Saturday, 1 February 2014

ரம்மி - ஆட்டம் நல்லா ஆடியிருக்கலாம்... - விமர்சனம்!

 
காதல் செய்தால் ஆளையே வெட்டும் ஒரு கட்டுக்கோப்பான கிராமத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முளைக்கும் காதலை மையமாக வைத்துதான் ரம்மி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் படிக்க இனிகோ பிரபாகரும், விஜய் சேதுபதியும் வருகின்றனர். பின்னர் அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யாவை விஜய் சேதுபதியும், காயத்ரியை இனிகோவும் காதலிக்கிறார்கள். அங்கு படிக்கும் சூரியும் இவர்களுக்கு நண்பர்களாகிறார்.

ஒருநாள், காதலித்தாகக் கூறி ஒருவனை நடுரோட்டில் அந்த ஊர்க்காரர்கள் வெட்டிச் சாய்ப்பதை பார்க்கும் இனிகோவும், விஜய் சேதுபதியும் பதறிப்போகிறார்கள். இனிகோ காதலிக்கும் காயத்ரி அந்த ஊர் தலைவரின் தம்பி மகள் என்பதால் வயிற்றில் மேலும் புளியை கரைக்கிறது. இருந்தாலும் அவர்கள் ஊர்க்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் இனிகோ தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி வருகிறார். வந்ததும் விஜய் சேதுபதியை காணவில்லை. அப்போது அங்கு ஒரு லெட்டர் இவரது கண்ணில் படுகிறது. அதில் விஜய்சேதுபதி தான் காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகவும், ‘நீயும் தப்பித்துக்கொள்’ எனவும் எழுதி வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி அழைத்துக் கொண்டு சென்றவர் ஊர் தலைவரின் மகள் என்பது அப்போதுதான் இனிகோவிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த ஊர்க்காரர்கள் விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டு ஐஸ்வர்யாவை இழுத்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் இனிகோ பதற்றத்தில் இருக்கிறார்.

இறுதியில் தனது காதலனை கொலை செய்த ஊர்க்காரர்களை ஐஸ்வர்யா பழிவாங்கினாரா? இனிகோ தனது காதலியுடன் கைகோர்த்தாரா? என்பதே மீதிக்கதை.

நிறைய படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்த இனிகோ பிரபாகருக்கு இந்த படத்தில் ஹீரோ அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை மையப்படுத்தியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனால், தியேட்டருக்கு விஜய் சேதுபதியை எதிர்பார்த்து சென்றதால் இவரை ரசிக்க முடியவில்லை. மற்றபடி, காதல், காமெடி, ஆக்க்ஷன் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் நட்பின் அடிப்படையிலேயே நடிக்க ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார். ஆனால், இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருக்கு இல்லை என்பது வருத்தமே. ஹீரோயின் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யும் ஒரு மொக்கையான கதாபாத்திரம். இதை இவர் ஏற்று நடிக்காமலேயே இருந்திருக்கலாம். ரசிகர்களை ரொம்பவும் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாயகி காயத்ரி முன்பிருந்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறார். பார்க்கவே பாவம்போல் இருக்கிறார். இவரை வைத்து டூயட் எல்லாம் ஆடவைச்சு நம்மை பயமுறுத்துகிறார்கள். துணை நடிகையாக நடித்துவந்த ஐஸ்வர்யா இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக வருகிறார். கதையை தாங்கி நிற்கிற வலுவான கதாபாத்திரம் இவருடையது. ஆனால், இவருக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கொடுக்காமல், கடைசியில் விஸ்வரூபம் எடுப்பதுபோன்ற காட்சியை வைத்திருப்பதால் ரசிக்க முடியவில்லை.

சூரிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கல்லூரி காட்சிகளில் நன்றாக காமெடி பண்ணுகிறார். இடைவேளைக்கு பிறகு நல்ல குணசித்திர நடிகராகவும் மாறிவிடுகிறார். ‘கும்கி’யில் லட்சுமிமேனனின் அப்பாவாக நடித்திருப்பவர் இந்த படத்தில் ஊர் பெரியவராக வருகிறார். இவரைவிட இவருக்கு அடியாளாக வருபவர் மிரட்டுகிறார். அவருடைய வில்லத்தனமான கண்கள் பயமுறுத்துகின்றன.

இயக்குனர் ஒரு காதல் கதையை ஏன் திரில்லாக கொடுக்க நினைத்தார்? என்று அனைவர் மத்தியிலும் கேள்வி எழுகிறது. முக்கிய கதாபாத்திரங்களின் தன்மையை ரசிகர்களுக்கு சொல்லாமல் மறைத்து சஸ்பென்ஸ் வைப்பதாக கூறி, அதை காட்சிப்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டார். ஆனால், விஜய் சேதுபதி படம் என நம்ப வைத்து ரசிகர்களை வரவழைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பருத்திவீரனில் ‘முத்தழகு’ கதாபாத்திரம்போல் காட்டவேண்டிய ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தை சொதப்பியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் ஏதும் சம்பந்தம் இல்லாததுபோல் இருக்கிறது.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ‘கூட மேல கூட வச்சு’ பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு படத்தில் சஸ்பென்ஸை கூட்ட உதவியிருக்கிறது.

0 comments:

Post a Comment