Wednesday, 26 February 2014

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு? - ரஜினி ரசிகர்கள் ஆலோசனையா?

மக்களவைத் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ரஜினி ரசிகர்கள் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சேலத்திலும் கூடி ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் மறுத்துள்ளது.

ரஜினி வாய்ஸ்

தேர்தலுக்குத் தேர்தல் ரஜினி வாய்ஸ் குறித்து அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பது வழக்கம்.

1996, 1998, 2004- தேர்தல்களில் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு என ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு, ரசிகர்கள் தங்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று கூறிவிட்டார்.

இதனால் ரசிகர்களை வளைப்பதில் திமுக, அதிமுக இரண்டுமே தீவிரமாக வேலை பார்ப்பது வழக்கும். குறிப்பாக திமுக.

பாஜக கோரிக்கை

கடந்த சட்டமன்ற தேர்தலில் நல்லாட்சி அமைக்கும் கட்சிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி எந்த கட்சியை ஆதரிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடியுடன் நெருக்கமான நட்பு கொண்ட அவர், பாஜகவுக்கு ஆதரவு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

பாஜகவினரும் ரஜினியின் ஆதரவை மேடை தோறும் கோரி வருகின்றனர்.

சென்னையில்

இந்நிலையில்தான் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், ரஜினி ரசிகர் மன்ற பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவையினர் ஆகியோர் சென்னையில் கூடி தேர்தலில் ஆதரவு யாருக்கு என ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

கூட்டத்தில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்து சேலம்

மேலும் சென்னையை அடுத்து சேலத்தில் கூட்டம் நடத்தி ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தீர்மானம் நிறவேற்றி ரஜினியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

மறுப்பு

ஆனால் இந்த தகவல்களை அடியோடு மறுத்துள்ளனர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற சென்னை நிர்வாகிகள். இதுகுறித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸிடம் கேட்டபோது, "இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை. தேர்தல் குறித்து எந்த முடிவையும் தலைவர்தான் எடுப்பார். ரசிகர்கள் எடுக்க முடியாது. இப்படியொரு கூட்டம் எங்கே நடந்ததென்று எங்கள் யாருக்கும்தெரியாது. சேலம் மாவட்ட நிர்வாகிகளைக் கேட்டபோது, அப்படியொரு நிகழ்ச்சியை நடத்தும் திட்டம் இல்லை என்றுதான் சொன்னார்கள். யாராவது தனிப்பட்ட முறையில் பேசினார்களா என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வமான நிர்வாகிகள் யாருக்கும் இதுபற்றிய தகவலே இல்லை," என்றார்.

0 comments:

Post a Comment