Saturday, 15 March 2014

நிஜமும் நிழலும்: அம்மா திரையரங்கம் சாத்தியமா?



“ஏழை, நடுத்தர வசதி கொண்டோரின் பொழுது போக்கு தேவையைப் பூர்த்தி செய்திட குறைந்த டிக்கெட் கட்டணத்தில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும்” என்று சென்னை மாநகராட்சியின் 2014-15ஆம் ஆண்டுக்குரிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை திரையுலகின் அனைத்து தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள். முக்கியமாக தயாரிப்பாளர்கள். இன்னொரு பக்கம் அரசுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்போது திரையரங்குகளை நடத்த முன்வர வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று விலைக் கட்டுப்பாட்டைக் கருத்தில்கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றுவரும் முயற்சிகளில் ஒன்றாக இதுவும் அமையுமா? பொழுதுபோக்குத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இதில் இருக்கின்றனவா?

எட்டாக்கனியாக மாறிய டிக்கெட்

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அம்மா திரையரங்கம் பற்றிய வாசகங்களில் ஏழை, நடுத்தர, குறைந்த, கட்டணம் ஆகிய வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்று பிரித்துத் திரையரங்குகளுக்கான டிக்கெட் கட்டணங்களை அரசு நிர்ணயித்திருக்கிறது. உதாரணத்துக்கு சென்னையில் 120 ரூபாய், திருச்சியில் 50 ரூபாய், புதுகோட்டையில் 40 ரூபாய், பெரம்பலூரில் 30 ரூபாய். ஆனால் பல சமயங்களில் அதை மீறி அதிக கட்டணங்களையே திரையரங்குகள் வசூலிக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் திரையரங்கம் சென்று படம் பார்ப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதற்கு மாற்றாக 30 ரூபாய்க்குக் கிடைக்கும் திருட்டு விசிடியை நாடுகிறார்கள். “சினிமா என்பது உயர் வருவாய் பிரிவு மக்கள் மட்டும் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது” என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி தர் கூறுவதன் பின்னணி இதுதான்.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் சிறு முதலீட்டுப் படங்களையும் ஆதரிக்கக்கூடியவர்கள்; எண்ணிக்கையில் அதிகமான இவர்களை நம்பித்தான் சினிமா துறை இந்நாள் வரையிலும் வளர்ந்துவந்திருக்கிறது என்றும் தர் குறிப்பிடுகிறார். “மால்களில் உள்ள தியேட்டர்களும் மல்ட்டிப்ளக்ஸ்களும் இவர்களை நம்பி இல்லை. ஆனால் இவர்கள் வருவார்கள் என்று நம்பித்தான் தமிழகம் முழுவதும் 934 தனித்த மற்றும் வளாகத் திரையரங்குகள், சினிமா திரையிடலை மட்டும் ஒரே தொழிலாகக் கொண்டு இயங்கிவருகின்றன. ஆனால் இந்தத் திரையரங்குகள் லாபத்தில் நடப்பதே இல்லை. இதற்குக் காரணம் அதிக விலைக்கு விற்கப்படும் பிரபல நட்சத்திரங்கள் நடித்த படங்களின் டிக்கெட் கட்டணம்தான். லாபம் வருகிறதோ இல்லையோ, கொடுத்த விலையையாவது எடுத்துவிட வேண்டும் என்று அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணத்துக்கு டிக்கெட் விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் திரையரங்குகள் தள்ளப்படுகின்றன” என்று சொல்லும் தர் இதற்குத் தீர்வு என்ன என்றும் விளக்குகிறார்.

“முன்னணி நட்சத்திரங்களின் சம்பளமும், படத்தின் பட்ஜெட்டும் கட்டுப்பாட்டில் இருந்து, ஒரு படம் எடுக்கப்பட்டு, அது நியாயமான விலைக்கு விற்கப்பட்டால்தான் திரையரங்குகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்க முடியும். ஆனால் அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்மா திரையரங்குகள் அரசின் முயற்சியால் நடத்தப்படும் பட்சத்தில் பெரிய படங்களையும் அங்கே குறைந்த கட்டணத்தில் பார்க்கும் நிலை உருவாகும் என்பதால், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் இதை மனப்பூர்வமாக வரவேற்கிறது. ஆனால் அம்மா திரையரங்குகளிலிருந்து பெரிய படங்கள் தப்பித்துக்கொள்ளாத வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல இலவசக் கழிப்பிடங்களையே கட்டணக் கழிப்பிடங்களாக்கி காசுபார்க்கும் இன்றைய சூழலில், அம்மா திரையரங்குகளில் அதுபோன்ற ஆட்கள் நுழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்கிறார் அவர்.

யார் கண்காணிப்பது?

மலிவு விலைத் திரையரங்குகள் நல்ல யோசனைதான் என்றாலும் டிக்கெட் கட்டணத்தைக் கூட்டி விற்பதைத் தடுத்து நிறுத்துவதுதான் முக்கியம் என்று தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் துணைத்தலைவர் பொன்.தேவராஜன் கருதுகிறார்.

“பெரிய படங்கள் வெளியாகும்போது ரசிகர் மன்றம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடத்துபவர்களை களையெடுக்க அரசும் திரையுலகமும் முன்வர வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் திரையரங்குகள் முறையாக கடைபிடிக்கின்றவனவா என்பதைக் யார் கண்காணிப்பது? இதைச் சரிசெய்ய அரசும் முன்வந்தாலே தற்போது தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் திரையரங்குகள் அம்மா திரையரங்குகளாக இயங்கத் தொடங்கும்” என்று தேவராஜன் கருதுகிறார். ஆனால் இது நடக்காத பட்சத்தில் குறைந்த இருக்கைகளுடன், குறைந்த கட்டணத்தில் வரவிருப்பதாகச் சொல்லப்படும் அம்மா திரையங்குகள் சாமான்ய ரசிகர்களுக்கும், சின்னப் படங்களைத் தயாரிப்பவர்களுக்கும் பெரிய வரமாக அமையும் என்று அதை வரவேற்கிறார்.

சாத்தியமான திரையரங்கம் எது?

அம்மா திரையரங்கம் அமைப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றால், முதல்கட்டமாகச் சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்படும் அம்மா திரையரங்குகளை எத்தகைய வசதிகளுடன் உருவாக்குவது என்பதுதான் அரசுக்கு இருக்கும் தொடக்கக்கட்ட சவால். ஒரு திரையரங்கில் டிஜிட்டல் முறை திரையிடல் கருவிகள் அமைக்க 3 லட்சம் ரூபாய் போதும். சின்னத் திரையரங்கம் என்றால் 200 முதல் 250 பேர்வரை அமரும் அளவுக்காவது இருக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் ஒரு திரையரங்கம் அமைப்பதற்கு கட்டிடம் கட்டவே 3 கோடி ரூபாய் தேவைப்படும். இதில் குளிர்சாதன வசதி செய்யப்படுமா, அல்லது உயரமான கூரையுடன் குளிர்சாதன வசதி இல்லாத திரையங்குகளாக உருவாகுமா என்பதை முடிவு செய்யவேண்டும். ஏசி வசதி என்றால் ஒரு திரையரங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்கிறார்கள். ஏசியுடன் திரையரங்குகள் அமைத்தால், டிக்கெட் கட்டணம் குறைவாக வசூலிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறி. திறந்த வெளித் திரையரங்கமாக அமைக்கலாம் என்றால் அதில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.

இத்தனை சவால்களைத் தாண்டி இதை சாமானிய மக்களுக்கான திரையரங்காகவும் உருவாக்க முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. ஆனால் வெளிச் சந்தையில் குறைந்தது 6 ரூபாய்க்கு விற்கப்படும் இட்லியை ஒரு ரூபாய்க்குக் கொடுக்கும் அம்மா உணவகங்களை வெற்றிகரமாக நடத்த முடியும் என்றால் இதையும் ஏன் நடத்த முடியாது என்பதே பொதுமக்களின் நம்பிக்கை. அப்படி நடந்தால் அது திரையுலகிற்கும் ரசிகர்களாகிய பொதுமக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

0 comments:

Post a Comment