Saturday 15 March 2014

அந்த நாள் ஞாபகம்: கோபக்காரக் கதாநாயகன்!

 புதுக்கோட்டை உலகநாதன்பிள்ளை சின்னசாமி என்கிற பி.யு. சின்னப்பா, தமிழ் சினிமாவின் ஆரம்ப கால நாயகர்கள் வரிசையில் தனியிடம் பிடித்தவர். முதல் சூப்பர் ஆக்டர் என்று பெயர் பெற்றவர். முதல்முதலாக பாரதியார் பாடல்களை திரையில் பாடியவர், முதல்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தவர் என்கிற பெருமையெல்லாம் அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டுள்ளன. ‘உத்தமபுத்திரன்’ படத்தில் இரட்டை வேடம், ‘மங்கையர்க்கரசி’யில் மூன்று வேடம், ‘ஜகதலப்ரதாபன்’ படத்தில் ஐந்து வேடம், காத்தவராயன்’ படத்தில் பத்து வேடம் என ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகர்.

***

அப்பா உலகநாதன் ஒலிபெருக்கி இல்லாமலே, ஒருமைல் தூரம் கேட்கும் அளவுக்குப் பாடக்கூடிய நாடக நடிகர். அவரது வழியில் இவர் எட்டு வைத்தபோது வயது எட்டு. ‘சதி அனுசூயா’, ‘பாதுகா பட்டாபிஷேகம்’ நாடகங்களில் நாயகனாக வந்த சின்னப்பாவுக்கு ஜோடியாகப் பெண் வேடமிட்டு நடித்தவர் எம்.ஜி.ஆர்.

‘அன்பு வளர்க’ என்று ஆட்டோகிராஃபில் கையெழுத்துப் போடும் பழக்கமுள்ள சின்னப்பா, கோபக்கார மனிதராகவே அறியப்பட்டிருக்கிறார். குள்ளமான அவருக்குக் கை மட்டும் நீளமாக வாய்த்திருந்தது. சுருள்பட்டா வீச்சு உள்ளிட்ட சண்டைக் கலைகளில் அவர் பெற்ற பயிற்சியும் தேர்ச்சியும்கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

***

‘வனசுந்தரி’ படப்பிடிப்பு. வி.கே. ராமசாமியும் சி.எஸ். பாண்டியனும் அடித்துக்கொள்வதாகக் காட்சி. எப்படி அடிக்க வேண்டும் என்று பாண்டியனுக்குச் சொல்லிக்கொடுக்கும் சாக்கில், பழைய பகையை மனதில் வைத்து அவர் அடித்த அடியில் சில மணிநேரம் சுயநினைவை இழந்திருக்கிறார் பாண்டியன்.

‘ரத்னகுமார்’ படப்பிடிப்பில் ‘வாலிபப் பருவம்’ என்ற உச்சரிப்பை சின்னப்பா சரியாகச் சொல்லவில்லை என்பது முருகன் டாக்கீஸ் அதிபர் சீதாராமய்யரின் குற்றச்சாட்டு. இன்னொரு டேக் எடுக்கச்சொல்கிறார். எடுத்தார்கள். அதுவும் சரியில்லை என்றார். சின்னப்பா கோபித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார். மறுநாள் வந்து, சீதாராமய்யரையும் ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜியையும் அழைத்து, ‘அந்த வசனத்தை சொல்லிக்காட்டுங்க’ என்று கேட்டிருக்கிறார். அவர்கள் சொல்ல, சின்னப்பா திரும்பச் சொல்ல சுமார் ஐந்து மணிநேரம் அவர்களை ட்ரில் வாங்கியிருக்கிறார். “பட முதலாளியாகிய நீ ஒரு சவுராஷ்ட்ராக்காரன். கேமராமேன் ஒரு வங்காளி. நீங்க எங்களுக்கு தமிழ் சொல்லித்தர்றீங்களாக்கும்’’ என்று கையை ஓங்கியவரின் கவனிப்புக்குத் தயாரிப்பாளர் தப்பிவிட, கேமராமேன் சிக்கி, சிரமப்பட்டிருக்கிறார்.

***

பாடலாசிரியருக்குப் பணம் தராத தயாரிப்பாளரை அடித்த, சின்னப்பா, ஒரு பாடலாசிரியரையும் போட்டுத் தாக்கியிருக்கிறார். ‘கரிச்சட்டி மாதிரி இருந்துக்கிட்டு, இவனெல்லாம் ஒரு பாடகன்னு ஏத்துக்க வேண்டியிருக்கு’ என்று உடுமலை நாராயண கவி சொன்னதைக் கேள்விப்பட்டு, அவர் இருக்கும் இடம் தேடிப்போய், பட்டப்பகலில் நடுத்தெருவில் ஓட ஓட விரட்டி அடித்திருக்கிறார். வலியும் அவமானமும் தாங்காத நாராயண கவி, பாத்ரூமுக்குள் அடைக்கலம் புகுந்து, உயிரைக் காப்பாற்றிக் கொண்டாராம்.

***

சிதம்பரம் குஞ்சிதபாதம் என்றொரு நடிகர். குண்டு கல்யாணத்தைப் போல உருவம் உள்ள அவரது முதுகில் சன்லைட் சோப்புக்கு விளம்பரம் செய்வார்களாம். அவரது கெட்ட நேரம் சின்னப்பாவைப் பற்றித் தப்பாகப் பேசியிருக்கிறார். ஆட்களைத் திரட்டிக்கொண்டு அவரை அடிப்பதற்குக் கிளம்பினார் சின்னப்பா. தகவல் கேள்விப்பட்ட குஞ்சிதபாதம் அடைக்கலம் தேடுவதற்கான ஆட்களின் பட்டியலைப்போட்டார். தயாரிப் பாளர் டி.ஆர். சுந்தரத்தின் காலில்போய் விழுந்தார். ‘வரட்டும் பாத்துக்கறேன்’ என்று துப்பாக்கியைத் தயாராக எடுத்து வைத்து காத்திருக்கிறார் அவர்.

நண்பர்களோடு சுந்தரத்தின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தார் சின்னப்பா. அவரது கையில் சுருள்கத்தி இருந்தது. அதைப் பார்த்துப் பதறிப்போன சுந்தரம், குஞ்சிதபாதத்தை சின்னப்பாவின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார். இருந்தாலும் ரெண்டு சாத்து சாத்தியிருக்கிறார் சின்னப்பா. 

0 comments:

Post a Comment