Sunday 2 February 2014

கமல் பாணியில் புது டைரக்டர்....!

துபாயில் பொறியாளராக இருக்கும் மனுகண்ணன் என்பவர் அங்குசம் என்ற படத்தை தயாரித்து, டைரக்ட் செய்திருக்கிறார். இந்தப் படம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றியது. அதாவது படத்தின் ஹீரோ தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அநியாயத்தை தட்டிக் கேட்பார். இதனால் அவருக்கு அதிகார மையங்களில் இருந்து பல பிரச்சனைகள் வரும். இப்படியான கதை.

இந்த படத்துக்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் கொடுத்தது. உடனே வரிவிலக்கு கமிட்டிக்கு மனுப்போட்டார், மனு கண்ணன். வரிவிலக்கு கமிட்டியும் படத்தை பார்த்துவிட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் வரிவிலக்கு தரலாம் என்று கூறியது. ஆனால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரின் உதவியாளர் வரிவிலக்கு தகுதி பெற லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சப் பணம் முதல்வர் வரை செல்வதாகவும் பரபரப்பு பேட்டி அளித்துவிட்டார், மனுகண்ணன். இதனால் முதல்வர், வணிகவரித்துறை அமைச்சர் ஆகியோர் மனு கண்ணன் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மனுகண்ணன் இந்த மாதம் அங்குசம் படத்தை ரிலீஸ் பண்ணுவதில் தீவிரமாக இறங்கி விட்டார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நல்ல சினிமாவை மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காகத்தான் எனது வேலையை விட்டுவிட்டு இந்தப் படத்தை எடுத்தேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பயன்படுத்தாமல் இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்தில் எடுத்தேன். முதல்வரை பற்றியோ, தமிழக அரசைப் பற்றியோ ஒரு காட்சிகூட படத்தில் கிடையாது.

மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகத் தான் பேட்டி கொடுத்தேன். அதை தவறாக புரிந்து கொண்டு என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். அதனை நான் சட்டப்படி சந்திப்பேன். இந்த மாதம் படத்தை ரிலீஸ் பண்ணுகிறேன். அதை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்தாலோ அல்லது படம் தோற்கடிக்கப்பட்டாலோ நான் விட்டு வந்த வேலை அப்படியே இருக்கிறது. லண்டன், துபாய் அல்லது அமெரிக்கா சென்று செட்டிலாகிவிடுவேன். இன்னும் சம்பாதித்து இதேபோன்ற விழிப்புணர்வு படத்தை திரும்ப எடுப்பேன். என்றார்.

0 comments:

Post a Comment