Tuesday 18 March 2014

இவருதேன் அடுத்த சூப்பர் ஸ்டாராம்..?

ஒரு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டுகிறார்கள் என்றால் அதனை ஒரு மேடை நாகரிகம் என்பார்கள். அது கொஞ்சம் அளவு கடந்து போனால், ஜால்ரா என்பார்கள். அதுவே உதாரணத்துடன் சொன்னால் உண்மை என்பார்கள்.

இன்றைக்கு நடந்த ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார், மற்றும் செயலாளர் டி.சிவா இருவருமே சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சிவாவே போதுமே சார் என்று சைகையால் கெஞ்சும் அளவுக்கு இவர்களது பேச்சு இருந்தது.

பாடலாசிரியர் அறிவுமதி பேசும்போது, “நான் குவைத்திற்கு சென்றிருக்கும்போது அங்கே ஒரு லேப்டாப்பில் தமிழ்ப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் படத்தை நிறுத்துங்கள் என்றேன். ஆனால் குழந்தைகள் அனைவரும் அதனை எதிர்த்தார்கள். அதன் உளவியல் என்ன தெரியுமா..? இன்றைய தினத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்பது எனக்குப் புரிந்தது..” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, “சொல்லப் போறது மேடையா இருந்தாலும் மேடைக்காக சொல்லலை. அவருடைய தொடர்ச்சியான 5 படங்கள். அவை கொடுத்த வெற்றி.. அவர் தனது பெர்மார்மென்ஸை வளர்த்துக்கிட்டிருக்குற வேகம். அவரைச் சுற்றியிருக்கிற நண்பர்கள்.. சின்னக் குழந்தை முதல் பெரியவங்கவரைக்கும் அவருக்குக் கிடைச்சிருக்குற ஆடியன்ஸ்.. இதையெல்லாம் வைச்சு சொல்றேன்.. இன்றைய இளையதலைமுறையின் சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்..” என்றார்.

கேயார் பேசும்போது, “இன்னிக்கு ஒரு நடிகரோட கால்ஷீட்டுக்கு எத்தனை கோடி வேண்ணாலும் தரேன்னு சொல்லிட்டு தயாரிப்பாளர்கள் ஓடி வர்றாங்கன்னா அது சிவகார்த்திகேயனுக்குத்தான்.. இவரோட அடுத்தடுத்த படங்கள் தொடர்ச்சியாக சூப்பர்ஹிட்டா ஓடி கோடிகள்ல லாபம் சம்பாதிச்சுக் கொடுத்திருப்பதை பார்த்தால் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தானோன்னு சொல்லத் தோணுது. முன்னாடில்லாம் எம்.ஜி.ஆர். படங்களுக்குத்தான் இப்படியொரு பேச்சு விநியோகஸ்தர்கள், தியேட்டர்கார்ர்கள் மத்தில இருக்கும். இன்னிக்கு சிவகார்த்திகேயன் படமா.. என்ன ஏதுன்னு கேக்காமலேயே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ரெடியா இருக்காங்க. அந்த அளவுக்கு இவரோட வளர்ச்சி இருக்கு..” என்றார்.

இப்படி தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் ரெண்டு பேருமே ஏற்றிவிட்டுப் போனார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் காசு விஷயத்தில் ரொம்ப கெட்டியாக இருக்கிறார் என்று திரையுலகில் பலமான பேச்சு.. சம்பளமும் வாங்கிக் கொண்டு லாபத்திலும் பங்கு கேட்கும்விதமாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் என்று முணுமுணுக்கிறார்கள். வருவதை வாங்கிக் கொண்டு நடிக்கும் சாதாரண நடிகரல்ல அவர் என்பது அவரது பேச்சிலும் நன்றாகவே தெரிந்தது.

சிவகார்த்திகேயன் பேசும்போது, “என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம். இந்தப் படத்துக்காக பெரிய பட்ஜெட்ல செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் கண்டிப்பா பெருசாத்தான் இருக்கும். தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும். நான் ஆர்ட்டிஸ்டா..? ஸ்டாரா..? ஹீரோவா..? அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும்போது என்னைப் பார்த்தால் ரசிகர்கள் சந்தோஷப்படணும். இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன். இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியமும் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு… இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும்போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்…” என்றார்.

தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களின்போதும், பெரிய ஹீரோக்களின் பட ரிலீஸின்போதும் தியேட்டர் கட்டணங்கள் அளவு கடந்து உயர்த்தப்பட்டு ரசிகர்களின் பர்ஸ் காலியாகிறது என்கிற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல்தான் நமது ஹீரோக்கள் கோடிகளை வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதே மனப்பான்மையோடு சிவகார்த்திகேயனும் இருப்பது இவரது பேச்சிலேயே தெரிகிறது..

“தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.” என்பதெல்லாம் “எவ்வளவுன்னாலும் கொடுத்துப் பாருங்க.. படம் நல்லாயிருக்கும்”னு தனது வெள்ளந்தியான வார்த்தைகளால் ரசிகர்களின் பாக்கெட்டில் உரிமையோடு கையைவிட்டு பணத்தைச் சுடுகிறார் என்றுதான் தோன்றுகிறது..!

கேயார் தெரிவித்த மேடை நாகரிக வார்த்தைகளுக்கு ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரென்று பார்த்தால் மனிதர் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், “இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்…” என்றும் சொல்லியிருக்கிறார்.

வருத்தமாகத்தான் இருக்கிறது.. பணத்தினை மட்டுமே மையமாக வைத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் சூட்டப்படவில்லை என்பது இங்கே யாருக்கு புரியப் போகிறது..!?

0 comments:

Post a Comment