Friday 7 February 2014

‘உ’ உஉஊஊ... - திரைவிமர்சனம்!


திரைப்படத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் தம்பி ராமையா. ஒருநாள் இவர் சினிமா தயாரிப்பாளரான பயில்வான் ரங்கநாதனிடம் கதை சொல்கிறார். அங்கு அவரிடம் கதையின் கருவை மட்டும் சொல்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பயில்வான் ரங்கநாதன், கதையின் விரிவாக்கத்தை தயார் செய்யும்படி சொல்கிறார்.

கதையின் விரிவாக்கத்தை உருவாக்க தனக்கு உதவியாளர்கள் வேண்டும் என்று எண்ணுகிறார் தம்பி ராமையா. இதனால் இவருடன் அறையில் தங்கியிருக்கும் நண்பர்களை உதவியாளராக பணிப்புரிய அழைக்கிறார். அவர்கள் ''உனக்கே ஒன்றும் தெரியாது. உன்னிடம் நாங்கள் பணிபுரிவதா'' என்று இவரை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் கோபம் அடையும் தம்பி ராமையா ஒருநாள் நான் படம் எடுத்து காண்பிக்கிறேன் என்று போதையில் அவர்களிடம் சவால் விட்டுச் செல்கிறார்.

தனியாக செல்லும் இவர் போதையில் வழியிலே விழுந்து விடுகிறார். அந்த வழியாக வரும் போலீசார் சந்தேகத்தின் பெயரில் இவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அங்கு தம்பி ராமையா, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்களை சந்திக்கிறார். இவர்களை தனக்கு உதவியாளர்களை சேரும்படி அழைக்கிறார். இவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் பணிபுரிய சம்மதிக்கிறார்கள்.

நான்கு இளைஞர்கள் உதவியோடு தம்பி ராமையா கதையின் விரிவாக்கத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் இவர் சவால் விட்டு சென்ற இவரது நண்பர்கள், இவர் இயக்குனர் ஆகிவிட கூடாது என்று தம்பி ராமையா உருவாக்கும் படத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் தடைகளை தாண்டி படத்தை இயக்கினாரா? அந்தப்படம் வெற்றியடைந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தில் தம்பி ராமையாவை வைத்து கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அதை முழுமையாக புரிந்து கொண்ட தம்பி ராமையா படத்தை தன் நடிப்பு திறமையால் கதையை அழகாக எடுத்துசென்றிருக்கிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. இவர் மட்டும் தனித்து தெரிகிறார். தம்பி ராமையாவும் நான்கு இளைஞர்களும் செய்யும் அரட்டைகள் அருமை.

உதவியாளர்களாக வரும் நான்கு இளைஞர்கள் தங்களால் முடிந்தவரை சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் அவர்கள் ரசிக்கும்படி இருந்தாலும் அடுத்த காட்சியிலே வெறுப்பை வரவழைக்கிறார்கள். நாயகன், நாயகி என இவர்கள் எடுக்கும் படத்திலே வருவதுபோல் அமைக்கப்பட்டுள்ள காட்சி பார்ப்பவர்களுக்கு ரசிக்கும் படியாக இல்லை.

அபிஜித் ராமசாமி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்தான். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை ரசிக்கலாம். இளம் வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஆஷிக் நான்கு இளைஞர்களை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை சுமந்து செல்லும் பெரிய பொறுப்பை தம்பி ராமையாவை மேல் சுமத்தியிருக்கிறார். இதில் இவர் வெற்றி கண்டிருக்கிறாரா என்பது கேள்வி குறி.

0 comments:

Post a Comment