Monday, 17 March 2014

நேத்து வந்த சிவகார்த்திகேயன் பண்ற அலட்டலைப் பாத்தீங்களா..?´ : திட்டித் தீர்த்த பிரபலங்கள்.!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற மெகா வெற்றியின் மூலம் சர்ரென்று வெற்றிச் சிகரத்தில் ஏறிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு முதல் கரும்புள்ளி விழுந்துள்ளது, மான் கராத்தே இசை வௌியீட்டு நிகழ்ச்சி மூலம். சத்யம் சினிமாஸில், சற்றும் முறையற்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் பிரபலங்கள், செய்தியாளர்கள் அனைவருமே பவுன்சர்கள் எனப்படும் குண்டர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.


´போன வாரம் இதே அரங்கத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் நிகழ்ச்சி நடந்தது. ஒரு முதல்வரின் நிகழ்ச்சிக்குரிய அத்தனை பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும், யாரும் சிறிதளவுகூட முகம் சுளிக்காதபடி அத்தனை சிறப்பாக நடந்தது அந்த நிகழ்ச்சி.


ஆனா நேத்து வந்த சிவகார்த்திகேயன் பண்ற அலட்டலைப் பாத்தீங்களா?´ என பலரும் வெளிப்படையாகத் திட்டித் தீர்த்தனர் நேற்றைய நிகழ்ச்சியில்.


பொதுவாக இசை வெளியீட்டு விழாக்களில் திரையுலகினர் மட்டும்தான் அதிகமாகப் பங்கேற்பார்கள். இரசிகர்களுக்கு அனுமதி இல்லை.


ஆனால் சிவகார்த்திகேயனோ மாஸ் காட்ட வேண்டும் என நினைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்களை வேறு வரவழைத்திருந்தார். இதனால் விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை வாசலில் மறித்து கெடுபிடி செய்ய, சிலர் கோபத்துடன் திரும்பிச் சென்றனர்.


 சினிமா செய்தியாளர்கள் பலரும் அரங்கத்துக்கு வெளியே நின்றுவிட்டுத் திரும்பினர். தொலைக்காட்சி கேமராமேன்களும் படாதபாடுபட்டனர். அவர்களை வசதியான இடத்தில் கேமராவை வைத்து ஷூட் பண்ணக் கூட விடவில்லை பவுன்சர்கள்.


இத்தனைக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். எளிமையானவர், பந்தா இல்லாதவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர். ஆனால் மும்பையின் பவுன்சர் கலாச்சாரத்தை சத்யம் தியேட்டர் வரை அழைத்து வந்திருப்பது அவர்தான் என்றார்கள் நிகழ்ச்சிக்கு வந்த திரையுலகப் புள்ளிகள்.


நம்ம வீட்டுப் பையன் என்ற இமேஜ் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. கவனத்தில் கொண்டால் சரி! 

0 comments:

Post a Comment