Friday, 7 February 2014

மீண்டும் அஜித்தின் புதிய இளமைத் தோற்றம்!

1980-90களில் கமலஹாசன், ரஜினிகாந்தின் ஆதிக்கம் தமிழ்த் திரையுலகில் மேலோங்கியிருந்தபோதே நவரச நாயகன் எனப்படும் நடிகர் கார்த்திக் தன்னுடைய நடிப்புத் திறமையினால் தனி முத்திரை பதித்தார். 100 படங்களுக்கும் மேலாக கதாநாயக அந்தஸ்தில் நடித்துள்ள இவர் தற்போது வில்லன் வேடங்களில் நடிக்க முன்வந்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிக்கும் 'அநேகன்' திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்துவருகிறார். இப்போது ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்திலும் வில்லனாக நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்தும், கார்த்திக்கும் முன்பே இரு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ஹீரோவாக நடித்த 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் அஜித் கௌரவ வேடத்தில் தோன்றியுள்ளார். அதேபோல் அஜித் நடித்த 'ஆனந்தப் பூங்காற்றே' படத்தில் நடிகர் கார்த்திக் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கு வந்தன.

'வீரம்' படத்தின் வெற்றியை அடுத்து அஜித், கெளதம் மேனனின் படத்தில் இணைந்துள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும் விதமாகவே அஜித் தானே முன்வந்து இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் வெகு நேர்த்தியாகவும், நவீன உத்திகளுடனும் தயாரிக்கப்பட இருப்பதால் ஒப்பனைக் கலைஞர்களிலிருந்து நடனக் கலைஞர்கள் வரை ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர். அஜித்தும் சமீபத்திய கருப்பு, வெள்ளை தலைமுடியுடன் கூடிய தோற்றத்தை மாற்றி இந்தப் படத்தில் இளமையாகக் காட்சியளிக்க உள்ளார். இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையுமே அமெரிக்காவில் நடத்துவதற்கு மேனன் திட்டமிட்டுள்ளார். மேலும் அஜித்தின் படங்களில் இதுவே மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது. 

0 comments:

Post a Comment