Saturday, 1 February 2014

செயற்கை விழித்திரை பொருத்தி பார்வை! அரிய சாதனை!

உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித்திரை பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.இதன் மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தது.

எனவே இதே தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கண்பார்வையற்ற இரண்டு நோயாளிகளுக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி அவர்கள் முன்னால் இருப்பவர்கள், பொருட்கள் மற்றும் வெளிச்சம் போன்றவற்றை அவர்கள் அறிந்து கொள்ளுமாறு உதவி புரிந்து சாதனைப் புரிந்துள்ளனர்.

மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் விழித்திரை நோய் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்.தங்களின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெயசுந்தரா நோயாளிகளின் முன்னேற்றமும் தங்களுக்குத் திருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சிகிச்சை மூலம் அவர்கள் தங்கள் வீட்டில் சுதந்திரமாக நடமாடவும், மற்றவர்களைப் போல் பிற விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சியடையவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்கஸ் II ரெடினல் புரோஸ்தசிஸ் என்று அழைக்கப்படும் இந்த செயற்கை விழித்திரையானது சென்ற வருடம்தான் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றது. நோயாளி அறுவை சிகிச்சையிலிருந்து பூரணமாகக் குணமடைந்த பின்னரே இந்த விழித்திரையின் செயல்பாடு தொடங்கும். அதன்பின்னரே சுமார் ஒன்றிலிருந்து மூன்று மாத காலத்திற்கு புதிய பார்வைத் திறனுக்கான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக மருத்துவத்துறை நிர்வாகம் தெரிவிக்கின்றது. 

0 comments:

Post a Comment