Friday, 14 February 2014

பாலாவை தேடும் இயக்குனர்கள்!

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ்-வெற்றிமாறன் ஆகியோர் தங்களது பேனரில் மற்ற இயககுனர்களுக்கு சான்ஸ் கொடுத்து வருவதைப்போன்று சில வருடங்களுக்கு முன்பு வரை ஷங்கர்-பாலா ஆகிய இரண்டு மெகா டைரக்டர்களும் செயல்பட்டனர். இதில், ஷங்கர் ஈரம், ரெட்டைச்சுழி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் உள்பட பல படங்களை தயாரித்தார். ஆனால் அவற்றில் வடிவேலு நடித்த இம்சை அரசன் மட்டுமே வெற்றி பெற்று நாலு காசு பார்த்தார் ஷங்கர். மற்ற எல்லா படங்களுமே அவரது கல்லாவுக்கே வேட்டு வைத்தன.

அதனால் அதன்பிறகு தனது எஸ் பிக்சர்ஸை இழுத்து மூடியே விட்டார் ஷங்கர்.அதையடுத்து இன்னும் அதை திறப்பதற்கான மூடுக்கே அவர் வரவில்லை. பாலாவை எடுத்துக்கொண்டால், தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் சூர்யா-ஜோதிகா நடித்த மாயாவி என்ற படத்தை தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். அதன்பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகளால், அந்த நிறுவனத்தை மூடியே வைத்திருந்த பாலா, தற்போது மிஷ்கினுக்காக மீண்டும் திறப்பு விழா நடத்தியிருக்கிறார்.

பாலா எப்படி கதை விசயத்தில் காம்ப்ரமிஸ் ஆக மாட்டாரோ அதேபோன்று மிஷ்கினும் பிடிவாதக்காரர். எப்படியோ இவர்கள் இருவரும் கைகோர்த்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியே. ஆனால், இந்த தருணத்தில் சேது, பிதாமகன் பாணியில் ஹீரோக்களை அடையாளம் தெரியாமல் உருமாற்றிக்காட்டும் கதைகள் பண்ணி வைத்திருக்கும் சில புதுவரவு டைரக்டர்களும் பாலாவிடம் கதை சொல்ல படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் தனது கரகாட்டப்பட வேலைகளில் தீவிரமடைந்திருப்பதால், இன்னும் கதைகள் கேட்கும் மூடுக்கு வரவில்லையாம் பாலா.

0 comments:

Post a Comment