி உறக்கத்தை இன்று சென்று பார்த்தேன். அடுத்த படைப்பைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் அவர் இருப்பதாகவே தோன்றியது. அவருக்கு எழுதிய பாடல்களில் அவருக்கும் எனக்கும் பிடித்த ஒரு பாடல் நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெற்றது.

”கனவு காணும் வாழ்க்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்” ,

 - இந்தப் பாடலையே அவருக்கு என் அஞ்சலியாகச் செலுத்துகிறேன். அவர் பட்டறையில் தயாரான இயக்குனர்கள் அவரது புகழை உயர்த்திப் பிடிப்பார்கள். அந்த வரிசையில் அவர் நண்பன் என்ற முறையில் நானும்.

எனக்கு முகவரி தந்தவர் - இயக்குனர் சீனுராமசாமி

இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை பிரியர் என பன்முகம் கொண்டவர். தான் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை பிறருக்கு, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி கற்றுத்தந்த அருமையான ஆசிரியர். அவரது மாணவனாக, அவரிடம் கற்றுக்கொண்டது ஏராளம். 1996ல் பாலுமகேந்திராவிற்கு கடிதம் எழுதினேன். அதில், அவருக்கே உரிய தனித்துவம் குறித்து அலசியிருந்தேன். அதைப்படித்து பார்த்து உடனே, என்னை சென்னைக்கு வரவழைத்தார். அப்போது, பாலு சாரின் சென்னை வீட்டு விலாசத்தை தவிர, வேறு யாரையும் எனக்கு தெரியாது. பாலு சாரை, அவரது வீட்டில் சந்தித்து பேசினேன். அன்று முதல் என்னை, மாணவனாக ஏற்றுக்கொண்டு சினிமாவை எனக்கு கற்றுத்தந்தார். எனது படைப்புகளை, அவர் பாதங்களில் சமர்ப்பிக்றேன்.

மறுபடியும் தொடரும் - நடிகை ரோகிணி

யதார்த்தமான சினிமாவை ரசிகர்களுக்கு காண்பித்த, அற்புதமான இயக்குனர் பாலு மகேந்திரா. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப வெளிவரும் திரைப்படங்களில் அவரது பாதிப்பு இருக்கும். அவரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் மட்டுமல்ல, அவரது படங்களை பார்த்து, மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அவரது இயக்கத்தில் மறுபடியும் படத்தில் நான் நடித்த போது, சினிமாவை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். சினிமா கலையை தன் கண்ணில் சுமந்து வாழ வைத்தவர். திரையுலக சகாப்தத்தில் மறுபடியும் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கும்.

சினிமாவை சுவாசித்தவர் - இயக்குநர், நடிகர் சசிக்குமார்

சினிமாவை ஆழமாக நேசித்தவர். நான் தயாரித்த தலைமுறை படத்தில் அவர் நடித்த போது, அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு வேகம், சுறுசுறுப்புடன் செயல்பட்டார். தலைமுறையை ஒரு பதிவாக வைத்து விட்டு சென்றுள்ளார். நிறைய படங்கள் செய்வார் என எதிர்பார்த்திருந்தோம். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, பார்க்க சென்றிருந்தேன். அப்போது அவர், மீண்டும் சினிமாவை இயக்க வேண்டும், நடிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். சினிமா, அவரது சுவாசம். 

பாலாவை தேடும் இயக்குனர்கள்!

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ்-வெற்றிமாறன் ஆகியோர் தங்களது பேனரில் மற்ற இயககுனர்களுக்கு சான்ஸ் கொடுத்து வருவதைப்போன்று சில வருடங்களுக்கு முன்பு வரை ஷங்கர்-பாலா ஆகிய இரண்டு மெகா டைரக்டர்களும் செயல்பட்டனர். இதில், ஷங்கர் ஈரம், ரெட்டைச்சுழி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் உள்பட பல படங்களை தயாரித்தார். ஆனால் அவற்றில் வடிவேலு நடித்த இம்சை அரசன் மட்டுமே வெற்றி பெற்று நாலு காசு பார்த்தார் ஷங்கர். மற்ற எல்லா படங்களுமே அவரது கல்லாவுக்கே வேட்டு வைத்தன.

அதனால் அதன்பிறகு தனது எஸ் பிக்சர்ஸை இழுத்து மூடியே விட்டார் ஷங்கர்.அதையடுத்து இன்னும் அதை திறப்பதற்கான மூடுக்கே அவர் வரவில்லை. பாலாவை எடுத்துக்கொண்டால், தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் சூர்யா-ஜோதிகா நடித்த மாயாவி என்ற படத்தை தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். அதன்பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகளால், அந்த நிறுவனத்தை மூடியே வைத்திருந்த பாலா, தற்போது மிஷ்கினுக்காக மீண்டும் திறப்பு விழா நடத்தியிருக்கிறார்.

பாலா எப்படி கதை விசயத்தில் காம்ப்ரமிஸ் ஆக மாட்டாரோ அதேபோன்று மிஷ்கினும் பிடிவாதக்காரர். எப்படியோ இவர்கள் இருவரும் கைகோர்த்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியே. ஆனால், இந்த தருணத்தில் சேது, பிதாமகன் பாணியில் ஹீரோக்களை அடையாளம் தெரியாமல் உருமாற்றிக்காட்டும் கதைகள் பண்ணி வைத்திருக்கும் சில புதுவரவு டைரக்டர்களும் பாலாவிடம் கதை சொல்ல படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் தனது கரகாட்டப்பட வேலைகளில் தீவிரமடைந்திருப்பதால், இன்னும் கதைகள் கேட்கும் மூடுக்கு வரவில்லையாம் பாலா.

Thursday, 13 February 2014

பாலா படத்தில் வரலெட்சுமி சரத்குமார்..... ஸ்ரேயா என்ன ஆனார்?

 பாலா - சசிகுமார் இணையும் படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


'பரதேசி' படத்தினைத் தொடர்ந்து பாலா தனது பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவோடு கைகோர்த்திருக்கிறார் பாலா.


இப்படத்தில் நாயகியாக நடிக்க பலரையும் அழைத்து டெஸ்ட் ஷுட் செய்து பார்த்தார்கள். தற்போது படத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வரலெட்சுமி. அதற்கு பிறகு விஷாலுடன் இவர் நடித்த 'மதகஜராஜா' இன்னும் வெளியாகவில்லை.


தற்போது பாலா படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால் மிகுந்த் சந்தோஷத்தில் இருக்கிறார் வரலெட்சுமி. 

ட்விட்டரில் இருந்து விலகினார் யுவன்!

 இஸ்லாத்தைப் பின்பற்றுவது தொடர்பாக எழுந்த விமர்சனங்களின் எதிரொலியாக, தீவிரமாக இயங்கி வந்த ட்விட்டர் தளத்தில் இருந்து இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விலகினார்.


இசையமைப்பாளர்களில் தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் இயங்கி வந்தவர் யுவன் சங்கர் ராஜா. தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள், பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தார்.


தற்போது இஸ்லாம் மதத்தினைத் தழுவியுள்ளார் யுவன். இச்செய்தி பல நாட்களாக இணையத்தில் உலவி வந்த போதும், தனது ட்விட்டர் தளம் மூலமே அதனை உறுதி செய்தார் யுவன்.


" நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை. அச்செய்தி பொய்யானது. ஆம். நாம் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தினர் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவிதத்திலும் கருத்து வேறுபாடு இல்லை" என்று இறுதியாக தனது ட்விட்டர் தளத்தில் ட்விட்டினார்.


தொடர்ச்சியாக, யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவது தொடர்பாக அவரது ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்த வண்ணம் இருந்தனர்.


இந்த எதிர்வினையை எதிர்கொள்ள விரும்பாத யுவன் சங்கர் ராஜா, தனது ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டார்.


யுவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான @Raja_Yuvan என்ற கணக்கு இப்போது இல்லை. 

Wednesday, 12 February 2014

தொண்டைச் சளிக்கு ஓமம்!

ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.