Thursday, 20 March 2014

ஆரம்பிக்கும் முன்பே விலைபோன ஆர்யா படம் !



ஆர்யா தனி ஹீரோவா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன். அதிலும் சந்தானத்தின் பங்கு சரிபாதி. ஆர்யாவுக்கான வியாபார எல்லை சிவ கார்த்திகேயன் அளவுக்கும் இல்லை. அப்படியிருக்க ஆர்யாவின் படம் ஒன்றை ஆரம்பிக்கும் முன்பே விலை பேசியுள்ளதாம் ஒரு நிறுவனம்.



புறம்போக்கு, மீகாமன் படங்களில் நடித்துவரும் ஆர்யா விரைவில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல், ஆரம்பம் என்று விஷ்ணுவர்தனின் அதிக படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆர்யா. விஷ்ணுவின் புதிய படத்தில் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கின்றனர்.


படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நடிகர்கள் தேர்வு நடைபெறவில்லை. தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில் விஷ்ணுவர்தனின் புதிய படநிறுவனமான விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதே அறியாத நிலையில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் யுடிவியாக இருக்கும் என்பது கோடம்பாக்க பேச்சு.


புறம்போக்கு படத்தை அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் இணைந்து யுடிவி தயாரித்து வருகிறது. அதேபோல் அஞ்சான் படத்தை அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமியுடனும், நான் சிகப்பு மனிதனை விஷாலுடனும் இணைந்து யுடிவி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment