Friday 14 February 2014

பாலுமகேந்திராவை நினைவுக்கூர்ந்த திரைபிரபலங்கள்...!!

தனது அழகிய ஒளிப்பதிவாளும், நிகரற்ற படைப்பாலும் தமிழ் சினிமாவை புதிய உலகத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா எனும் சகாப்தம் மறைந்துவிட்டது. அவர் மறைந்துவிட்டாலும் அவரது படைப்புகள் என்றும் நீங்காமல், தலைமுறை தலைமுறையாய் தொடரும் என்றால் நிகரல்ல. இந்த தருணத்தில் பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்ற திரையுலக பிரபலங்கள், அவரின் நினைவுகளை பங்கிடுகின்றனர்.

பெற்றதற்கு நன்றி சொல்லணும் - கமல்

பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பாலுமகேந்திரா இழந்ததற்கு இறப்பை சொல்வதை விட, பெற்றதற்கு நன்றி சொல்வது முக்கியம். பாலுமகேந்திரா அளித்த கொடை மிகப்பெரியது. இங்கே நன்றி சொல்லுதல் என்று கூட சொல்லலாம். பாலு ரொம்ப திறமையானவர், அறிய மனிதர், உலக சினிமா கொண்டாடியவர், ஏற்கனவே வேறொரு பேட்டியில் சொல்லியிருந்தேன், இன்னும் நிறைய படங்கள் செய்யாமல் போனது, எனக்கு திகைப்பு அல்ல, வருத்தமே. தமிழ் சினிமா நன்றியுடன் பார்க்கிறது. சீடர்களை தந்திருக்கிறார். அவரை வழியனுப்பும் நேரத்தில் அவருடைய சீடர்களையும் வரவேற்க வேண்டும்.

ஒளிப்பதிவு மேதை பாலுமகேந்திரா - வைரமுத்து

பாலுமகேந்திரா என்ற பெருங்கலைஞர் பெளதிக ரீதியாக இன்றில்லை. ஆனால் அவர் படைப்புகளில் அவர் மரிப்பதில்லை. இந்த உலகத்தை அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் பாலு மகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள். தன்னை அழகாகக் காட்டியவர் இன்றில்லையே என்று கண்கள் இருந்தால் நிலா அழும் ; வாய் இருந்தால் பூ புலம்பும். சூரியனைப் பனித்துளியாகவும் பனித்துளியைச் சூரியனாகவும் நிறப்பிரிகை செய்த ஒளிப்பதிவு மேதை அவர். பாலு மகேந்திரா ஒரு படைப்பாளி மட்டுமல்லர் ; இலக்கியவாதி. உலகத்தின் தலைசிறந்த படைப்புகளையெல்லாம் காதலோடு கற்றவர். அந்த இலக்கியச் சாரங்களை வெள்ளித்திரையில் பிம்பப்படுத்தியவர்.

மூன்றாம் பிறை - உன் கண்ணில் நீர் வழிந்தால் - நீங்கள் கேட்டவை ஆகிய படங்களில் அவருக்கு நான் பாடல் எழுதிய நாட்கள் சுகமானவை. மனித மனங்களின் இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். தம் ஒளிப்பதிவின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை இந்திய உயரத்திற்கு ஏற்றியவர். அவரது கடைசி உறக்கத்தை இன்று சென்று பார்த்தேன். அடுத்த படைப்பைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் அவர் இருப்பதாகவே தோன்றியது. அவருக்கு எழுதிய பாடல்களில் அவருக்கும் எனக்கும் பிடித்த ஒரு பாடல் நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெற்றது.

”கனவு காணும் வாழ்க்கையாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்” ,

 - இந்தப் பாடலையே அவருக்கு என் அஞ்சலியாகச் செலுத்துகிறேன். அவர் பட்டறையில் தயாரான இயக்குனர்கள் அவரது புகழை உயர்த்திப் பிடிப்பார்கள். அந்த வரிசையில் அவர் நண்பன் என்ற முறையில் நானும்.

எனக்கு முகவரி தந்தவர் - இயக்குனர் சீனுராமசாமி

இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசை பிரியர் என பன்முகம் கொண்டவர். தான் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை பிறருக்கு, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி கற்றுத்தந்த அருமையான ஆசிரியர். அவரது மாணவனாக, அவரிடம் கற்றுக்கொண்டது ஏராளம். 1996ல் பாலுமகேந்திராவிற்கு கடிதம் எழுதினேன். அதில், அவருக்கே உரிய தனித்துவம் குறித்து அலசியிருந்தேன். அதைப்படித்து பார்த்து உடனே, என்னை சென்னைக்கு வரவழைத்தார். அப்போது, பாலு சாரின் சென்னை வீட்டு விலாசத்தை தவிர, வேறு யாரையும் எனக்கு தெரியாது. பாலு சாரை, அவரது வீட்டில் சந்தித்து பேசினேன். அன்று முதல் என்னை, மாணவனாக ஏற்றுக்கொண்டு சினிமாவை எனக்கு கற்றுத்தந்தார். எனது படைப்புகளை, அவர் பாதங்களில் சமர்ப்பிக்றேன்.

மறுபடியும் தொடரும் - நடிகை ரோகிணி

யதார்த்தமான சினிமாவை ரசிகர்களுக்கு காண்பித்த, அற்புதமான இயக்குனர் பாலு மகேந்திரா. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப வெளிவரும் திரைப்படங்களில் அவரது பாதிப்பு இருக்கும். அவரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் மட்டுமல்ல, அவரது படங்களை பார்த்து, மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அவரது இயக்கத்தில் மறுபடியும் படத்தில் நான் நடித்த போது, சினிமாவை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். சினிமா கலையை தன் கண்ணில் சுமந்து வாழ வைத்தவர். திரையுலக சகாப்தத்தில் மறுபடியும் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கும்.

சினிமாவை சுவாசித்தவர் - இயக்குநர், நடிகர் சசிக்குமார்

சினிமாவை ஆழமாக நேசித்தவர். நான் தயாரித்த தலைமுறை படத்தில் அவர் நடித்த போது, அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவு வேகம், சுறுசுறுப்புடன் செயல்பட்டார். தலைமுறையை ஒரு பதிவாக வைத்து விட்டு சென்றுள்ளார். நிறைய படங்கள் செய்வார் என எதிர்பார்த்திருந்தோம். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, பார்க்க சென்றிருந்தேன். அப்போது அவர், மீண்டும் சினிமாவை இயக்க வேண்டும், நடிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். சினிமா, அவரது சுவாசம். 

0 comments:

Post a Comment